திருப்பத்தூர்: 4 நகராட்சிகள், 3 பேரூராட்சிகளில் திமுக அமோக வெற்றி

By ந.சரவணன்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 3 பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் என 4 நகராட்சிகள், ஆலங்காயம், உதயேந்திரம், நாட்றாம்பள்ளி என 3 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. 171 வார்டுகளுக்கு 798 பேர் போட்டியிட்டனர். 3 லட்சத்து 15 ஆயிரத்து 201 வாக்காளர்களில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 156 பேர் வாக்களித்தனர். இதில், திருப்பத்தூர் நகராட்சியில் 72 சதவீதமும், ஜோலார்பேட்டையில் 77 சதவீதமும், வாணியம்பாடியில் 66 சதவீதமும், ஆம்பூரில் 65 சதவீதமும், ஆலங்காயம் பேரூராட்சியில் 65 சதவீதமும், உதயேந்திரம் பேரூராட்சியில் 78 சதவீதமும், நாட்றாம்பள்ளி பேரூராட்சியில் 85 சதவீதம் என மொத்தமாக 69 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதைதொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் வாணியம்பாடி ஜெயின் மகளிர் கல்லூரியில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் விறுவிறுப்பாக நடந்த வாக்கு எண்ணிக்கை நேரம் செல்ல, செல்ல மந்தமானது. 4 நகராட்சிகளில் முடிவுகள் அறிவிப்பதில் நீண்ட இழுப்பறி நீடித்தது. பேரரூாட்சிகளில் முடிவுகள் மதியம் 1 மணிக்கு முன்பாக வெளியிடப்பட்டன. ஆனால், 36 வார்டுகளை கொண்ட நகராட்சிகளில் முடிவுகள் மாலை 3.30 மணியை கடந்தும் முழு முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இதைதொடர்ந்து, மாலை 4 மணியளவில் திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை நகராட்சிகளின் முடிவுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. அதன்படி, திருப்பத்தூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 36 வார்டுகளில் திமுக 22 வார்டுகளையும், அதிமுக 5 வார்டுகளையும், சுயேச்சை வேட்பாளர்கள் 5 வார்டுகளையும், காங்கிரஸ், மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளனர். 22 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளதால் திருப்பத்தூர் நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

அதேபோல, ஜோலார்பேட்டை நகராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் திமுக 16 வார்டுகளிலும், அதிமுக 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. 16 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளதால் ஜோலார்பேட்டை நகராட்சியையும் திமுக கைப்பற்றியுள்ளது.

மேலும், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் நகராட்சியில் மொத்தம் உள்ள வார்டுகளில் திமுக கூட்டணியை அதிக இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளதால் அந்த 2 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றும் என தெரிகிறது.

ஆலங்காயம், உதயேந்திரம், நாட்றாம்பள்ளி ஆகிய 3 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 3 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி அதிகப்படியான இடங்களைப் பிடித்து நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து, திமுகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE