கும்பகோணம்: மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை உருவாக்கும் பணி தொடக்கம்

By வி.சுந்தர்ராஜ்

கும்பகோணம்: ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த இந்தியாவின் முன்னாள் முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலைக்கான வார்பட நிகழ்வு கும்பகோணத்தில் நடைபெற்றது.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு, கடலூரைச் சேர்ந்த ஷைன் இந்தியன் சோல்ஷர் சோசியல் நல அறக்கட்டளை சார்பில் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான 120 கிலோ எடையில் மார்பளவு ஐம்பொன் சிலை கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து ஐம்பொன் சிலையை வடிப்பதற்கான வார்பட நிகழ்வு நேற்று மாலை, கும்பகோணம் அரியத்திடல் ராமசாமி சிற்பக் கூடத்தில், அறக்கட்டளை நிறுவனர் மிலிட்ரி பாபு தலைமையில் நடைபெற்றது.

இதில், பிபின் ராவத் உருவப்படத்தை வைத்து பூர்ணாஹூதி நடத்தப்பட்டு, பின்னர் ஐம்பொன் சிலைக்கான வார்ப்பு நடைபெற்றது. இதுகுறித்து அறக்கட்டளையின் தலைவர் மிலிட்டரி பாபு கூறும்போது, "130 கோடி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சேவையில், தன்னை ஈடுபடுத்திக் கொண்டு படிப்படியாக உயர்ந்து உலகின் மாபெரும் சக்தியாக விளங்கி, இந்திய திருநாட்டின் முப்படை தளபதியாக சிறப்பாக சேவையாற்றி வந்த சமயத்தில், தமிழகத்தில் குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் வீரமரணமடைந்தார்.

ஆனால், அவர் மறைந்தாலும், இந்த நாட்டு இராணுவ வீரர்களின் நாடி, நரம்பு, குருதியில் கலந்துள்ள அவருக்கு உயிர்ப்பு கொடுக்கும் நோக்கில் முப்படைத் தளபதி பிபின் ராவத்துக்கு திரு உருவச்சிலையை உருவாக்க முடிவெடுத்தோம். இதுவரை ராணுவ வீரர்களுக்கு ஐம்பொன்னால் சிலை எங்கும் உருவாக்கப்படவில்லை. எனவே, ஒரு ராணுவ வீரருக்காக உருவாக்கப்படும் உலகின் முதல் ஐம்பொன் சிலையை, இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழ்ந்துகொண்டிருக்கும் தமிழக மண்ணில் எங்களது அமைப்பின் மூலம், முன்னாள் படைவீரர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவோடும் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது.

சிலைக்கான பணிகள் நிறைவடைந்ததும், உருவச்சிலையை சிதம்பரத்திலிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக ஆறு மாநிலங்கள் வழியாக புதுடெல்லிக்கு கொண்டு சென்று இந்தியா கேட் அருகே உள்ள போர்வீரர்கள் நினைவிடத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தற்போதைய முப்படை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாவானே ஆகியோர் முன்னிலையில் ஒப்படைக்க உள்ளது" என்றார்.

இந்த நிகழ்வில், சிட்டி யூனியன் வங்கி பவுண்டேஷன் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன், ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்ட தலைவர் திருவடிக்குடில் சுவாமிகள், கும்பகோணம் அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் சத்திய நாராயணன், ஸ்தபதி ராம்குமார், தொழிலதிபர்கள் சவுமிய நாராயணன், கடலூர், வி.பாலு, சிதம்பரம் சாம்போசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில், அறக்கட்டளையின் துணைத் தலைவர் சுரேஷ்கண்ணன், ஒருங்கிணைப்பாளர்கள் பி.எம். அரவிந்த், ரங்காசேட், சுபேதார் குமார், சாரல்சங்கர், கும்பகோணம் முன்னாள் படைவீரர்கள் மேஜர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE