உண்மையான பயனாளிகள் அனைவருக்கும் நகைக்கடன் ரத்து செய்துவிட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: 'உண்மையான பயனாளிகள் அனைவருக்கும் நாங்கள் ரத்து செய்துவிட்டோம். 13 லட்சம் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஆட்சிதான் இந்த ஆட்சி' என்று நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

என்னதான் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஊர் ஊராகச் சென்று, தங்களுடைய கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டாலும், தமிழ்நாட்டு மக்கள் அவர்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டார்கள்! ஏன் என்றால், இந்த அரசு செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு சென்றுக் கொண்டிருக்கிறது. அதனுடைய பயனை அனுபவிப்பவர்கள் அனைத்து இல்லங்களிலும் இருக்கிறார்கள்!

ஏன், அ.தி.மு.க. தொண்டர்களும் பயன்பெறுகிறார்கள்! இதை அனைத்தும், அ.தி.மு.க. அரசு நிதிநிலையை சீரழித்த நிலையிலும் சாதித்திருக்கிறோம்! சீரழிப்பது மட்டும்தான் ‘பழனிசாமி - பன்னீர்செல்வத்துக்குத்’ தெரியும். அவர்கள் நிதிநிலைமையை எவ்வாறு சீரழித்தார்கள் என்று சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டு அரசிற்கு இப்போது ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் கடன். இதுதான் அ.தி.மு.க. விட்டுவிட்டுப் சென்ற நிதிநிலைமை. 2011-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது, தமிழ்நாட்டினுடைய கடன், சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்தான் இருந்தது. அதிலும் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்த கடனுடைய தொடர்ச்சிதான். ஆனால், கடந்த பத்தாண்டுகாலத்தில் மட்டும், ஐந்தரை லட்சம் கோடி ரூபாயாக கடனை உயர்த்தி, தமிழ்நாட்டை கடனாளி மாநிலம் ஆக்கியது அ.தி.மு.க.தான்!

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், 60 ஆண்டுகளாக 1 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடனை, பத்தே ஆண்டுகளில் ஐந்தரை லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தி, நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, மலையளவு கடனை வைத்துவிட்டுத் தமிழ்நாட்டு நிதிநிலைமை வரலாற்றில் ஒரு தலைக்குனிவை ஏற்படுத்திச் சென்றுவிட்டார்கள். இப்போது நாம் தமிழ்நாட்டையும்- தமிழ்நாட்டின் நிதிநிலைமையையும் தலைநிமிர வைத்துக் கொண்டிருக்கிறோம்.

இப்படிப்பட்ட நிலையில்தான், நான் சொன்ன மக்கள் நலத் திட்டங்களை- உதவிகளை தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்திருக்கிறோம். அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த முறைகேடுகளை களைந்து மக்களுக்கு நகைக்கடளைத் தள்ளுபடி செய்தோம்! அ.தி.மு.க. ஆட்சியில் எவ்வாறெல்லாம் நகைக்கடன் முறைகேடுகள் நடந்தது என்று கேட்டீர்கள் என்றால், போலி நகைகளை வைத்துக் கடன் வாங்கியிருக்கிறார்கள். நகைகளே இல்லாமல், நகைகளை வைத்தது மாதிரியும் பொய்க் கணக்கு காட்டியிருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வங்கியில், 500 நகைப் பொட்டலங்களில், 261 பொட்டலங்களில் நகைகளே இல்லை! வெறும் பொட்டலம்தான் இருக்கிறது. அதை வைத்து மட்டும், ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் ஒருவர், 11 லட்சத்து 33 ஆயிரத்து 500 ரூபாய்க்கு கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்திருக்கிறார். ஒரே நபர், 5 சவரன் அடிப்படையில் 625 நகைக் கடன்கள் மூலம், ஒன்றேகால் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். இன்னொருவர், 647 நகைக்கடன்கள் மூலம், 1 கோடியே 47 லட்சம் ரூபாய் நகைக் கடன் பெற்றுள்ளார். ஒரே ஒரு ஆள் 7 கோடி ரூபாய் வரைக்கும் கடன் வாங்கியிருக்கிறார். இன்னும் ஏராளம் உள்ளது.

எந்தத் திட்டமாக இருந்தாலும், அதற்கான பயனாளிகள், உண்மையாக இருக்க வேண்டும். அதுதான் அரசின் திட்டங்களில் மிகமிக அடிப்படையானது. மக்கள் வரிப்பணத்தில் நிறைவேற்றுகிற திட்டங்களை பொறுப்பாக செயல்படுத்த வேண்டும். கூட்டுறவு அமைப்புகளை மோசடியாகப் பயன்படுத்தி இதுபோலக் கடன் பெற்றவர்களைப் பிரித்தெடுத்துவிட்டோம். அ.தி.மு.க.வினரை வைத்து செய்த நகை மோசடிக்கு, வெறும் பொட்டலத்துக்கு “ஏன் நகைக்கடன் தள்ளுபடி பண்ணவில்லை”என்று பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கேட்கிறார்கள். உண்மையான பயனாளிகள் அனைவருக்கும் நாங்கள் ரத்து செய்துவிட்டோம். 13 லட்சம் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஆட்சிதான் இந்த ஆட்சி" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE