நிலத்தின் வளத்தை கெடுக்கும் சீமைக் கருவேல மரங்களே இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும். இதில் தமிழகம் முன்மாதிரியாக செயல்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் நிலத்தடி நீருக்கு பங்கம் விளைவிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டனர்.
இந்நிலையில், தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதிகள் என்.சதிஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய முழு அமர்வில் இந்த வழக்குகள் மீதான விசாரணை நடந்தது. அப்போது நடந்த வாதம்:
அரசு தரப்பு: தமிழகம் முழுவதும் இதுவரை 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீமைக் கருவேலமரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. அவற்றை வேருடன் முழுமையாக அகற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. (இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.)
வனத் துறை: மக்கள் இவற்றை விறகாகவும், செங்கல் சூளைகளில் எரிபொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.
பாதிப்பை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழு: இந்த மரங்கள் பசுமைக்காகவும், வாழ்வாதாரத்துக்காகவும் வளர்க்கப்பட்டன. இவற்றின் தழைகளை கால்நடைகள் உண்கின்றன. இதை அதிக அளவில் உட்கொண்டால் மட்டுமே பாதிப்பு ஏற்படும்.
நீதிபதிகள்: இதுதொடர்பாக அரசு மற்றும் உயர் நீதிமன்றம்நியமித்துள்ள குழுக்களின் அறிக்கையை ஏற்க முடியாது. பசுமைக்காக, வாழ்வாதாரத்துக்காக இவை வளர்க்கப்பட்டிருந்தால், பின்னர் எதற்காக இவற்றை அகற்ற தமிழக அரசு முடிவு எடுத்தது?
தமிழக வனத் துறை செயலர் சுப்ரியா சாஹு: ஒட்டுமொத்தமாக இவற்றால் எந்த பாதிப்பும் இல்லைஎன்று கூறிவிட முடியாது. வனப்பகுதியில் பிற மரங்களை சீமைக்கருவேல மரங்கள் வளரவிடுவதில்லை. யானை போன்ற வன விலங்குகள் சுதந்திரமாக நடமாட முடிவதில்லை.
நீதிபதிகள்: சீமைக் கருவேலமரங்களால் நிலத்தடி நீர்மட்டம்குறைவதுடன் நிலத்தையும் மலட்டுத்தன்மை ஆக்கிவிடுகிறது. எரிப்பதால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. உண்மையிலேயே இந்த மரங்களை அகற்றும் எண்ணம் தமிழக அரசுக்கு உள்ளதா, இல்லையா? ராஜஸ்தான் போன்றபிற மாநிலங்களில் இதற்காக என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஒருவேளை அந்த மாநிலங்களில் சீமைக் கருவேல மரங்கள் இல்லைஎன்றால், இவற்றை அழிக்க தமிழகம் முன்மாதிரியாக செயல்பட வேண்டும். சீமைக் கருவேல மரங்களே இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும்.
தமிழக அரசு தரப்பு: சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மத்திய அரசு போதிய நிதி ஒதுக்க மறுத்துவிட்டது. இதனால் தமிழக அரசு தனது சொந்த நிதியை பயன்படுத்தி இந்த செடிகளை அகற்ற உள்ளது.
இவ்வாறு வாதம் நடந்தது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் மார்ச் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
2 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago