சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அந்தப் பகுதிக்கு வந்து செல்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்று சொல்லிக் கொண்டு கச்சத்தீவை தாரை வார்த்தது, காவேரி பிரச்சினை தொடர்பாக 1971-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை சத்தமில்லாமல் திரும்பப் பெற்றது, ஐம்பது ஆண்டு கால ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியது, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடத் தவறியது, ராஜீவ் காந்தி மறுவாழ்வு திட்டத்தை பொதுத் துறை வங்கிகள் மூலம் செயல்படுத்த மத்திய அரசை தூண்டியது, 150 மெகாவாட் திறனுடைய பைக்காரா இறுதி நிலை புனல் மின் திட்டத்தை நீலகிரி மாவட்டத்தில் ஏற்படுத்த முட்டுக்கட்டை ஏற்படுத்தியது, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ஒப்புதலைத் தராமல் தடைக் கற்களை ஏற்படுத்தியது என்ற வரிசையில் தற்போது முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாத காலத்திற்குள்ளாகவே, கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர், கேரள வருவாய்த் துறை அமைச்சர் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் முன்னிலையில் முதன்முறையாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதன் மூலம் தமிழகத்தின் உரிமை கேரளாவிடம் அடகு வைக்கப்பட்டுவிட்டது. இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் நான் கோரிக்கை விடுத்தும் சரியான விளக்கம் ஏதும் அரசு சார்பில் அளிக்கப்படவில்லை. இது முதல் துரோகம்.
இதனைத் தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணையின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு மற்றும் அதனுடைய கட்டமைப்புகள் திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்துவிட்டு, அணையின் பாதுகாப்பினை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அணைப் பகுதிகளில் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள ஒத்துழைக்காத கேரள அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் மனுத் தாக்கல் செய்திருக்கிறது. இதன்மூலம் வலுவான வாதங்கள் தமிழக அரசு சார்பில் வைக்கப்படவில்லையோ என்ற சந்தேகம் முல்லைப் பெரியாறு விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது. இது இரண்டாவது துரோகம்.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்து, நீர்மட்டம் உள்ளிட்ட தகவல்களைப் பெற கேரள அரசின் சார்பில் பொறியாளர் நியமிக்கப்பட வேண்டும் என்று கேரள நீர்வளத் துறை அமைச்சர் பேசியதையடுத்து, கேரள நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ், செயற் பொறியாளர் ஹரிகுமார் ஆகியோர் தலைமையிலான குழு முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அணை மற்றும் அதன் ஷட்டர்களை பார்வையிட்டு சென்றதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இது மூன்றாவது துரோகம்.
மத்திய நீர் ஆணையம், மத்திய நீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி நிலையம், இந்திய புவியியல் அளவைத் துறை, பாபா அணு ஆராய்ச்சி மையம், மத்திய மண் மற்றும் கட்டுமானப் பொருள்கள் ஆராய்ச்சி நிலையம் போன்றவற்றின் சேவைகளைப் பயன்படுத்தி அதன் அடிப்படையில் அதிகாரம் படைத்த குழு (Empowered Committee) முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துள்ளது.
மேலும், முல்லைப் பெரியாறு அணை தமிழகத்துக்குச் சொந்தமானது என்பதும், அதன் பராமரிப்புப் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. எனவே, அந்தப் பகுதியில் கேரள அமைச்சர்களும், அதிகாரிகளும் வந்து தண்ணீர் திறந்துவிடுவதும், அணையை ஆய்வு செய்வதும், மதகுகளின் கதவுகளை மேற்பார்வையிடுவதும், இதனை தமிழக அரசு கண்டும் காணாமல் வேடிக்கைப் பார்ப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
கேரள அரசின் இதுபோன்ற தன்னிச்சையான நடவடிக்கை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என்பதும், கேரள அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டும் காணாமல் இருப்பது பின்னாளில் கேரள அரசு உரிமை கோர வழிவகுத்துவிடும் என்பதும், முல்லைப் பெரியாறு அணையின் ஒரே உரிமையாளர் தமிழகம் தான் என்பது நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதும் விவசாயிகளின் கருத்தாக இருக்கிறது.
எனவே, தமிழக முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அந்தப் பகுதிக்கு வந்து செல்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்றும் அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago