தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்காமல் தாய்மொழி நாளைக் கொண்டாடுவதால் என்ன பயன்?: ராமதாஸ் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: தாய்மொழி தமிழுக்காக உயிரையும் கொடுப்பவர்கள் தமிழர்கள், நமது மாநிலத்தில் தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்காமல் தாய்மொழி நாளைக் கொண்டாடுவதால் என்ன பயன் என பாமக் நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"தாய்மொழியின் பெருமையையும், ஒரு நாட்டின் ஒற்றுமைக்கு அந்நாட்டில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் உலக தாய்மொழி நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. பன்னாட்டு தாய்மொழி நாள் 23வது ஆண்டாக கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வி இன்னும் கனவாகவே நீடிப்பது கவலையளிக்கிறது.

இந்திய விடுதலைக்கு முதல் நாள் பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்ட போது, கிழக்கு வங்கமும் பாகிஸ்தானின் அங்கமாக மாறியது. பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே வங்க மொழிக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. அதைக் கண்டித்தும், வங்க மொழியை அறிவிக்க வலியுறுத்தியும் 1952ம் ஆண்டு இதே பிப்ரவரி 21ம் நாளில் அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது சலாம், பர்கட், ரபீக், ஜபார், ஷபியூர் ஆகிய 5 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்ப்பட்டதை நினைவு கூறும் வகையில், அந்த நாளை உலக தாய்மொழி நாளாக 1999வது ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது.

தாய்மொழியின் பெருமைகளை மக்களுக்கு உணர்த்த உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்படுவது அவசியம் என்று பாமகவும் வலியுறுத்துகிறது.

ஆனால், வங்கமொழியைக் காக்கும் போராட்டத்தில் 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், தமிழ் மொழியைக் காப்பதற்காக நூற்றுக்கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்த தமிழகத்தில், தமிழ் மொழிக்கு இன்னும் உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்பது தான் தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் செய்தியாகும். ஆம்... தமிழகத்தில் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை.

நெருக்கடி நிலை நடைமுறைக்கு வரும் வரை தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வி தான் கோலோச்சியது. ஆங்கில மொழியில் பயிற்றுவிக்கும் பள்ளிகள் சென்னை பல்கலைக்கழகம், காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் ஒட்டுமொத்தமாகவே 29 தான் இருந்தன. அதுவும் கூட தமிழ் தெரியாத ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் பிற மொழி பேசுபவர்களுக்காகவே நடத்தப்பட்டன. அதன் பிறகு தான் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் என்று தனியாகத் தொடங்கும் அளவுக்கு புற்றீசல் போன்று ஆங்கில வழிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அடுத்த 45 ஆண்டுகளில் தமிழ் வழிக் கல்வி வழங்கும் பள்ளிகளை தேடிக் கண்டுபிடிக்கும் அளவுக்கு ஆங்கிலவழிக் கல்வி வழங்கும் பள்ளிகள் பல்கிப் பெருகிவிட்டன.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். தமிழக பள்ளிகளில் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு வரையிலாவது தமிழை பயிற்று மொழியாக அறிவித்து, சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி 1999ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி முதல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 102 தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி அளித்த அப்போதைய கருணாநிதி அரசு, ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் பயிற்றுமொழி என்ற அரசாணையை 19.11.1999ல் பிறப்பித்தது. ஆனால், அதை எதிர்த்து ஆங்கில வழி பள்ளிகள் தொடர்ந்த வழக்கில், அந்த அரசாணை செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதற்குப் பிந்தைய 22 ஆண்டுகளில் தமிழை கட்டாயப் பயிற்றுமொழியாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, ஆங்கில வழி பள்ளிகள் அதிகரித்தன. 1999ம் ஆண்டில் 2,122 ஆக இருந்த ஆங்கில வழி பள்ளிகளின் எண்ணிக்கை இப்போது ஐம்பதாயிரத்தைத் தாண்டிவிட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் வலியுறுத்தலால் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக அறிவித்து, 2006ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டமும் நீதிமன்றங்களின் தலையீட்டால் செயல்பாடின்றி கிடக்கிறது. இத்தகைய சூழலில் தாய்மொழி நாளை பெயரளவில் கொண்டாடுவது வலியைத் தருகிறது.

தாய்மொழியாம் தமிழுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பவர்கள் தான் தமிழர்கள். நமது மாநிலத்தில் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்காமல் தாய்மொழி நாளைக் கொண்டாடுவதால் என்ன பயன்? சீனா, ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட உலகில் அறிவியலிலும், தொழில் நுட்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட தாய்மொழியில் தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் உயர்கல்வி வரை தமிழ் மொழியில் கற்பிக்கப்படும் நாள் தான் தமிழர்களுக்கு பொன்நாள்.

எனவே, தமிழகத்தில் முதற்கட்டமாக பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்கி சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாயப்பாடமாக்கும் சட்டத்தை செம்மையாக செயல்படுத்தவும், தமிழ் கட்டாயப்பாடம் என்பதை 12ம் வகுப்பு வரை நீட்டிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்."

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்