உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், ’உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில், அவர் மீதான குற்ற வழக்கு குறித்த விவரங்களை முழுமைமையாக தெரிவிக்கவில்லை. எனவே அவரது வேட்புமனுவை ஏற்றது தவறு’ என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு, பலமுறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் தரப்பில் வாதங்களை தொடங்காமல் தொடர்ந்து கால அவகாசம் கேட்கப்பட்டது. உரிய நேரத்தில் வாதங்களை தொடங்காவிட்டால், மனுவின் தன்மைக்கு ஏற்ப உத்தரவு பிறப்பக்கப்படும் என நீதிபதி எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ரவி தரப்பில், தேர்தல் வழக்கை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது உதயநிதி தரப்பில், தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், மனுதாரரை வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க கூடாது எனவும் வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE