திமுகவின் பொய் வாக்குறுதிகளுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து

“திமுகவின் பொய் வாக்குறுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது: திமுகவினர் சதி செய்து பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துவிட்டனர். மொத்தம் 505 பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளனர். ஆட்சி பொறுப்பேற்று 10 மாதங்கள் ஆகியும் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. ஆட்சி பொறுப்பேற்றதும் தனது முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்துக்கு தான் என, மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால், ரத்து செய்ய முடியவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றிய இயக்கம் அதிமுக தான். முதலில் பொங்கல் பண்டிகைக்கு ரூ.1,000 கொடுத்தோம். 2021-ம் ஆண்டு ரூ.2,500 கொடுத்தோம். ஆனால், திமுக ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. அவர்கள் கொடுத்த பொங்கல் தொகுப்பு பொருட்களும் தரமற்றவை.

திமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். திமுகவின் பொய் வாக்குறுதிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். தமிழகத்தில் அதிமுகவுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ஒற்றுமையாக பணியாற்றி வெற்றிபெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ, தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னப்பன், மோகன், மாநில அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, தமாகா வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE