மதுரையில் ‘ஒதுங்கிய’ அதிமுக முக்கிய நிர்வாகிகள்: கலக்கத்தில் மாநகராட்சி வேட்பாளர்கள்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வுடனான கோஷ்டி பூசலால் `ஒதுங்கி' நிற்கும் முக்கிய நிர்வாகிகள் கடைசி நேரத்தில் ஏதாவது உள்ளடி வேலையில் ஈடு படுவார்களோ என அதிமுக வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

மதுரை மேயராக 2011-2016 வரை அதிமுகவின் விவி.ராஜன்செல்லப்பா இருந்தபோது, மாநகரச் செயலாளராக இருந்த செல்லூர் கே.ராஜூ அமைச்சராகவும் இருந்தார். அதிமுகவில் இருவரும் இரு பெரும் கோஷ்டிகளாகச் செயல்பட்டனர். மாநகராட்சி விழாக்களுக்கு மேயர் ராஜன் செல்லப்பா அமைச்சரான செல்லூர் கே.ராஜூவை அழைக்க மாட்டார். அப்படியே விழாக்களில் கலந்து கொண்டாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மாட்டார்கள். அந்தளவுக்கு இருவரும் எதிரும், புதிருமாக அரசியல் செய்தனர்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ராஜன்செல்லப்பா மேயர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ வானதோடு புறநகர் கிழக்கு மாவட்டச் செய லாளரானார். ஆனால், ஒட்டுமொத்த மாநகர் கட்டுப்பாடும் செல்லூர் கே.ராஜூ வசமே இருந்தது.

கடந்த மக்களவைத் தேர்தலில் ராஜன் செல்லப்பா தனது மகனுக்கு ‘சீட்’ பெற செல்லூர் கே.ராஜூவின் தயவு தேவைப்பட்டதால் அவருடன் ராசியானார். கட்சியில் தன்னைவிட ஜூனியரான செல்லூர் கே.ராஜூவை தற்போதும் ‘மினிஸ்டர்’ என்றும், செல்லூர் கே.ராஜூவும் ராஜன் செல்லப்பாவை ‘அண்ணே’ என்றும் அழைத்து பரஸ்பரம் நட்பு பாராட்டுகின்றனர். ஆனால், ராஜன்செல்லப்பா மேயராக இருந்த காலத்தில் செல்லூர் கே.ராஜூ தன்னை எதிர்த்து அரசியல் செய்தவர்களைக் கட்டம் கட்டினார்.

அதனால், மாநகரில் செல்லூர் கே.ராஜூவுக்கு எதிராக முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் (துணை மேயராக இருந்தவர்), முன்னாள் தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன், முன்னாள் மண்டலத் தலைவர்கள் ராஜபாண்டி, சாலைமுத்து, கண்ணகி பாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர் வாகிகள் பலர் மற்றொரு கோஷ்டியாகவும் செயல்பட்டனர். தனித்தனி கோஷ்டியாகச் செயல்பட்டதால் அவர்களால் கட்சியில் செல்வாக்குப் பெற முடியவில்லை.

ஆனாலும், செல்லூர் கே.ராஜூவை மீறி முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ சரவணன் ஆகியோர் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ‘சீட்’ பெற்றனர். தோல்வியடைந்ததால் மாநகர் அதிமுகவில் செல்லூர் கே.ராஜூவை மீறிச் செயல்பட முடியவில்லை. அதனால், கோபாலகிருஷ்ணன், சரவணன் மற்றும் இதுபோன்ற முக்கிய நிர்வாகிகள் பலர் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தீவிர கட்சிப் பணியாற்றாமல் ஒதுங்கியே இருந்தனர். இந்நிலையில் மாநகராட்சித் தேர்தலில் செல்லூர் கே.ராஜூவால் முன் னாள் மண்டலத் தலைவர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் 40 சதவீதம் பேருக்கு ‘சீட்’ கிடைக்கவில்லை. இதில், சாலைமுத்து மட் டும் கட்சித் தலைமையிடம் பேசி ‘சீட்’ பெற்று விட்டார்.

மற்றவர்களில் சிலர் சுயேச்சையாகவும், சிலர் மாற்றுக்கட்சிகளுக்கும் சென்று போட்டியிடுகின்றனர். அவர்களால் அந்த வார்டுகளில் அதிமுகவின் வெற்றிக்கு சிக் கல் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன், தற்போது வரை பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. தலைவர்கள் மதுரை வரும்போது மட்டும் அவர் தலைகாட்டுகிறார். முன்னாள் எம்எல்ஏ சரவணன் அவரது பகுதியில் அதிமுக வேட்பாளர்களுக்கு சில நாட்களாகப் பிரச்சாரம் செய்கிறார். ‘சீட்’ கிடைக்காத மற்ற நிர்வாகிகள் வீட்டிலேயே முடங்கிவிட்டனர்.

மதுரை மாநகர் நிர்வாகிகள் பலர் தேர்தல் வேலையில் கவனம் செலுத்தாமல் `ஒதுங்கி' இருப்பதால், தற்போது 100 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள், கோஷ்டி அரசியலால் உள்ளடி வேலைக் குள்ளாகி வெற்றிவாய்ப்பு பறிபோகுமோ? என்ற கலக்கத்தில் உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE