மதுரை ஹிஜாப் சம்பவம்: பாஜக முகவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கனிமொழி எம்.பி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: "மேலூர் நகராட்சி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த ஒரு இஸ்லாமியப் பெண்ணிடம், பாஜக பூத் நிர்வாகி ஹிஜாப்பை அகற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்தியிருப்பது கண்டனத்திற்குரியது” என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

இது குறித்து திமுக நாடாளுமன்ற எம்.பி.கனிமொழி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய்த் திகழும் தமிழகத்தில், மதுரை மேலூர் நகராட்சி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த ஒரு இஸ்லாமியப் பெண்ணிடம், பாஜக பூத் நிர்வாகி ஹிஜாப்பை அகற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்தியிருப்பது கண்டனத்திற்குரியது. நல்லிணக்கத்திற்குத் தீங்கு விளைவிக்க முயன்ற அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, மதுரை மாவட்டத்தில் இன்று நடைபெற்றுவரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மேலூர் நகராட்சி, 8-வது வார்டில் அல் - அமீன் உருது தமிழ் பள்ளி வாக்குச்சாவடி அமைந்துள்ளது. இந்த வாக்குச்சாவடியில் இன்று காலை முஸ்லிம் பெண்கள் பலர் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்தனர். அவர்களில் முதலாவதாக ஒரு பெண் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வாக்குச்சாவடிக்குள் நுழைந்தார்.

அப்போது பாஜக முகவர் கிரிராஜன் என்பவர், முகத்தை காட்டாமல் எப்படி வாக்களிக்க அனுமதிக்க முடியும் என்று அந்தப் பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர், முகம் தெரியும்படி ஹிஜாப்பை கழற்றிவிட்டு வாக்குச்சாவடிக்குள் வரும்படி அந்த பெண்ணிடம் கூறினார். அங்கிருந்த திமுக, அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சியைச் சேர்ந்த முகவர்கள், பாஜக முகவரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

வாக்குவாதம் தொடர்ந்து நீடித்த நிலையில், பாஜக நிர்வாகியை காவலர்கள் வெளியே வரும்படி அழைத்தனர். அவர் வெளியேவராமல் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியதை அடுத்து அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் போலீஸார் குவிக்கப்பட்டு அமைதியான முறையில் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அனீஸ் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE