அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரத்தில் ரகசிய கூட்டத்தில் பங்கேற்ற 4 பேருக்கு அதிமுகவில் சீட் கிடைக்கவில்லை

By அ.வேலுச்சாமி

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான போராட்டம் தொடர்பாக நடைபெற்ற ரகசியக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர், முன்னாள் அமைச்சர்களுக்கு அதிமுக வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியக்குழுத் தலைவரான கெங்கையம்மாள், அவரது கணவர் சொக்கலிங்கம் உள்ளிட்டோரை ஜாதி பெயரைக் கூறி தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டியதாக கடந்த அக்டோபர் மாதம் புகார் எழுந்தது. இதையடுத்து விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுக்கோட்டையில் கடந்த நவம்பர் 5-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட முத்தரையர் சமுதாய அமைப்பினர் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் பதற்றமான சூழல் உருவானது.

இதையடுத்து, அதிமுகவில் முக்கிய பொறுப்பிலுள்ள முத்தரையர் சமுதாய நிர்வாகிகள் கடந்த நவம்பர் 6-ம் தேதி திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ரகசிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். அதில், அமைச்சர் பூனாட்சி, எம்எல்ஏக்கள் சிவபதி, பரஞ்சோதி, கு.ப.கிருஷ்ணன், வளர்மதி, முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்கான காரணம் குறித்து கேட்டபோது, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, கட்சியின் மேலிட உத்தரவுப்படி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாக அதிமுகவினர் தெரிவித்தனர்.

அதேசமயம், உளவுத் துறையினர் நடத்திய விசாரணையில், விஜயபாஸ்கருக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில், அதிமுகவில் உள்ள முத்தரையர் சமுதாய நிர்வாகிகள் சிலர் இருப்பதாகவும், ரகசிய கூட்டத்தில் அவர்களும் கலந்து கொண்டதாகவும் தெரியவந்தது. இதையறிந்த முதல்வர் ஜெயலலிதா, அடுத்த சில நாட்களில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ வளர்மதியை, முதல்வர் நேரில் அழைத்து விசாரித்தார். அதன்பின், ரகசிய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது முதல்வர் கோபமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே, அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இருந்து கடந்த மார்ச் 2-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. முத்தரையர் சமுதாயத்தினரை திருப்திபடுத்துவதற்காக முதல்வர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதினர்.

இந்நிலையில், நேற்று வெளியான அதிமுக வேட்பாளர் பட்டியலில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு எதிரான போராட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட ரகசியக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பூனாட்சி (மண்ணச்சநல்லூர்), முன்னாள் அமைச்சர்களான சிவபதி (முசிறி), பரஞ்சோதி (திருச்சி மேற்கு), கு.ப.கிருஷ்ணன் (ஆலங்குடி) ஆகியோருக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேசமயம், ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ வளர்மதிக்கு மட்டும் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுகவைச் சேர்ந்த முத்தரையர் சமுதாய நிர்வாகிகளிடம் கேட்டபோது, “அதிமுகவை முத்தரையர் விரோத கட்சிபோல சித்தரிக்க, திமுக ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்த சிலர் முயற்சி செய்தனர். அதற்கு அதிமுகவைச் சேர்ந்த சிலரும் மறைமுகமாக உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுபோன்ற நபர்களைத்தான், தற்போது முதல்வர் புறக்கணித்துள்ளார். அதிமுக வேட்பாளர் பட்டியலில் வழக்கத்தைவிட, இம்முறை 7 தொகுதிகளில் முத்தரையர் சமுதாயத்தினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர்” என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்