ஒவ்வொரு கோயிலாக இடிக்கும் திமுக அரசு, இந்து மக்களுக்கு எதிரானது: ஹெச்.ராஜா

By ஜெ.ஞானசேகர்

திருச்சி: ”நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தாமரைக்கு வாக்களிக்காவிட்டால் மகா பாவம் வரும்” என்று பாஜக முன்னாள் தேசியச் செயலர் ஹெச்.ராஜா பேசினார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ராஜகோபுரம் பகுதியில் ஹெச்.ராஜா இன்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியது: ”கடந்த 55 ஆண்டுகளாக அதிமுக, திமுக என்று மாறி மாறி வாக்களித்து அவதிப்பட்டு வரும் மக்கள், இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். திமுக அரசு இந்து மக்களுக்கு எதிரானது. தமிழ்நாடு நிர்வாகம் முழுவதும் மதம் மாற்றும் மிஷினரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவேதான், இந்துக் கோயில்களை இடிக்கின்றனர். காரணம் கேட்டால், நீர்நிலையில் இருப்பதாகக் கூறுகின்றனர். நீர்நிலைகளில் உள்ள கிறிஸ்தவ ஆலங்கள், மசூதிகள் ஆகியவற்றையும் இடிக்க வேண்டும்.

ஒவ்வொரு கோயிலாக திமுக இடிக்கிறது. அதிமுக நவ துவாரத்தையும் மூடிக் கொண்டு இருக்கிறது. நான் மட்டுமே கத்திக் கொண்டிருக்கிறேன். வெறும் இரண்டரை சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் திமுக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றது. எனவே, இந்துக்களின் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம்.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது தகுதியுள்ளவர்களுக்கு வழங்குவதாகக் கூறி அதை ஆய்வு செய்ய குழு அமைப்பதாகக் கூறுகின்றனர். அதேபோல், நகைக்கடன் தள்ளுபடி செய்வதாகக் கூறிவிட்டு, 35 லட்சம் பேருக்கு தகுதியில்லை என்று கூறுகின்றனர். ஏமாற்றுப் பேர்வழிகள் ஆட்சியில் உள்ளனர். இந்த திராவிடக் கூட்டத்தை அழிக்காமல் தமிழ்நாடு முன்னேற்றம் அடையாது.

ஊழலும், திமுகவும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்போல, பிரிக்கவே முடியாது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் ரூ.500 கோடி கொள்ளையடித்துள்ளனர்.

இதுவரை இந்தியாவில் 180 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உதவி செய்வோருக்கு நன்றி கூறுவதைப்போல், தடுப்பூசி செலுத்தி உயிரைக் காப்பாற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி செலுத்த வேண்டும். சொல்லவில்லையெனில், மகா பாவம் வரும். அதாவது, தாமரை சின்னத்தில் வாக்களிக்காமல் வேறு எந்தச் சின்னத்துக்கு வாக்களித்தாலும் மகா பாவம் வரும் என்பதையே "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்கிறார் வள்ளுவர்.

எனவே, வாக்குச்சாவடிக்குள் மோடிக்கு நன்றி என்று மனதுக்குள் கூறிக் கொண்டே தாமரைச் சின்னத்தில் வாக்களித்து பாஜக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.

அமைச்சர் கே.என்.நேரு- எச்.ராஜா சந்திப்பு...

எச்.ராஜா பிரச்சாரம் செய்த பகுதி வழியாக திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக அமைச்சர் கே.என்.நேரு வந்தார். ஹெச்.ராஜா இருப்பதைக் கண்டவுடன், காரில் இருந்து இறங்கினார். பிரச்சார வேனில் இருந்து ஹெச்.ராஜாவும் இறங்கி, பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். ஓரிரு நிமிடங்கள் அமைச்சர் கே.என்.நேருவும், எச்.ராஜாவும் சிரித்து பேசிக் கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE