எங்களுக்கு நடிகர் விஜய் போட்டியே இல்லை: செல்லூர் கே.ராஜூ பேட்டி

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ''திமுகவுக்கு இந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தல் படிப்பினையை கற்று தரும், நடிகர் விஜய் எங்களுக்கு போட்டியே இல்லை'' என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி தேர்தலில் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தனது மனைவி ஜெயந்தி, மகள், மருமகனுடன் 29 வது வார்டுக்குட்பட்ட மீனாட்சி பெண்கள் கல்லூரி வாக்குச்சாவடி மையத்தில் குடும்பத்தினருடன் வாக்களித்தார். அதன்பின் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை இந்த முறை வாக்காளர் பட்டியலில் நிறைய குளறுபடி உள்ளது. ஒரு வார்டில் இருந்த வாக்காளர் பெயர் வேறு வார்டில் மாறி மாறி உள்ளது. வாக்காளர் பட்டியலை முறையாக தயாரிக்கவில்லை.

யாருக்கு வாக்களித்தோம் என்ற சிலிப் இந்த முறை வரவில்லை. இது எங்கே போய் முடியும் என தெரியவில்லை. பரிசுப்பொருள், பணப்பட்டுவாடா செய்வது திமுக பொறுத்தவரை வழக்கமான ஒன்று. தேர்தல் விதிமுறைகளை மீறி யாரும் நடக்கக்கூடாது'' என்றார்.

நடிகர் விஜய் ஆரவாரமாக சென்று வாக்களித்திருப்பது குறித்த கேள்விக்கு, ''விஜய் தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். அவ்வளவுதான், அதில் ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே'' என்றார்.

தொடர்ந்து விஜய் உங்களுக்கு போட்டியா என்ற கேள்விக்கு ''எங்களுக்கு போட்டி திமுக மட்டுமே. மற்ற யாரும் எங்களுக்கு போட்டியே இல்லை. சட்டமன்ற தேர்தலில் இருந்த மனநிலை மக்களிடம் தற்போது இல்லை. மக்களிடையே மறுமலர்ச்சி, மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த மறுமலர்ச்சி மாற்றம் இந்த தேர்தலில் எதிரொலிக்கும். திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மக்களின் மனக்குமுறல் திமுகவுக்கு படிப்பினையைக் கொடுக்கும். அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE