நெல்லை மாவட்டத்தில் 5 மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை; காலை 10 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 10 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சி, களக்காடு, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 59.65 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் 5 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாநகராட்சி, சங்கர்நகர், நாரணம்மாள்புரம் பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் பாளையங்கோட்டையிலுள்ள அரசு பொறியியல் கல்லூரியிலும், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகள், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அம்பாசமுத்திரம் ஏவிஆர்எம்வி மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், களக்காடு நகராட்சி, முனைஞ்சிப்பட்டி, நாங்குநேரி, திசையன்விளை பேரூராட்சிகளுக்கான வாக்குகள் நாங்குநேரி நம்பிநகர் பிரான்சிஸ் பள்ளியிலும், சேரன்மகாதேவி, கோபாலசமுத்திரம், மேலச்செவல், முக்கூடல், பத்தமடை, வீரவநல்லூர் ஆகிய பேரூராட்சிகளுக்கான வாக்குகள் சேரன்மகாதேவி பெரியார் மேல்நிலைப்பள்ளியிலும், ஏர்வாடி, திருக்குறுங்குடி, வடக்குவள்ளியூர், பணகுடி ஆகிய பேரூராட்சிகளுக்கான வாக்குகள் வள்ளியூர் பாத்திமா பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்படுகின்றன.

வாக்கு எண்ணும் மையங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது. இதுபோல் வாக்கு எண்ணும் மைய வளாகம், வெளிப்புற பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பாளையங்கோட்டையிலுள்ள அரசு பொறியியல் கல்லூரி வாக்குஎண்ணும் மையத்தில் வாக்கு எண்ணுவதற்கு 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. 1-வது வார்டு தொடங்கி 55-வது வார்டுகள் வரைஒவ்வொரு வார்டாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி வார்டுகளில் முன்னணி நிலவரம் காலை 10 மணிக்கும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் முன்னணி நிலவரம் அல்லது வெற்றி பெற்றவர்கள் விவரம் பகல் 12 மணிக்குள் தெரியவரும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாளையங்கோட்டை அரசுபொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை, மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 388 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 5 மையங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க மொத்தம் 72 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அனைவரும் முககவசம் அணிந்திருக்க வேண்டும். தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE