மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: 50 லட்சமாவது பயனாளிக்கு முதல்வர் ஸ்டாலின் மருந்துப் பெட்டகம் வழங்கினார்

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், சித்தாலப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகம் வழங்கி, அவருக்கு அளிக்கப்படும் இயன்முறை சிகிச்சையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (23.2.2022) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாலப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகம் வழங்கி, அவருக்கு அளிக்கப்படும் இயன்முறை சிகிச்சையை பார்வையிட்டார். மேலும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு அவர்கள் இல்லம் தேடிச் சென்று மருந்து பெட்டகங்களை வழங்கினார்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி கிராமத்தில் 5.8.2021 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 258 கோடி ரூபாய் செலவில் “மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்” என்ற மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்து, முதல் பயனாளியின் இல்லத்திற்கு நேரில் சென்று மருந்துப் பெட்டகத்தை வழங்கினார்.

தொற்றா நோய்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் விதமாக “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம் வடிவமைக்கப்பட்டு, களப்பணியாளர்கள் மூலம் பயனாளிகளின் இல்லங்களிலேயே மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. இவற்றுள் 45 வயதும் அதற்கு மேற்பட்டும் உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கு பரிந்துரைத்தல், குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல், பெண்களை கருப்பைவாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிவதற்காக ஆய்வுக்கு பரிந்துரைத்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதார சேவைகளையும் வழங்கி கண்காணிக்க இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

“மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம் முதற்கட்டமாக 50 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, இன்று கிராமப் பகுதிகள் தொடங்கி மாநகராட்சிகள் வரையுள்ள அனைத்து பகுதிவாழ் மக்களும் பயன்பெறும் வகையில், பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள், இயன்முறை மருத்துவர்கள், நோய் ஆதரவுச் செவிலியர் ஆகிய களப்பணியாளர்கள் மூலம் சேவைகள் வழங்கப்படுகின்றன. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் ஒவ்வொரு பயனாளியும் மக்கள் நலப் பதிவில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுவது இத்திட்டத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.

“மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் கீழ் கள அளவில் 10,969 பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள் (Women Health Volunteers), 385 இயன்முறை மருத்துவர்கள் (Physiotherapists), 385 நோய் ஆதரவுச் செவிலியர் (Pallative Nurses), 4848 இடைநிலை சுகாதாரச் சேவையாளர்கள் (Mid Level Health Provider) ஆகியோர் சேவைகளை வழங்குகின்றனர். மேலும், அனைத்து அரசு மருத்துவ மையங்களில் பணிபுரியும் 2432 ‘மக்களைத் தேடி மருத்துவ செவிலியர்கள்’ தொற்றா நோய் சேவைகளை வழங்குவதோடு, களஅளவில் கண்டறியப்பட்டு பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கு தொற்றா நோய்களுக்கான தொடர் சேவைகளை வழங்குகின்றனர்.

108 அவசரகால வாகனங்கள் சேவை

பொதுமக்களின் இன்னுயிரை காக்கும் ‘108’ அவசரகால ஊர்தி சேவை திட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 2008-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.‘108’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு கட்டணமில்லா இலவச தொலைபேசி மூலம் இச்சேவையை பொதுமக்கள் பெற்று பயனடைகின்றனர். 1303 எண்ணிக்கையிலான 108 அவசர கால ஊர்திகள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இச்சேவைகள் மேலும் துரிதமாக கிடைக்கும் வகையில், காலதாமதத்தை குறைத்திட புதிதாக 188 அவசரகால வாகனங்களின் சேவையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 4 வாகனங்கள் மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் ஊட்டி, வால்பாறை, அரசூர் (பொள்ளாச்சி) மற்றும் மோட்டம்பட்டி (கள்ளக்குறிச்சி) ஆகிய மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும்.

தற்போது கூடுதலாக, 188 அவசரகால வாகனங்கள், இச்சேவையில் இணைக்கப்படுவதன் மூலம், அதிக அளவில் பொதுமக்கள் பயனடைவதுடன், சேவைக்காக காத்திருக்கும் நேரமும், மருத்துவமனைக்கு சென்றடையும் கால அளவும் குறையும்.

மக்களை தேடி மருத்துவம், “இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48” திட்டங்களின் பயனாளிகளுடன் முதல்வர் கலந்துரையாடினார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தினந்தோறும் சுய டாயலிசிஸ் சிகிச்சை செய்து கொள்வதற்கான திரவப்பைகளை பெற்றுவரும் சிறுநீரக செயல்பாடு இழந்த கடலூர் மாவட்டம், நங்குடி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் பவினுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். மேலும், விபத்தினால் கால்களை இழந்த செல்வி சங்கீதா, முகமது ஷேக் அப்துல்லா ஆகியோருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நவீன செயற்கை கால்களை முதல்வர் வழங்கினார்.

சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் வகையில் “இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48” திட்டம் 18.12.2021 அன்று முதல்வரால் தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் 18.12.2021 முதல் இதுவரை தமிழக சாலைகளில் வாகன விபத்துக்களில் பாதிப்படைந்தவர்களில் 18,730 பயனாளிகள் அரசு மருத்துவமனைகளிலும், 3,032 பயனாளிகள் தனியார் மருத்துவமனைகளிலும் என மொத்தம் 21,762 பயனாளிகள் அவசரகால ஊர்தி சேவை திட்டத்தின் மூலம் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு அவர்களின் இன்னுயிர் காக்கப்பட்டு பயனடைந்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48” திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடினார். அப்போது கோவையில் இரண்டு சக்கர வாகன விபத்தில் சிக்கி படுகாயமுற்று பல மணிநேரம் அதிதீவிர அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைந்த மோகன்குமார் என்ற கல்லூரி மாணவனிடம் சிகிச்சை விவரங்கள் குறித்து அக்கறையுடன் கேட்டறிந்தார்.

“இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48” திட்டத்தின் மூலமாக, இம்மருத்துவ உதவிகளை வழங்கியமைக்காக முதல்வருக்கு அம்மாணவன் நன்றி தெரிவித்துக் கொண்டார். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வது எங்களது கடமை என்று முதல்வர் அப்போது தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். அரவிந்த் ரமேஷ், எஸ்.ஆர். ராஜா, இ. கருணாநிதி, எஸ்.எஸ். பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புப் பணி அலுவலர் பி. செந்தில் குமார், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் டாக்டர் தாரேஸ் அகமது, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் டாக்டர் எஸ். உமா,செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர. ராகுல்நாத், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்