மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனுமதி மறுப்பு: செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, மங்கையர்கரசி கல்லூரி, பரவை பாத்திமா காலேஜ், விளாங்குடி வக்பு போர்டு காலேஜ் கேகே நகர் உள்ளிட்ட இடங்களில் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறுது. இதனைத் தொடர்ந்து அனைத்து மையங்களிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் செய்தி சேகரிக்க செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் மூலம் அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்று காலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, மங்கையர்கரசி கல்லூரி, பரவை பாத்திமா காலேஜ், விளாங்குடி வக்பு போர்டு காலேஜ் கேகே நகர் உள்ளிட்ட இடங்களில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனைக் கண்டித்து செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கக் கோரி வாக்கு எண்ணிக்கை மையத்தின் நுழைவு வாயில் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,285 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது.

தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அசாம்பவித சம்பவங்களைத் தவிர்க்க வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE