மோடி வெற்றிபெறவா நான் இங்கு வேலைக்கு வந்தேன்? - கமல்ஹாசன்

By செய்திப்பிரிவு

கோவை: "மோடி வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் எனக்கு அதுப்பற்றி கவலையில்லை. தமிழகம் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை" என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கமல்ஹாசனுக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள், அப்புறம் மோடி வெற்றிபெற்று விடுவார். மோடி வெற்றிபெறவா நான் இங்கு வேலைக்கு வந்தேன். மோடி வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் எனக்கு அதுபற்றி கவலையில்லை. தமிழகம் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

மோடி எப்படி வெற்றிபெற வேண்டும் என்பதற்கான உக்தியெல்லாம் அவர் வைத்துள்ளார். அந்த உக்தியெல்லாம் பழிக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய ஆசையே தவிர, அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நான் எதுவும் செய்யமாட்டேன். ஏனென்றால், பி டீம் என்று சொல்லி பார்த்தனர். பிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை. இப்போது இப்படியெல்லாம் வீடுவீடாகச் சென்று கூறி வருகின்றனர்.

மோடி எப்படி கவுன்சிலராக வருவார். கவுன்சிலர் போட்டி என்பது நாம் நமது நாட்டுக்காகவும், வீட்டுக்காகவும் செய்யும் வேலை. எனவே அவர்கள் எல்லாம் இதில் என்ன நடக்கிறது என்பது குறித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்களே தவிர, இதுக்கெல்லாம் ஆசைபடமாட்டார்கள். இதிலிருந்து அவர்களது வெற்றி ஊர்ஜிதமாகாது என்று தெரியும். கால்வாய் கால்வாயாக வெட்டி வயிறை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இது இரண்டு கழகங்களுக்கும் பொருந்தும்.

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். கோவையில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், கொடுத்த வாக்குறுதிகளை ஒரு வருட காலத்துக்குள் நிறைவேற்றவில்லை என்றால், தன்னுடை பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன் என்று வீடுதோறும், உறுதிமொழி அளித்திருக்கிறார். இதுதான் நேர்மையின் மீது எங்களது வேட்பாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கை. அது எனக்கும் இருக்கிறது, இதையேதான் நான் அவர்களுக்கு அறிவுரையாக கூறியிருக்கிறேன்" என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE