வேலூர் மாவட்டத்தில் பழமையான கல்வெட்டுகள் படியெடுப்பு: புத்தகமாக வெளியிட நடவடிக்கை என தகவல்

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்ட கல்வெட்டு வரலாற்றை புத்தகமாக வெளியிட தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை யினர் பழமையான கல்வெட்டுகளை படியெடுத்து வருகின்றனர்.

தமிழகத்தின் வரலாற்றை புத்தகமாக வெளியிட தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை முயற்சி எடுத்துள்ளனர். ஏற்கெனவே பல கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவற்றை படியெடுப்பதுடன் விடுபட்ட கல்வெட்டுகளையும் படியெடுத்து முழுமையாக பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக, தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளை படியெடுத்து புத்தகமாக வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்வெட்டுகளை ஓய்வுபெற்ற தமிழ் கல்வெட்டு ஆய்வாளர் பூங்குன்றன் தலைமையிலான குழுவினர் படியெடுத்து பதிவு செய்து வருகின்றனர். இவர்கள், விரிஞ்சிபுரம் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை இரு தினங்களுக்கு முன்பு படியெடுத்த நிலையில், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கல்வெட்டை நேற்று படியெடுத்தனர்.

சத்துவாச்சாரி வேளாளர் தெருவில் அப்பருக்கான தனி கோயில் எதிரே உள்ள இந்த சூல கல்வெட்டு 28 வரிகள் கொண்டது. 15-ம் நூற்றாண்டில் சின்ன பொம்மு நாயக்கர் ஆளுகையில் எழுதப்பட்டுள்ள இந்த கல்வெட்டில், ‘‘கிருஷ்ணப்ப நாயக்கர் அய்யன் அவர்கள் பாதம் தொட்டு தெரிவிப்பது, ஸ்ரீரங்க தேவ மகாராயர் வேலூர் ஜூரகண்டேஸ்வரர் (ஜலகண்டேஸ்வரர்) சிவனுக்கு சத்துவாச்சாரி கிராமத்தை தேவ தானமாக வழங்கியுள்ளார்’’ என குறிப்பிட்டுள்ளனர். ஜூரகண் டேஸ்வரர் சிவனுக்கு வேலூரை சுற்றியுள்ள 6 கிராமங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE