சென்னை மாநகராட்சியில் ஆளும் கட்சியினர் வன்முறை; 26 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் அவசியம்: மாநில தேர்தல் ஆணையரிடம் அதிமுக வலியுறுத்தல்

அதிமுக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர்.எம்.பாபு முருகவேல், மாநில தேர்தல் ஆணையரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வழக்கம்போல திமுக வன்முறையைக் கையில் எடுத்து, தனது தோல்வியை மறைப்பதற்காக பெரும்பாலான இடங்களில் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டு, வன்முறையில் ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பாக நான் பலமுறை அளித்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்த்திருக்கலாம்.

வாக்குப்பதிவு தினத்தன்று மாலை 5 மணி நிலவரப்படி 41 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. திமுகவின் வன்முறை வெறியாட்டத்தால்தான் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் ஆணையமும், காவல் துறையும் கையைக் கட்டி, வாயை மூடி திமுகவுக்கு கைப்பாவையாக மாறிவிட்டன.

இந்த தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநர், சென்னை மாநகர காவல் ஆணையர், தமிழகதேர்தல் ஆணையர், தேர்தல்ஆணையச் செயலர் ஆகியோருக்கு காலை முதல் புகார்களைவாட்ஸ்-அப் மூலம், வீடியோ ஆதாரங்களுடன் அனுப்பிக்கொண்டே இருந்தோம்.

ஆனால், தேர்தல் ஆணையரும், காவல் ஆணையரும் சில புகார்களுக்கு மட்டுமே பதில் அளித்தனர். ஆனால், நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.

சென்னை மாநகராட்சி வார்டு எண் 140-ல் வாக்குச்சாவடி எண்கள் 7, 8, 9, 40, 42, வார்டு எண் 113-ல் 8 வாக்குச்சாவடிகள், வார்டு எண். 49-ல் 3 வாக்குச்சாவடிகள், வார்டு எண். 179-ல் 7, 8, 9 வாக்குச்சாவடிகள், வார்டு எண்.114-ல்3 வாக்குச்சாவடிகள் ஆகியவை திமுக குண்டர்களால் கைப்பற்றப்பட்டு, வாக்காளர்கள் வெளியேற்றப்பட்டு, காவல் துறையினரின் கண்முன்னே கள்ள ஓட்டு போட்டு, அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர்.

வாக்குப்பதிவு சதவீதத்தை உண்மையாக தேர்தல் ஆணையம் வெளியிடப்படும்பட்சத்தில், சென்னை மாநகரைப் பொறுத்தவரை 50 சதவீதத்தை தாண்டக்கூட வாய்ப்பு இல்லை. இது, திமுக ஆட்சியின் தோல்வியை, நிர்வாகத் திறமையின்மையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

2006-ல் சென்னை மாநகராட்சித் தேர்தலை திமுக எவ்வாறு சந்தித்ததோ, அதே வழியில் மீண்டும் மாநகராட்சியை புறவாசல் வழியாக கைப்பற்ற வேண்டும் என்று முயற்சித்துள்ளனர்.

எனவே, இந்தப் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, மேற்குறிப்பிட்டுள்ள வார்டுகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும். இல்லையென்றால், உயர் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு தேர்தல்ஆணையம் உள்ளாக நேரிடும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE