அரசின் அன்றாட நடவடிக்கைகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசின் அன்றாட நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் எம்.காச்சுபாத்திமா, உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஆசிரியர் பொது இடமாறுதல் தொடர்பான பள்ளிக் கல்வித் துறை 17.12.2021-ல் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து, பொது இடமாறுதல் கலந்தாய்வில் தன்னை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிஎஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பாக 17.12.2021-ல் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள், தற்போது பணிபுரியும் இடத்தில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்றநிபந்தனையில் இருந்து மாற்றுத்திறனாளிகள், தொடர் சிகிச்சை பெற வேண்டிய ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தன்னையும் கலந்தாய்வில் அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார்.

இடமாறுதலை அரசு ஊழியர்கள் உரிமையாகக் கோர முடியாது. நிர்வாக காரணங்களுக்காக இடமாறுதல் நடைபெற வேண்டும். இடமாறுதலுக்காக அரசு தனி கொள்கை முடிவு எடுத்து அரசாணை பிறப்பித்துள்ளது. கலந்தாய்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களின் தகுதிகளை சரிபார்த்து, உரிய முடிவு எடுப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

இடமாறுதல் கொள்கையை அதிகாரிகள் கடுமையாக அமல்படுத்த வேண்டும். இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பவர்களின் தகுதியை ஆய்வு செய்து அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும்.இடமாறுதல் கொள்கையை நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்துவதில் நீதிமன்றத்தின் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. அரசின் அன்றாட நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது.

இந்த வழக்கில் மனுதாரர்இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க தனக்கு தகுதியிருப்பதாகவும், தற்போது பணிபுரியும் இடத்தில் ஓராண்டாகப் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய முடிவெடுக்கலாம்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE