சென்னை: "ஜல்லிக்கட்டு குறித்து என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி விஷமப் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவருக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதுபோன்ற அவதூறுகளை பரப்புவது என்பது முதல்வர் பொறுப்பில் இருப்பவருக்கு அழகல்ல” என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய ஆட்சியில் கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம் அங்கம் வகித்து நீட் தேர்வு அறிமுகம், ஜல்லிக்கட்டுக்கு தடை, மீத்தேன் திட்டத்திற்கு ஒப்புதல், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடாதது என மக்கள் விரோதத் செயல்களை மட்டுமே செய்த கட்சி திமுக என்பதில் யாருக்கும் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. இந்த வரலாற்றை எல்லாம் மறந்து, இல்லை மறைத்து, அவருக்கே உரிய பாணியில் 'வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ' என்பதற்கேற்ப, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்பதற்காக, புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது 'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்ற எம்ஜிஆரின் பாடல் வரிகள் தான் என் நினைவிற்கு வருகின்றன.
காணொலிக் காட்சி வாயிலாக மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் ஜல்லிக்கட்டு குறித்து பேசி இருப்பது கேலிக் கூத்தாக உள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட காரணமாக இருந்த கட்சி, மத்திய காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்த திமுக. ஆனால், அந்த ஜல்லிக்கட்டுத் தடையை தகர்த்தெறிந்த கட்சி அதிமுக. இந்த வரலாறு தெரியாமல், "இளைஞர்கள் ஜல்லிக்கட்டு வேண்டும் என்று போராடியபோது முதலில் களத்திற்கு வந்தது நான்தான்" என்று திமுக தலைவர் பேசியிருக்கிறார். அதே சமயத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது யார் என்று திமுக தலைவர் சொல்லவில்லை. ஆட்சியில் இருக்கும்போது துரோகம் செய்துவிட்டு இப்போது உத்தமர் போல் கபடநாடகம்.
தமிழர்களின் பண்பாட்டுச் சின்னமாக விளங்கும் ஜல்லிக்கட்டு, 2006-ம் ஆண்டு முதலே பல்வேறு சோதனைகளை சந்தித்ததோடு, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவை அவ்வப்போது வழங்கிய பல்வேறு இடைக்கால உத்தரவுகளின்படியே ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது. இந்தக் காலகட்டங்களில் தமிழ்நாட்டிலும், மத்திய அரசிலும் ஆட்சியில் இருந்தது திமுக. இந்த நிலையில், 2011ம் ஆண்டு ஜனவரி மாதம், திமுக அங்கம் வகித்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் பிராணிகள் நலப் பிரிவு, ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதாவது, பிராணிகளுக்கு இழைக்கப்படும் தீங்கினைத் தடுத்தல் சட்டத்தின் பிரிவு 22-ன் கீழ், புலிகள், கரடிகள் ஆகியவற்றுடன் காளையையும் சேர்க்க வேண்டுமெனப் பரிந்துரைத்தது. இதனடிப்படையில், திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, தனது 11-07-2011ம் நாளிட்ட அறிவிக்கையில் காளையையும் இந்தப் பட்டியலில் சேர்த்து அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. இதுதான் ஜல்லிக்கட்டு தடைக்கு முதற் முழுக் காரணம். அப்போது மத்திய அரசில் அங்கம் வகித்தது யார் என்றால் திமுக. ஏன் அப்போது திமுக வாய் திறக்கவில்லை? காரணம் சுயநலம்! பொது நலத்தைப் பற்றி திமுகவிற்கு எப்போதுமே அக்கறை கிடையாது.
» விருதுநகர் அருகே 1 வயது பெண் குழந்தை ரூ.2.30 லட்சத்திற்கு விற்பனை: தாய் உள்பட 9 பேர் கைது
» நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: வித்தியாசமான வாக்குறுதிகளால் கவனம் ஈர்க்கும் சுயேச்சை வேட்பாளர்
இதைச் சொன்னால், 2009-ல் திமுக ஆட்சியின்போது தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டம் இயற்றப்பட்டதாக திமுக தலைவர் கூறுவார். ஜல்லிக்கட்டைப் பொறுத்தவரையில், அது பொதுப் பட்டியலில் இருக்கிறது. பொதுப் பட்டியலில் இருக்கும் ஒரு பொருள் குறித்து மாநில அரசும் சட்டம் இயற்றலாம், மத்திய அரசும் சட்டம் இயற்றலாம். இவ்வாறு Concurrent list–ல் இருக்கிற பொருள் குறித்த மாநில அரசின் சட்டம் மத்திய அரசினுடைய சட்டத்திற்குட்பட்டதாக இருக்க வேண்டும். இந்தச் சட்டம் மத்திய அரசினுடைய சட்டத்திற்கு உட்பட்டதாக இல்லையென்ற காரணத்தினால்தான் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதன் அடிப்படையில் திமுக ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட 2009ம் ஆண்டு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் 07-05-2014 அன்று தீர்ப்பு வழங்கியது. இடைப்பட்ட காலத்தில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தமிழ்நாட்டில் நடைபெற்றாலும், 2011ம் ஆண்டைய மத்திய காங்கிரஸ் அரசின் அறிவிக்கையை ரத்து செய்ய திமுகவால் முடியவில்லை. மத்திய காங்கிரஸ் ஆட்சியில் வெளியிடப்பட்ட அறிவிக்கையை ரத்து செய்ய திமுக அழுத்தம் கொடுத்திருந்தால் ஜல்லிக்கட்டு பிரச்சினையே வந்திருக்காது.
ஆனால் இதைச் செய்யவில்லை. காரணம், அப்போது உலக மகா ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் காரணமாக காங்கிரஸ் கட்சியிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது திமுக. இதனைத் தொடர்ந்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் 07-01-2016 அன்று ஓர் அறிவிக்கையை வெளியிட்டு ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு வழிவகை செய்தது. ஆனால், பல அமைப்புகள் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, தடை உத்தரவைப் பெற்றுவிட்டன. எனவே, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக, அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என பிரதமரிடம் நான் வலியுறுத்தி வந்தேன். 19-01-2017 அன்று டெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்து, இது பற்றி விரிவாக விவாதித்தபோது, மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்ற வாக்குறுதியை பிரதமர் அளித்தார். இதனைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடைபெற மாநில அரசு உடனடியாக சட்ட பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து, மத்திய அரசின் மிருக வதைத் தடுப்புச் சட்டத்தில், மாநில அளவிலான திருத்தங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் 23-01-2017 அன்று தான் துவங்குகிறது என்பதாலும், சாதாரணமாக சட்டமுன்வடிவுகளுக்கான சட்டமன்ற ஒப்புதல் கூட்டத் தொடரின் கடைசி நாளிலேயே பெறப்படும் என்பதாலும்,
அதன் பின்னர், ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பதாலும், இவை அனைத்திற்கும் காலதாமதம் ஏற்படும் என்பதாலும், அவசரச் சட்டம் பிறப்பிக்க முடிவெடுக்கப்பட்டு, அவ்வாறே அவசரச் சட்டம் 21-01-2017 அன்று பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக, ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கான அனைத்துத் தடைகளும் நீக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்த அவசரச் சட்டம் சட்டமாக்கப்பட்டது. எனவே, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியது அதிமுக. அதே சமயத்தில் நீட் தேர்வுக்கு அறிவிக்கை வெளியிட்டதைப் போலவே, ஜல்லிக்கட்டு தடைக்கும் அறிவிக்கை வெளியிட்ட இயக்கம் மத்திய காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்த திமுக இந்த வரலாறு தெரியாமல் திமுக தலைவர் பேசுவது அவரது அறியாமையை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. அடுத்தபடியாக, ஜல்லிக்கட்டு போராட்டத்தை தேச விரோதப் போராட்டம், சமூக விரோதப் போராட்டம், தீவிரவாதப் போராட்டம் என்று தமிழக சட்டமன்றப் பேரவையில் நான் பேசியதாக குறிப்பிட்டு இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. உண்மை நிலை என்னவென்றால், இதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டவுடன், இப்போராட்டத்தை முதன் முதலில் ஆரம்பித்த ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகரன், ஜல்லிக்கட்டு ஆர்வலர் கார்த்திகேய சிவசேனாதிபதி, பெரியவர் அம்பலத்தரசர், ராஜேஷ், ஹிப் ஹாப் தமிழா என்கிற ஆதி ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கூடி போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது என்றும் அனைவரும் போராட்டத்தை கைவிடுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இதனையும் மீறி ஒரு சிலர் காவிரி நதிநீர் விவகாரம், முல்லைப் பெரியாறு பிரச்சினை, பன்னாட்டு வர்த்தகங்கள் மீதான தடை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்ததோடு, இந்திய இறையாண்மைக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரித்து தனித் தமிழ்நாடாக அறிவிக்க வேண்டுமென்றும், இந்தியக் குடியரசுத் தினத்தை கருப்பு தினமாக அறிவிக்க வேண்டுமென்றும் கூறினார். இதற்கான ஆதாரங்களை காவல் துறையினர் அளித்ததன் அடிப்படையில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தான் நான் சட்டமன்றப் பேரவையில் எடுத்து விளக்கினேனே தவிர, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நான் ஒருபோதும் தேச விரோதிகள் என்றோ, தீவிரவாதிகள் என்றோ, சமூக விரோதிகள் என்றோ குறிப்பிடவில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் அவர்களிடம் நான் எடுத்துக்கூறுவதற்காக டெல்லி செல்லவிருந்த சமயத்தில் போராட்டக்காரர்கள் என்னைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டபோது, உடனடியாக என்னுடைய டெல்லி பயணத்தை சற்று தள்ளிவைத்து விட்டு அவர்களுடன் உரையாடினேன். நான் டெல்லி செல்ல இருக்கிறேன் என்று அவர்களிடம் எடுத்துச் சொன்னபோது, அவர்களும் முழு திருப்தியடைந்து, நீங்கள் சென்று வாருங்கள் என்று என்னை வழியனுப்பினார்.
மீனவர்களைப் பேராசைக்காரர்கள் என்று சொல்வது, இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று சொல்வது, காமராசர், ராஜாஜி, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என நாடு போற்றக்கூடிய மக்களை, தலைவர்களை பழித்துப் பேசுவது என்பது திமுகவிற்கு கைவந்த கலை. இதுபோன்ற செயலில் அதிமுக எப்போதும் ஈடுபடாது என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு குறித்து என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி விஷமப் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவருக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதுபோன்ற அவதூறுகளை பரப்புவது என்பது முதல்வர் பொறுப்பில் இருப்பவருக்கு அழகல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மனமறிந்து பொய் பேசினால் மனதே நம்மைத் தண்டிக்கும் என்ற திருவள்ளுவரின் வாய்மொழியினை இந்தத் தருணத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago