காலையில் மந்தம்... மாலையில் பேரார்வம்... வாக்குச்சாவடி மூடப்பட்டதால் மதுரை வாக்காளர்கள் ஏமாற்றம்!

மதுரை: மதுரையில் காலையில் மந்த கதியில் இருந்த வாக்குப்பதிவு மையங்கள் மாலைக்கு மேல் வாக்காளர்களால் நிரம்பிய நிலையில், குறிப்பிட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிகள் மூடப்பட்டதால் ஆர்வமுடன் வந்த வாக்களித்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மதுரை மாநாகராட்சி தேர்தலில் இன்று காலை வாக்குப்பதிவு மந்தமாகவே தொடங்கியது. காலை 12 மணி வரை சில வாக்குச்சாவடிகளில் இரட்டை எண்ணிக்கையிலும், சில வாக்குச்சாவடிகளில் ஒற்றை இலக்கத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. நகராட்சி, பேரூராட்சி வாக்குப்பதிவுகள் ஒரளவு நடந்தது. மேலும், பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன.

காலையில் பெரியளவிற்கு ஆர்வம் காட்டாத வாக்காளர்கள், மாலை 4 மணிக்கு மேல் வாக்களிக்க திரண்டு வந்தனர். ஆனால், 5 மணிக்கு மேல் வந்த வாக்காளர்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் பல இடங்களில் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. அதனால், வாக்குச்சாவடிகளுக்கு வெளியே காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

78வது வார்டுக்குட்பட்ட டிவிஎஸ் சுந்தரம் பள்ளி வாக்குசாவடியில் 5 மணிக்கு மேல் வந்த காரணத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படாததால் வாக்குச்சாவடிக்கு வெளியே காத்திருந்தனர். அதேபோல், அவனியாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்குமு் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்காமல் வாக்குச்சாவடி வெளியே காத்திருந்தனர். அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கும்படி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குப்பதிவு குறைவுக்கு வாக்காளர்கள் ஆர்வமின்மையும், தாமதமாக வாக்களிக்க செல்லலாம் என்ற அலட்சியமே முக்கிய காரணம் என்று தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE