சென்னை: கடந்த 2011-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற இடங்களை விட, 2022 தேர்தலில் 0.7 சதவீத இடங்களை மட்டுமே அதிகமாக பெற்ற பாஜக, மூன்றாவது பெரிய கட்சி என்று கூறுவதற்கு எந்த தகுதியும் கிடையாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது. கடந்த மக்களவை, சட்டமன்றம், ஊராக உள்ளாட்சித் தேர்தல்களில் எத்தகைய பெருவெற்றியை தமிழக மக்கள் வழங்கினார்களோ, அதைவிட கூடுதலாக அமோக ஆதரவோடு வெற்றியை அளித்திருக்கிறார்கள். இதன்மூலம், வெற்றி மேல் வெற்றியை தமிழக மக்கள் வழங்கியதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த வெற்றிக்கு கடுமையாக உழைத்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வருகிற மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சிக்கு நற்சான்றுகள் வழங்குகிற வகையில் இந்த வெற்றி அமைந்திருக்கிறது. தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற பணி முழுமையான வெற்றி பெற வேண்டுமானால், உள்ளாட்சி அமைப்புகளில் அமரர் ராஜிவ்காந்தி கண்ட கனவின்படி நல்லாட்சி அமைவது அவசியமாகும். அந்த வகையில் மாநில அரசின் திட்டங்களை நிறைவேற்றி முழுமையான பயன் மக்களைச் சென்றடைகிற வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் இணக்கமான சூழல் உருவாகி இருக்கிறது. இதன்மூலம், தமிழகம் வரலாறு காணாத வகையில் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பீடுநடை போடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
கடந்த மக்களவைக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி , 'தமிழகத்தில் பாஜக நுழைய முடியாது' என்று அறுதியிட்டுக் கூறியதை தமிழக மக்கள் உறுதியிட்டு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். பாஜகவை தமிழக மக்கள் மீண்டும் நிராகரித்து புறக்கணித்திருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்களைக் கடுமையாகப் பாதிக்கிற நீட் தேர்வை ஆதரிக்கிற ஒரே கட்சியான பாஜகவுக்கு தமிழக வாக்காளர்கள் உரிய பாடத்தைப் புகட்டியிருக்கிறார்கள்.
நடைபெற்று வருகிற அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருகிற பாஜக, தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக வெற்றி பெற்றிருக்கிறது என்று அடிப்படை ஆதாரமற்ற கருத்தை அண்ணாமலை கூறியிருக்கிறார். சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் போட்டியிட்டு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக 16 இடங்களில் போட்டியிட்டு 13 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைவிட பெரிய கட்சி என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்கமுடியாத வாதமாகும்.
மேலும், 2011-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு பெற்ற இடங்களை விட தற்போது 2022 தேர்தலில் 0.7 சதவீத இடங்களை மட்டுமே அதிகமாக பெற்ற பாஜக, மூன்றாவது பெரிய கட்சி என்று கூறுவதற்கு எந்த தகுதியும் கிடையாது. அதுமட்டுமல்லாமல், நடைபெற்ற தேர்தலில் பத்து மாவட்டங்களில் வெற்றிக் கணக்கையே தொடங்காத பாஜக, காங்கிரஸ் கட்சியோடு ஒப்பிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால், 2011-ல் தனித்து போட்டியிட்ட போது 2.07 சதவீத இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சி, தற்போது 2022 மாநகராட்சித் தேர்தலில் 59.34 சதவீத இடங்களையும், நகராட்சித் தேர்தலில் 4.4 சதவீத இடங்களிலிருந்து தற்போது, 38.32 சதவீத இடங்களையும் கூடுதலாக பெற்று மகத்தான வெற்றியை ஈட்டியிருக்கிறது. எனவே, காங்கிரஸ் கட்சியோடு பாஜகவை ஒப்பிடுவதை இனியாவது அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிகிற பாஜக எதிர்ப்புகளை எந்த காலத்திலும் அவர்களால் எதிர்கொள்ள முடியாது. ஏனெனில், தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாக பாஜக செயல்பட்டு வருவதால் எதிர்காலமே இல்லாத கட்சியாக பாஜக விளங்கி வருகிறது. இதனால்தான் இக்கட்சியோடு கூட்டணி வைக்க அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியும் தயாராக இல்லை.
தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் படுதோல்வியை அடைந்திருக்கிறார்கள். குறிப்பாக, அதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்ட கொங்கு மண்டலமே படுதோல்வியைக் கண்டிருக்கிறது. இது ஒரு மாயை என்பதை தேர்தல் நிருபித்திருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு பேராதரவு அளித்த வாக்காளர்கள், அதிமுக, பாஜகவை நிராகரித்ததைப் போல பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்திருக்கிறார்கள். தவறான பரப்புரை மூலம் குறிப்பாக, இளைஞர்களை தவறாக வழிநடத்திய கட்சிகள் படுதோல்வி அடைந்திருப்பது மக்கள் நலன் சார்ந்த ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கிற சூழல் இன்றைக்கு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. இனி வரும் காலங்களில் தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்கிற மகத்தான பணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் மக்கள் வழங்குவார்கள் என்பது இந்தத் தேர்தல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது". இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago