விருதுநகர் அருகே 1 வயது பெண் குழந்தை ரூ.2.30 லட்சத்திற்கு விற்பனை: தாய் உள்பட 9 பேர் கைது

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகரில் ஒரு வயது பெண் குழந்தையை ரூ.2.30 லட்சத்திற்கு விற்பனை செய்த தாய் உள்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் அருகே உள்ள செவல்பட்டியைச் சேர்ந்தர் கலைச்செல்வி (25). கணவனை இழந்து இவர் தனது ஒரு வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே, கலைச்செல்வியின் குழந்தை திடீரென மாயமனதாக கூறப்படும் நிலையில், அக்கம்பக்கத்தில் உடனடியாக சந்தேகத்தின் பேரில் சைல்டு லைன் 1098-க்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர். அதையடுத்து விஏஓ சுப்புலட்சுமி மற்றும் சூலக்கரை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று கலைச் செல்வியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, தனது பெண் குழந்தையை ரூ.2.30 லட்சம் விலை பேசி ஒரு கும்பலிடம் விற்றதாக கலைச் செல்வி தெரிவித்துள்ளார். அதையடுத்து சூலக்கரை காவல் ஆய்வாளர் விநாயகம் தலைமையில் உதவி காவல் ஆய்வாளர்கள் கார்த்திகா மற்றும் பாண்டியராஜன் தலைமையிலான இரு தனிப்படைகள் அமைத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

விசாரணையில், திருமண புரோக்கர்களாக இயங்கி வந்த கும்பல் ஒன்று குழந்தையை விலைக்கு வாங்கி மதுரையில் உள்ள குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு விற்றது தெரியவந்தது. மேலும் குழந்தை விற்பனையில் மதுரை, கோவை மற்றும் திருப்பூரை சேர்ந்த பலர் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அதையடுத்து மதுரைக்குச் விரைந்த தனிப்படை போலீஸார் ஜெய்ஹிந்த் புறத்தில் இருந்த குழந்தையை மீட்டனர்.

இது குறித்து சூலக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாய் கலைச்செல்வி, குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதிகளான மதுரையைச் சேர்ந்த கருப்பசாமி, பிரியா, பிரியாவின் தந்தை கருப்பசாமி, குழந்தையை விலைக்கு வாங்கி விற்ற மகேஸ்வரி, மாரியம்மாள், இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட கார் ஓட்டுனர்கள் சிவகாசியை சேர்ந்த கார்த்திக், செண்பகராஜன் மற்றும் புரோக்கர் நந்தகுமார் ஆகியோரை இன்று அதிகாலை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து இரு சொகுசு கார்களையும் குழந்தையை விற்ற பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE