மதுரையில் புதுப்புது உத்திகள்: வாக்குச்சாவடி வழிகளில் விழாபோல பந்தலிட்ட திமுக, அதிமுக

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகராட்சி தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிகள் வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கைக் காட்ட வாக்குச்சாவடி அருகே தங்கள் பூத் கமிட்டிக்கு திருவிழா போல் பந்தல் போட்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களை திரட்டி அமர வைத்திருந்தது, வாக்காளிக்க வந்த வாக்காளர்களை திரும்பிப்பார்க்க வைத்தது.

மதுரை மாநகராட்சி 100 வார்டுகளுக்கான நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக 77 வார்டுகளிலும், அதிமுக 100 வார்டுகளிலும், பாஜக 99 வார்டுகளிலும், அமமுக 84 வார்டுகளிலும், மக்கள் நீதி மையம் 91 வார்டுகளிலும், நாம் தமிழர் 98 வார்டுகளிலும், பாமக 11 வார்டுகளிலும் போட்டியிடுகிறது. மேலும், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட மற்ற கட்சிகள், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 100 வார்டுகளிலும் 815 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இன்று காலை முதல் நடந்த வாக்குப்பதிவில் இளம்தலைமுறை வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். நடக்க முடியாத முதியவர்களை, அவர்கள் வாக்களிக்க விரும்பிய வேட்பாளர்கள் ஆட்டோ, காரில் அழைத்து வந்து வாக்களிக்க வைத்தனர்.

மாநகராட்சி தேர்தலில் மேயர், துணை மேயர் பதவிகளைப் பிடிக்க அதிக இடங்களில் கவுன்சிலர்களை வெற்றிப்பெற வைப்பது கட்டாயம் என்பதால் இன்று நடந்த வாக்குப்பதிவிலும் தீவிரமாக செயல்பட்டனர். திமுக, அதிமுக கட்சியினர் வாக்காளர்களிடம் சம்பந்தப்பட்ட வார்டுகளில் செல்வாக்காக இருக்கிறோம் என்ற மனநிலையை உருவாக்க அந்த கட்சிகளின் பூத் கமிட்டி நிர்வாகிகள் வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் திருவிழா போல் பிரமாண்டமாக பந்தல் போட்டு நூற்றுக்கும் மேற்பட்ட தங்கள் ஆதரவாளர்களை திரட்டி வைத்திருந்தனர்.

பந்தலில் அமர்திருப்பவர்கள், வாக்காளர்கள் வாக்களிக்க வரும்போது ஒரே குரலில் ''எங்களுக்கு வாக்களியுங்கள்'' என்று கெஞ்சுவதும், சிக்னல்கள் காட்டுவதுமாக உள்ளாட்சித் தேர்லில் திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் செல்வாக்கை வாக்காளர்களிடம் வாக்குப்பதிவு நாளில் காட்ட முயன்றனர்.

இந்த பூத் கமிட்டிக்கு தனியாக பந்தல் போட்டு, அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நாற்காலிகள் போட்டு அமர்ந்திருந்ததால், அந்த இடங்களில் ஏதோ ஊர்த் திருவிழா, வீட்டு விசேஷங்கள் நடக்கிதோ என்று வாக்களிக்க வந்த வாக்காளர்களை திமுக, அதிமுக கட்சியினர் திரும்பி பார்க்க வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE