திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த அமைச்சரின் மகன் மற்றும் அவரது ஆதவாளர்களை மாவட்ட தேர்தல் பார்வையாளர் அதிரடியாக வெளியேற்றினார்.
திருவண்ணாமலை நகராட்சி 25-வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்களுக்கு சுயேச்சை வேட்பாளர் ஸ்ரீதேவி கடும் நெருக்கடி கொடுத்துள்ளார். இதனால் தேர்தல் களத்தில் கடுமையான போட்டி நிலவியது. இந்த நிலையில், 25-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான வாக்குப்பதிவு, திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 2 வாக்குச்சாவடிகளில் இன்று நடைபெற்றது.
அப்போது வெளியாட்களை வரவழைத்து வாக்குப்பதிவு நடைபெறுவதாக கூறி திமுக, அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் கூச்சலிட்டனர். மேலும் அவர்கள், தேர்தல் ஆணையம் மூலம் வாக்குச்சீட்டு வழங்கவில்லை என குற்றச்சாட்டினர். இப்படியாக, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, வாக்குப்பதிவை நிறுத்தவும், மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனவும் காலை 11 மணி முதல் குரல் எழுப்பி வந்தனர். இதனால், அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
அதன்பிறகு, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் தரப்பை சேர்ந்தவர்களிடம் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இதையடுத்து, அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு திமுக, அதிமுகவைச் சேர்ந்த பெண் வேட்பாளர்கள், பாஜக வேட்பாளரின் கணவர் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர், அதிமுகவினர் ஆகியோர் கூட்டணி அமைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பேரில் 15 நிமிடம் நடைபெற்ற சாலை மறியல் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், வேட்பாளர்கள் போராட்டம் தொடர்பாக அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வருகை வந்த பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் மற்றும் திமுகவினர், வாக்குச்சாவடி உள்ளே சென்று பார்வையிட்டனர். பின்னர், வேட்பாளர்களை அழைத்து பேசிய கம்பன், அங்கிருந்த தேர்தல் நடத்தும் அலுவலரான நகராட்சி ஆணையர் பார்த்தசாரதியிடம், மறு வாக்குப்பதிவுக்கு பெரும்பான்மையான வேட்பாளர்கள் மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, வாக்குப்பதிவை பார்வையிட வந்த தேர்தல் பார்வையாளர் சங்கீதா, ஆண்கள் வாக்குச்சாவடியில் கூட்டமாக இருந்தவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர், வாக்குப்பதிவு தடையாக உள்ளதாக கூறி, வாக்குச்சாவடியில் அத்துமீறி நுழைந்து நின்றிருந்த அமைச்சர் மகன் கம்பன் உள்ளிட்ட திமுகவினரை வெளியேற உத்தரவிட்டார். மேலும் வெளிநபர்களை அனுமதித்தது ஏன்? என கேட்டு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை எச்சரித்தார்.
அப்போது வாக்குச்சீட்டு வழங்கவில்லை, வெளிநபர்கள் வாக்களித்துள்ளனர் என கூறி, தேர்தலை நிறுத்த வேண்டும் என திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உங்களது கோரிக்கை எதுவாக இருந்தாலும், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுவை கொடுங்கள், இப்போது வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறுங்கள் என மீண்டும் உத்தரவிட்டார். இதையடுத்து அமைச்சர் மகன் கம்பன் உள்ளிட்ட திமுகவினர் வெளியேறினர். இதைத்தொடர்ந்து தேர்தல் பார்வையாளர் சங்கீதா மேற்பார்வையில் காவல்துறை பாதுகாப்புடன் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago