அமைதியாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மா.சுப்பிரமணியன் பெருமிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மிகவும் அமைதியாக நடத்தப்பட்ட இருப்பதாக அனைவரும் பாராட்டுகின்றனர் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மருத்துவத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

"தமிழக முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் இன்று (20-02-2022) சென்னை மெரினாக் கடற்கரை வந்தடைந்த 3 அலங்கார ஊர்திகளை பொதுமக்கள் 4 நாட்கள் பார்வையிட தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வுக்குப் பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பவள விழாவை முன்னிட்டு தமிழகத்தில் தமிழர்கள் விடுதலைப் போரில் பங்கேற்றதை சிறப்புடன் விளக்கி முதல்வர் செய்தித்துறை சார்பில் ஏற்கெனவே கண்காட்சி ஒன்றினைத் திறந்து வைத்தார். தமிழகத்தின் விடுதலைப் போரில் பங்களிப்பை விளக்குகிற வகையில் குடியரசுத் தினத்தன்று 3 அலங்கார ஊர்திகள் தொடங்கி வைக்கப்பட்டு தமிழகத்தில் கடந்த 23 நாட்களாக 2,100 கி.மீ., பயணித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் பார்வைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இன்று சென்னை வந்திருக்கிறது.

முதல்வர் வழிகாட்டுதலின்படி சென்னை மெரினாக் கடற்கரையில் 3 இடங்களில் 3 அலங்கார ஊர்திகளும் நிறுத்தி வைக்கப்பட்டு, 4 நாட்கள் பொதுமக்கள் பார்வையிட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 3 அலங்கார ஊர்திகளும் தமிழகத்தின் விடுதலைப் போரினை சிறப்பான வகையில் விளக்குகிறது. தமிழ் விடுதலைப் போராட்ட தியாகங்களை விளக்குகிற வகையில் அவர்களுடைய திருவுருவங்கள் வரைந்த வாகனங்கள் மூலம் இந்த மூன்று அலங்கார ஊர்திகளும் தமிழர்களின் விடுதலை வேட்கையைப் பொதுமக்களுக்கு பறைசாற்றியிருக்கிறது.

முதல்வர் மக்களைத் தேடி மருத்துவம் என்கிற புரட்சிக்கரமான மருத்துவத் திட்டத்தைத் தொடங்கி வைத்து 50 லட்சம் வரை பொதுமக்கள் பயன்பெற்றிருக்கிறார். இத்திட்டத்தின் கீழ் மருத்துவம் மற்றும் மருந்துகள் போன்ற வசதிகளை வீடுகளுக்கே சென்று செய்வதன் மூலம் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, பேலியேட்டிவ் கேர், பிசியோ தெரபி மற்றும் சிறுநீரக சுய டயாலிசிசிஸ் பைகள் போன்ற 5 வகையான நோய்களுக்கு மருத்துவம் மற்றும் மருந்துகள் வழங்கப்படுகிறது.

பல்வேறு காரணங்களால் 21ம் தேதி நடைபெற இருந்த 50 லட்சமாவது பயனாளியின் இல்லத்திற்கு சித்தாலப்பாக்கத்தில் சென்று மருந்து பெட்டகங்கள் வழங்குகிற நிகழ்ச்சி 23ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அரசு மருத்துவமனைகளுக்கு வந்து மருத்துவம் பார்ப்பவர்கள் சரிபாதிக்கும் குறைவான அளவு இருந்தார்கள். முதல்வர் பொறுப்பேற்றப் பிறகு தமிழக அரசின் மருத்துவச் சேவையை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலும் மிக அமைதியாக நடத்தப்பட்டுள்ளது. அதேப்போல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் கூடுதல் கவனத்துடன் நடத்தப்பட்டு ஒரு சில இடங்களில் சிறு சிறு நிகழ்வுகள் மட்டுமே நடைபெற்று பெசன்ட் நகரில் வாக்குப் பதிவு இயந்திரம் உடைந்ததால் திமுகவின் வட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தை ஊதி பெரிதாக்கும் ஜெயக்குமாரின் நாடகம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மிகவும் அமைதியாக நடத்தப்பட்ட தேர்தல் என்று அனைவருமே பாராட்டுகின்றனர்."

இவ்வாறு அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE