கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்த வலியுறுத்தியும், தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திமுகவினரை கண்டித்தும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள், கட்சியினர் திரண்டு கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளியூர் குண்டர்கள் ஆதிக்கம்... - இந்த திடீர் தர்ணா குறித்து பேட்டியளித்த எஸ்.பி. வேலுமணி, "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கோவை கலவர பூமியாக மாற்றப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியால் வெளியூர் குண்டர்கள் - ரவுடிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அதிமுகவினரை தாக்குகின்றனர். பொதுமக்களை மிரட்டுகின்றனர். இதற்கெல்லாம் காவல்துறையும் துணை. காவல்துறை ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடக்கிறது.
காவல்துறை அதிகாரிகளை மாற்றுமாறு நாங்கள் பலமுறை மனு கொடுத்துவிட்டோம். அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது. வீட்டில் கால் முறிந்து படுத்திருக்கும் அதிமுக தொண்டர் மீது பொய்யாக வழக்கு போடுகிறது. ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. இங்கு அதிமுக வெற்றி பெறும் சூழல் இருக்கிறது. அதனாலேயே திமுகவினர் இத்தனை குழப்பம் செய்கின்றனர்.
இதே நிலை நீடித்தால் நாளை வாக்குப்பெட்டியைக் கூட தூக்குவார்கள். வெளியூர் குண்டர்களை காவல்துறை வெளியேற்ற வேண்டும். தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
கோவையில் நேரடி போட்டி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே மற்ற மாவட்டங்களைவிடவும் கோவையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் தொடக்கம் முதலே பரபரப்பாக காணப்பட்டது. மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், ஓர் இடத்தை தவிர அனைத்து இடங்களிலும் அதிமுக நேரடியாக களம் காண்கிறது. ஒரே ஒரு வார்டு மட்டும் கூட்டணி கட்சியான தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வேட்பாளரும் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுகிறார்.
திமுக 76 இடங்களில் நேரடியாக களம் காண்கிறது. எஞ்சியுள்ள 24 இடங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. இதில், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று மேயர் பதவியை கைப்பற்ற வேண்டுமென அதிமுக, திமுக என இருகட்சியினருமே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆரம்பத்தில் இருந்தே திமுகவினர் மீது அதிமுகவினர் பல்வேறு புகார்களைக் கூறினர். ’வாக்காளர்களுக்கு பணம், பொருள் விநியோகிக்கப்படுகிறது, அதிமுகவினரின் பிரச்சாரத்துக்கு திமுகவினர் இடையூறு செய்கின்றனர், அதிமுகவினர் மீது போலி வழக்குகள் பதியப்படுகிறது’ என்றெல்லாம் குற்றம்சாட்டி வந்தது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்த வலியுறுத்தியும், தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திமுகவினரை கண்டித்தும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள், கட்சியினர் இன்று கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இது குறித்து அறிந்து ஆட்சியர் அலுவலகம் திரும்பி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு: தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இவற்றில் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடக்கிறது. அரசியல் கட்சிகள் அடிப்படையில் நடக்கும் இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன் படுத்தப்பட உள்ளன. 218 வார்டுகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதம் உள்ள வார்டுகளுக்கு 57,600-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன. பாதுகாப்புப் பணியில் 1.13 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
இன்று காலை 11 மணி முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான 80 வகையான பொருட்கள், கரோனா பாதுகாப்புக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. தேர்தல் பாதுகாப்புப் பணியில் 1 லட்சத்து 13 ஆயிரம் காவலர்கள் ஈடுபட இருப்பதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago