திருநெல்வேலி மாநகராட்சியில் திமுக 16 வார்டுகளில் வெற்றி

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் இதுவரை முடிவுகள் அறிவிக்ககப்பட்டுள்ள 20 வார்டுகளில் திமுக 16 வார்டுகளிலும், அதிமுக 2 வார்டுகளிலும், மதிமுக ஒரு வார்டிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளையும் திமுக கைப்பற்றும் நிலை காணப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சி, களக்காடு, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 59.65 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

திருநெல்வேலி மாநகராட்சி, சங்கர்நகர், நாரணம்மாள்புரம் பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் பாளையங்கோட்டையிலுள்ள அரசு பொறியியல் கல்லூரியிலும், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகள், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அம்பாசமுத்திரம் ஏவிஆர்எம்வி மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படுகின்றன.

களக்காடு நகராட்சி, முனைஞ்சிப்பட்டி, நாங்குநேரி, திசையன்விளை பேரூராட்சிகளுக்கான வாக்குகள் நாங்குநேரி நம்பிநகர் பிரான்சிஸ் பள்ளியிலும், சேரன்மகாதேவி, கோபாலசமுத்திரம், மேலச்செவல், முக்கூடல், பத்தமடை, வீரவநல்லூர் ஆகிய பேரூராட்சிகளுக்கான வாக்குகள் சேரன்மகாதேவி பெரியார் மேல்நிலைப்பள்ளியிலும், ஏர்வாடி, திருக்குறுங்குடி, வடக்கு வள்ளியூர், பணகுடி ஆகிய பேரூராட்சிகளுக்கான வாக்குகள் வள்ளியூர் பாத்திமா பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்படுகின்றன.

பாளையங்கோட்டையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் 14 மேஜைகளில் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் பணி தொடங்கியதில் இருந்தே திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்து வந்தனர்.

இம்மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 20 வார்டுகளில் திமுக 16 இடங்களிலும், மதிமுக ஒரு இடத்திலும், அதிமுக 2 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பெரும்பாலான வார்டுகளில் திமுக முன்னணியில் இருப்பதால், திருநெல்வேலி மாநகராட்சி திமுக வசமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE