'கோட்டையில் பணிகள், கரோனா கட்டுப்பாடுகள்...' - காணொலி பிரச்சாரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

By செய்திப்பிரிவு

"நான் கரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, காணொலி வழியாகப் பரப்புரை செய்வதை சிலர் குறை சொல்கிறார்கள்; விமர்சனம் செய்கிறார்கள். நான் நேரடி பரப்புரை செய்தால், கூடுகின்ற கூட்டத்தை பார்த்து இவர்கள் என்னவெல்லாம் பேசுவார்கள் என்று அனைவருக்கும் நன்றாக தெரியும்" என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காணொலி வாயிலாக அவர் இன்று ஆற்றிய உரை: காவிரியில் தமிழ்நாட்டின் உரிமை காத்த - காக்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான். மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து வாக்களித்ததன் மூலமாக, ஒட்டுமொத்த இந்திய வேளாண் பெருங்குடி மக்களுக்கே, துரோகியாக விளங்கியவர்தான் பழனிசாமி. அவரை ‘பா.ஜ.க’ பழனிசாமி என்றே அழைக்கலாம். அந்தளவிற்கு பா.ஜ.க. வாய்ஸில் ‘மிமிக்ரி’ செய்துகொண்டு இருக்கிறார்.

வயிற்றுக்குச் சோறுபோடும் வேளாண் உழவர்கள், தங்களுடைய உரிமைகளை பாதுகாக்கப் போராடினால், அவர்களை பார்த்து ‘தரகர்கள்’என்று ஒருவர் சொல்கிறார் என்றால், அவருக்கு எப்படிப்பட்ட கல் நெஞ்சம் இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.‘நானும் ஒரு விவசாயிதான்’என்று பச்சைத் துண்டு போட்டு வேஷம் போட்டார். பச்சைத் துண்டை தோளில் போட்டுக்கொண்டு நாடகமாடி, உழவர்களுடைய தலையில் துண்டு போட திட்டம் போட்டவர்தான் பழனிசாமி. அப்படிப்பட்ட துரோகம் செய்த பழனிசாமியைத்தான் இந்தத் தேர்தலில் நீங்கள் தோற்கடிக்க வேண்டும். ஏற்கெனவே நீங்கள் தோற்கடித்தீர்கள். அப்போதும் அவர் பாடம் கற்றுக்கொள்ளாமல் பாதம் தாங்குவதிலேயே குறியாக இருக்கிறார்.

பழனிசாமி, உழவர்களுக்கு செய்த துரோகம் ஒன்றா இரண்டா? காவிரியில் 14.75 டி.எம்.சி. நீரைக் கோட்டை விட்டார்; நெல், அரிசி பதுக்கும் சட்டத்தை ஆதரித்தார்; பேராசிரியர் ஜெயராமனை சிறையில் அடைத்தார்; எட்டுவழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்த உழவர்கள் மீது ஈவு இரக்கமின்றித் தடியடி நடத்தினார்; குடிமராமத்து திட்டத்தில் ஊழல் செய்தார்; கால்வாய் தூர்வாரும் பணியிலும் கரன்சியைத் தூர்வாரினார்; கிசான் திட்டத்தில், உழவர்கள் பெயரில் 6 லட்சம் போலிகளை உருவாக்கி, மோசடி செய்தார்; கஜா புயலில் விழுந்த மரங்களை அகற்றியதில் கூட ஊழல் செய்தார்; உழவர்களின் கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்திலேயே வழக்குப் போட்டார். இவ்வாறு உழவர்களுக்கு நாள்தோறும் துரோகத்தை மட்டுமே செய்தவர் பழனிசாமி.

மூன்று வேளாண் சட்டங்களைத் தி.மு.க. கடுமையாக எதிர்த்தது. நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். உழவர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்று வாதிட்டோம். உழவர்களின் நலனுக்கு முற்றிலும் எதிரானது என்று சுட்டிக்காட்டினோம். இது கார்ப்பரேட்களுக்கு கைகொடுக்கின்ற சட்டம் என்று சொன்னோம். ஆனால், இதை உழவர்களுக்கு பயனளிக்கின்ற சட்டம் என்று பழனிசாமி சொன்னார்.

ஆனால், இப்போது என்ன நடந்தது? உழவர்களின் போராட்டத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு பணிந்தது. மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. சட்டத்தைக் கொண்டுவந்து உழவர்களை வஞ்சிக்க நினைத்த பிரதமர் மோடியே பின்வாங்கி, உழவர்களின் நெஞ்சுரத்தின் முன்பு தோல்வியடைந்து நிற்கிறார். இறுதியில் உண்மைதான் வென்றுள்ளது. பழனிசாமி உழவர்களின் தலையில் போட நினைத்த துண்டு, அவரது தலையிலேயே விழுந்துள்ளது. நான் பழனிசாமியைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்... பா.ஜ.க.விற்கு ஒரு ஆபத்து என்றால் ஓடோடி வந்து முட்டுக்கொடுத்து, ‘டப்பிங் பேசும்’ பழனிசாமி, இப்போதாவது போராடிய உழவர்களை ‘தரகர்கள்’ என்று கொச்சைப்படுத்தியதற்கும், மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததற்கும் - வேளாண் பெருங்குடி மக்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா? பதவியை பெற கூவத்தூரில் மண்டியிட்டு தவழ்ந்தீர்களே, உழவர்களுக்குச் செய்த துரோகத்திற்கும் மண்டியிட்டு மன்னிப்புக் கேளுங்கள். பெரிய மனது படைத்தவர்கள் நமது உழவர்கள். நிச்சயம் உங்களை மன்னிப்பார்கள்.

இன்று உழவர் பெருமக்களுக்கான திமுக அரசு நடக்கிறது. திமுக அரசுதான், ஆட்சிப் பொறுப்பேற்ற மேடையிலேயே உழவர்களின் 7000 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்த தலைவர் கருணாநிதியின் அரசு. இலவச மின்சாரம் கொடுத்த அரசு. மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய துணிச்சலாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய அரசு. இப்போது, வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கையைத் தந்துள்ள அரசு. நானும் ஒரு விவசாயிதான் என்று சொல்லிக்கொண்டு, பழனிசாமி தன்னுடைய ஆட்சிக்காலத்தில் வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தாரா? இல்லை.

கடந்த முறை நான் தஞ்சை வந்தபோதே, மாவட்ட ஆட்சியர் ஒரு மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னார். கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு, சாதனையாக நெல் சாகுபடி அதிகம் ஆகியிருக்கிறது என்று அவர் சொன்னார். 48 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை அளவாக, 1 லட்சத்து 66 ஆயிரத்து 135 ஏக்கர் பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு இருப்பதாகவும் சொன்னார். குறுவை இலக்கு என்பது 1 லட்சத்து 6 ஆயிரத்து 250 ஏக்கர்தான். அதையும் தாண்டி மிக அதிகமாக நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சாதனைகளை அடைய அரசு எடுத்த பல்வேறு முயற்சிகள்தான் காரணம்.

இதுதான் உண்மையான சாதனை. நான் என்னை உழவன் என்று சொல்லிக்கொள்வதில்லை. ஆனால், உண்மையில் அவர்களுக்கு என்ன தேவையோ அதை அறிந்து, புரிந்து நான் செயல்பட்டேன். பழனிசாமியைப் போல வெளிவேஷம் போட்டு ஏமாற்றவில்லை. இத்தகைய சாதனைகளின் அரசுதான்- திமுக அரசு. ஆனால் ஊழல்கள், முறைகேடுகளின் ஆட்சியாக கடந்தகால அதிமுக ஆட்சி அமைந்திருந்தது.

‘அதிமுகவை எதிர்க்க தி.மு.க.விற்குத் தெம்பும் திராணியும் இல்லை' என்று, பழனிசாமி பேசியிருக்கிறார். அவர் தூக்கத்தில் பேசுகிறாரா என்று தெரியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதியைத் தவிர, அனைத்திலும் அதிமுக கூட்டணியைத் தோற்கடித்திருக்கிறோம். சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்திருக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் கொடுத்த தீர்ப்பை பழனிசாமி மறந்துவிட்டாரா? தனது பதவியை வைத்து, தமிழ்நாட்டு மக்களுக்குத் துளியும் நன்மையைச் செய்யாத பழனிசாமிக்கு, ஊழல் முறைகேடுகளில் மட்டுமே அக்கறையாக இருந்த பழனிசாமிக்கு, இப்போதுதான் மக்களைப் பற்றி நினைவு வந்திருக்கிறது போல.

மக்களால் புறந்தள்ளப்பட்ட இந்தக் கூட்டம் மீண்டும் வாக்கு கேட்டு வருகிறது. நான் கரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, காணொலி வழியாகப் பரப்புரை செய்வதை சிலர் குறை சொல்கிறார்கள்; விமர்சனம் செய்கிறார்கள். நாள்தோறும் மக்களோடு மக்களாக இருக்கும் நான் நேரடி பரப்புரை செய்தால், கூடுகின்ற கூட்டத்தை பார்த்து இவர்கள் என்னவெல்லாம் பேசுவார்கள் என்று அனைவருக்கும் நன்றாக தெரியும்.

நாள்தோறும் கோட்டையில் பணிகளை முடித்துவிட்டு, மாலையில் காணொலி வாயிலாக உங்களைச் சந்தித்து, நம்முடைய அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு ஆதரவு கேட்கிறேன். சிலர் கடந்தகாலத்தில், கொரோனா கட்டுப்பாடுகளை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளைப் பரப்புரைக்கு அனுமதிக்காமல், ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் அவர்கள் மட்டும் பரப்புரைக்கு சென்றார்கள். மக்கள் ஆதரவு தந்தார்களா? ரிசல்ட் என்ன ஆனது? நியாபகம் இருக்கிறதா? பச்சைப் பொய்களைக் கூறி அனைவரையும் ஏமாற்றிட முடியாது என்பதை, பழனிசாமி - பன்னீர்செல்வம் காமெடி நாடகக் கம்பெனி உணர வேண்டும். இப்போதும் மக்கள் அதை உணர்த்தத்தான் போகிறார்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்