மக்களின் வறுமையை தேர்தலில் சாதகமாக பயன்படுத்துகின்றனர்: பிரேமலதா விஜயகாந்த் தாக்கு

By க.சக்திவேல்

"சட்டப்பேரவை தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களின் வாக்குளைப் பெற்று ஏமாற்றிவிட்டனர்" என திமுக மீது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.

கோவையில் தேமுதிக சார்பில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து குறிச்சி பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் பேசியது: "கோவையில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய அமைச்சரும் ரூ.2 ஆயிரம், ரூ.4 ஆயிரம் என பணத்தை வழங்குவதில்தான் போட்டிபோட்டு வருகின்றனர். மக்களுக்கோ, கோவைக்கோ ஏதேனும் நல்லது செய்வார்களா என்று சிந்தித்தால், அதற்கு பதில் எங்கேயும் இல்லை. டிபன் பாக்ஸ் அளிப்பது, அதற்குள் பணத்தை வைத்து அளிப்பது, குடோனில் பதுக்கிவைத்து அளிப்பது என மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதுபோன்று மக்களை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஏமாற்றப்போகிறார்கள் என்பதும் தெரியவில்லை.

தேர்தல் நேரத்தில் அவர்கள் அளிக்கும் தொகை இன்று ஒருநாள் செலவுக்கு போதாது. மக்கள் கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு இல்லை. வருமானம் இல்லை. வறுமையின் உச்சத்தில் இன்று மக்கள் உள்ளனர். இதை அவர்கள் இன்று சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வாக்குக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தைதான் ஊக்கப்படுத்துகிறார்களே ஒழிய, வெற்றிபெற்ற பிறகு மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள் என கேள்வி கேட்டால் அதற்கு பதில் இல்லை. இதனால்தான் தமிழகமும், மக்களும் முன்னேறாத நிலை இங்கு உள்ளது.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை மாறி, மாறி ஆட்சி செய்தது திமுகவும், அதிமுகவும்தான். ஆனால், இங்கிருக்கும் பிரச்சினைகள் நிரந்தரமாக தீர்க்கப்பட்டிருக்கிறா என்றால், எதுவும் இதுவரை தீர்க்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகிவிட்டது. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத ஆட்சியாகத்தான் மக்கள் இதை பார்க்கிறார்கள்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு தரமில்லை, மகளிருக்கு மாதம் ரூ.1,000 அளிப்போம் என்றனர், அதை அளிக்கவில்லை. நீட் தேர்வு ரத்து, நகைக்கடன் தள்ளுபடி என எதையும் செய்யவில்லை. பொய் வாக்குறுதிகளை அளித்து, மக்களின் வாக்குளைப் பெற்று ஏமாற்றிவிட்டனர். இந்த எண்ணம் அனைத்து மக்களிடம் உள்ளது. வாக்குக்கு பணம் அளிக்காமல் நியாயமாக தேர்தல் நடந்தால் நிச்சயம் நல்ல வேட்பாளர்கள்தான் வெற்றிபெறுவார்கள். ஆனால், ஆளும்கட்சியினர் அதிகார பலத்தை பயன்படுத்தி மிரட்டி வருகின்றனர்.

எனவே, ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்க்காக வாக்களிக்காமல், உங்கள் வார்டில் எந்த வேட்பாளர் வெற்றிவெற்றால் நல்லது செய்வார் என்று சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும். தேமுதிகவினர் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் உழைத்து வருகிறீர்கள். நமக்கான எதிர்காலம் நிச்சயம் உண்டு” என்று பேசினார்.

பின்னர், தேமுதிக நிர்வாகி ஒருவரின் பெண் குழந்தைக்கு சம்யுக்தா என பிரேமலதா விஜயகாந்த் பெயர் சூட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE