குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.

இன்று (13-02-2022) மாலை காணொலி வாயிலாகத் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

தென்னவன் சிறுமலை என்று சிலப்பதிகாரக் காப்பியத்தில்-இளங்கோவடிகளால் போற்றப்பட்ட வரலாற்றுப் புகழ் பெற்ற நகரமான இந்த திண்டுக்கல்லில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் இந்த மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு காணொலிக் காட்சி வாயிலாக உங்களைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அமைச்சர் ஐ. பெரியசாமிக்கும் மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நமக்கு கிடைத்த மகத்தான வெற்றியை போன்ற வெற்றியைத்தான், நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் பெற்றாக வேண்டும். அப்படி உள்ளாட்சித் தேர்தலில் முழுமையான வெற்றியை பெறுவதன் மூலமாக, தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டங்களை இன்னும் சிறப்பாக நம்மால் செயல்படுத்த முடியும்.

கடந்த சில மாதங்களில் செய்திருக்கின்ற பணிகளில் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டு சொல்கிறேன்.

* திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சமூக பொறுப்புநிதி நன்கொடையின்கீழ், 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நிமிடத்திற்கு 600 லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்திக் கலன் அமைக்கப்பட்டிருக்கிறது.

* நீண்டகாலமாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது.

* எந்தக் கோவிலிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் கிடையாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு பழனி முருகன் கோயிலிலும் இது நடைமுறைக்கு வந்திருக்கிறது.

* அ.கலையம்புத்தூர் ஊராட்சி - ராஜாபுரத்தில் மாநில நிதிக்குழு மானியத்தில் இருந்து, ரூபாய் 19 லட்சத்து 50 ஆயிரம் நிதியில் புதிய சமுதாயக்கூடம் கட்டப்பட்டிருக்கிறது.

* பழனி தண்டாயுதபாணி கோயில் மூலம் புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு சித்த மருத்துவம் மேம்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

* ஆயக்குடி பேரூராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டிருக்கிறது.

* கொடைக்கானல் மேல்மலை பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவை வாகனம், மன்னவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தரமாகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

* ஒட்டன்சத்திரம் தொகுதியில் புதிய இருபாலர் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைய உள்ளது.

* ஒட்டன்சத்திரம் தொகுதியில் 5 கோடி ரூபாய் செலவில் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

* ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சுமார் 3 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

* தொப்பம்பட்டி ஒன்றியம் மரிச்சிலம்பு ஊராட்சியில் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் மற்றும் பல்வேறு பணிகளுக்காக அடிக்கல் நாட்டப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

* ஜோகிபட்டியில் சுமார் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஜோகிபட்டி - சோழியப்பக் கவுண்டனூர் சாலையை மாவட்டச் சாலையாகத் தரம் உயர்த்துகின்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படி பட்டியல் போட்டு பணிகளைச் சொல்லுகிற அளவிற்குத் திண்டுக்கல்லில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுமைக்கும் ஏராளமான சாதனைகளைச் செய்திருக்கிறோம். தொடர்ந்து செய்து வருகிறோம். இவற்றையெல்லாம் கழக உடன்பிறப்புகள் அவர்கள் பகுதிகளில் இருக்கின்ற மக்களிடம்- கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

திமுக வரலாற்றை முழுதாக அறியாமல் ஆண்டாண்டு காலமாகப் பரப்பி வைக்கப்பட்டிருக்கின்ற பொய்களை நம்பி, தமிழர்களுக்கு எதிரான, தமிழ்நாட்டுக்கு எதிரானவர்களின் சதிவலையில் சிக்கியிருக்கின்ற சிலரையும் மீட்டாக வேண்டும்! அதற்கு நம்முடைய சாதனைகளை வீதிதோறும்- வீடுதோறும் கொண்டு செல்லுங்கள்! நம்முடைய கொள்கைகளை எடுத்துச் சொல்லுங்கள்! இளைஞர்களுக்கு விழிப்புணர்வூட்டி, அரசியல்மயப்படுத்துங்கள்! இதையெல்லாம் தேர்தலுக்காக மட்டுமல்ல, இந்த இனத்தை பாதுகாப்பதற்காக நாம்தான் செய்தாக வேண்டும்!

நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 825 பதவிகளிலும், திமுக வேட்பாளர்களும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களும்தான் வெற்றி பெற்றாக வேண்டும். அவ்வாறு வெற்றி பெற்றால்தான், அது முழுமையான வெற்றியாக, மகத்தான வெற்றியாக இருக்கும். சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றுகின்ற நல்ல பல திட்டங்கள் மக்களுக்கு முழுமையாகப் போய்ச் சேர வேண்டும். அதற்கு உள்ளாட்சி அமைப்புகள் முழுமையாக நம்முடைய கையில் இருக்க வேண்டும்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், நம்முடைய மாநிலம் என்ன நிலைமைக்கு தள்ளப்பட்டது என்று தமிழ்நாட்டு மக்கள் எல்லாருக்குமே தெரியும். நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை! உள்ளாட்சித் தேர்தலையே நடத்த மனமில்லாமல் நாட்களைக் கடத்திக் கொண்டு போன ஆட்சிதான்- அ.தி.மு.க. ஆட்சி. உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் தி.மு.க.வினர் வெற்றி பெற்றிடுவார்கள். அவ்வாறு வெற்றி பெற்று வந்தால், அ.தி.மு.க.வினருடைய ஊழல்களை ஆதாரங்களோடு அம்பலப்படுத்துவார்கள் என்று, அஞ்சி நடுங்கி, உள்ளாட்சித் தேர்தலையே நடத்தாமல் வைத்திருந்த ஆட்சிதான்- அ.தி.மு.க. ஆட்சி.

அதிமுக ஆட்சியில் இருந்தபோதே, நம்முடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பல்வேறு ஆதாரங்களோடு லஞ்ச ஒழிப்புத்துறையில் மனு கொடுத்தார். சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்தார்.

நான் சொன்னது- ஒரே ஒரு எடுத்துக்காட்டுதான்! இப்படி, சென்னை மாநகராட்சியாக இருந்தாலும், மதுரை மாநகராட்சியாக இருந்தாலும், நகராட்சி அமைப்புகளாக இருந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியில் மலையளவு ஊழல்கள் செய்யப்பட்டன! இது எல்லாம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வசம், அவர்கள் ஆட்சியில் இருந்தபோதே அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. இப்போது திமுக ஆட்சியில் அதுபற்றி விரிவாக விசாரணை நடத்தி- முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் 464 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோவை மாநகராட்சி திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தத்தில் 346 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருடைய உறவினர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுடைய வருவாய், சில ஆண்டுகளில் மட்டும் பலமடங்கு உயர்ந்திருக்குறது என்று லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்திருக்கிற முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்திருக்கிறது.

கடந்த 2014 முதல், அனைத்து ஒப்பந்தங்களையும் தன்னோட குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது தன்னோட பினாமிகளுக்கோ மட்டுமே கொடுத்திருக்கிறார் வேலுமணி என்று ஆதாரப்பூர்வமாகத் தெரியவந்திருக்கிறது. இவர்களுக்கு சென்னை, கோவை மாநகராட்சிப் பணிகள் அனைத்தும் விதிமுறைகளை மீறித்தரப்பட்டிருக்கிறது. இதனுடைய மதிப்பு 811 கோடி ரூபாய். தமிழ்நாடு முழுவதும் 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெருவிளக்குகளில் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றுகிற திட்டத்தை செயல்படுத்தியதில் முறைகேடு செய்ததாக வேலுமணிக்கு எதிராக, இப்போது பேரவைத் தலைவராக இருக்கின்ற மாண்புமிகு அப்பாவு அவர்கள் புகார் அளித்திருந்தார். இதுதான் அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்ட லட்சணம்!

இதே மாதிரி மீண்டும் ஊழல் சாம்ராஜ்யத்தை நடத்த முடியுமா என்ற ஏக்கத்தோடுதான் ‘தினம் ஒரு பொய்’ நிகழ்ச்சியை, காமெடியாக நடத்திக் கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க.வுக்கு அளிக்கிற வாக்கு என்பது ஊழலுக்கு அளிக்கும் வாக்கு. இதைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.

* கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிற மக்களுடைய துயரத்தைப் போக்குகிற வகையில், அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கின்ற குடும்பங்களுக்கு, தலா 4000 ஆயிரம் ரூபாய் கொடுத்தது யார்? இந்தத் தி.மு.க. ஆட்சி!

* ஆவின் பால் விலையை, லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் குறைத்தது நீங்களா? தமிழ்நாட்டுத் தாய்மார்களின் சகோதரனான நான்!

* அரசு கட்டுப்பாட்டில் இயங்குகின்ற நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வதற்கான உத்தரவில் கையெழுத்து போட்டது யாரு?

மகளிர் உரிமைக்காக தொடர்ந்து போராடுகிற, வாதாடுகிற திமுக தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இருக்கின்ற என்னுடைய கையெழுத்து!

* ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டம்- யார் கொண்டுவந்த திட்டம்? மக்களிடம் கேளுங்கள், இந்த ஸ்டாலின்தான் என்று சொல்லுவார்கள்!

* ‘மக்களைத் தேடி மருத்துவம்’- உங்கள் சாதனையா?

* ‘இல்லம் தேடிக் கல்வி’- ‘இன்னுயிர் காப்போம் திட்டம்’- ‘நமக்கு நாமே திட்டம்’- ‘அண்ணா மறுமலர்ச்சி திட்டம்’- இதெல்லாம் செய்தது யாருடைய ஆட்சி? பதில் சொல்லத் திராணி இருக்கிறதா?

* சமத்துவத்தை நோக்கிய மாபெரும் திட்டமான ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை’ கொண்டு வந்தது யார்?

* கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுடைய இன்னலைக் குறைக்கின்ற வகையில், அதற்கான கட்டணத்தை தமிழ்நாடு அரசே காப்பீட்டுத் திட்டத்தில் ஏற்றுக்கொள்ளும் என்று கையெழுத்து போட்டது யார்? இந்தத் திட்டத்தால் பயன் அடைந்த உங்க கட்சிக்காரர்களிடமே கேளுங்கள்? முதலமைச்சர் ஸ்டாலின்தான் என்று தெளிவாக சொல்லுவார்கள்!

* கரோனா கால நிவாரணமாக, 13 பொருட்களை- 2 கோடியே 15 லட்சம் குடும்பங்களுக்கு நீங்களா கொடுத்தீர்கள்?

* 18 லட்சத்து 30 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் பயன்பெறுகிற வகையில், அவங்களுக்கான அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டது இந்த ஆட்சியிலா? உங்கள் ஆட்சியிலா?

* 5 பவுனுக்கு குறைவான நகைக்கடன் பெற்ற, 13 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்களுக்குக் கடன் ரத்து செய்தது யாருடைய சாதனை?

* மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான- 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் ரத்து செய்தது யார்?

மணிக்கணக்காக நின்று கொண்டே சுழல்நிதி வழங்கி, பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் திட்டத்தை அறிமுகப்படுத்தி, தமிழ்நாட்டுச் சகோதரிகளோட முன்னேற்றத்துக்காக திட்டங்களை கொண்டுவந்தது இந்த அடியேன் ஸ்டாலின்தான்.

எடப்பாடி பழனிசாமியின் சாதனை என்ன என்று யாராவது கேட்டால், ‘மினி கிளினிக்’ என்று சொல்லுவார். ஆனால், உருப்படியாக எந்த இடத்திலும் அவர் மினி கிளினிக் அமைக்கவில்லை! அம்மையார் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்த, குறைகளை சொல்ல முதலமைச்சருக்கு போன் செய்கிற திட்டத்துக்கு, தன்னோட இனிஷியலை போட்டுக்கொண்டவர்தான் பழனிசாமி! அம்மையார் ஜெயலலிதா பேரில் பல்கலைக்கழகம் என்று அறிவித்தார். அதற்காகக் கட்டப்பட்ட கட்டடத்தினுடைய புகைப்படத்தை காட்டுங்கள் பார்க்கலாம்.

அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தப்போது தமிழ்நாட்டுக்கு "விஷன்-2023" என்று ஒரு திட்டத்தை அறிவித்தார். 2012-ஆம் ஆண்டு அந்த கொள்கையை வெளியிட்டார்.

* தனிநபர் வருமானத்தை உயர்த்துவேன்.

* 15 லட்சம் கோடிக்கு உள்கட்டமைப்புத் திட்டங்கள்.

* 2 கோடி பேருக்கு வேலைகள்.

* தமிழ்நாட்டில் இரண்டு மருத்துவ நகரங்கள் உருவாக்கப்படும்.

* கோயம்புத்தூர்-மதுரை, கோயம்புத்தூர்-சேலம் இன்டஸ்ட்ரியல் காரிடார் (Industrial Corridor) அமைக்கப்படும்.

இதில் எதாவது ஒன்றை, கடந்த 9 ஆண்டுகளில் நிறைவேற்றினார்களா?

அம்மையார் ஜெயலலிதா, முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை கடந்த 2015-ஆம் ஆண்டு நடத்தினார். அதில், 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக அறிவித்தார். 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக சொன்னார். 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று சொன்னார். இதெல்லாம் எங்கே?

இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பழனிசாமி நடத்துனார். 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக சொன்னார். 3 லட்சத்து 431 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக சொன்னார். 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கப் போகிறதாக சொன்னார். ஆனால் ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை!

அடுத்ததாக, 13 நாள் வெளிநாட்டு சுற்றுலா சென்றார் பழனிசாமி. 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக சொன்னார். 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று சொன்னார். 35 ஆயிரத்து 520 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என்று சொன்னார். ஆனால், முதலீடும் இல்லை. வேலையும் இல்லை! கரோனா காலத்தில் 101 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுவிட்டதாகச் சொன்னார். 88 ஆயிரத்து 727 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படும் என்று சொன்னார். ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கப் போகிறது என்று சொன்னார். இதில் எதாவது நடந்ததா? தோல்வி! தோல்வி! தோல்வி! தோல்வியின் மொத்த உருவமாகக் காட்சியளிக்கிறார் பழனிசாமி!

கடந்த 2021-ஆம் ஆண்டுகூட, புதிய தொழிற்கொள்கை என்று ஒன்றை வெளியிட்டார். 10 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை திரட்டப்போகிறேன் என்று சொன்னார். எதுவும் நடக்கவில்லை! இவ்வாறு பொய்யாகப் பேசிக்கொண்டு ஏமாற்றுவதைச் சகித்துக் கொள்ள முடியாமல், மக்களே அவரை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். தன்னுடைய கற்பனை வளத்தை வளர்த்துக் கொண்டு புது புது பொய்களை பழனிசாமி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

நாம் மக்களுக்காக ஆற்றிவரும் பணிகளை நான் தொடர்ந்து பதிவு பண்ணிக் கொண்டு வருகிறேன். ஆளுநர் உரையில் 66 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

அதில் 49 அறிவிப்புகளுக்கு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 75 விழுக்காடு அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதி- நிதிநிலை அறிக்கை- 110 விதிகள் என்று மொத்தம் 1,641 அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் 1,238 அறிவிப்புகளுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு, 75 விழுக்காட்டுக்கும் மேலான அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

நேரத்தின் அருமை கருதி, சுருக்கமாக சில பணிகளை மட்டும் சொல்கிறேன்.

* வடகிழக்குப் பருவ மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம்- 132 கோடியே 12 லட்சம் ரூபாய்.

* இல்லம் தேடிக் கல்வி திட்டம்- 200 கோடி ரூபாய் ரூபாய்.

* மக்களைத் தேடி மருத்துவ திட்டம்- 257 கோடி ரூபாய்.

* மாநிலப் பேரிடர் நிதி மூலம் பேரிடருக்கு ஒதுக்கப்பட்ட தொகை- 801 கோடி ரூபாய்.

* சென்னை மழை வெள்ள நீர்த் தடுப்புத் திட்டம்- 1000 கோடி ரூபாய்.

* காவிரி தூர் வாருதல் பணி- 61 கோடி ரூபாய்.

* மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, 1500 ரூபாயிலிருந்து 2000 ஆயிரமாக உயர்த்திட 123 கோடியே 75 லட்சம் ரூபாய்.

* திரட்டப்பட்ட முதலீடுகள்- 56 ஆயிரத்து 230 கோடி ரூபாய். உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகள்- 1 லட்சத்து 74 ஆயிரத்து 999.

* 52 மணி நேர "ஆப்பரேசன் டிஸ் ஆர்ம்" மூலம் சுற்றி வளைக்கப்பட்ட ரவுடிகள்- 6,112.

இப்படி நமக்கு செய்வதற்கு ஏராளமான பணிகள் இருக்கிறது. பத்தாண்டுகளாக சீரழிக்கப்பட்ட தமிழ்நாட்டை சீரமைத்தாக வேண்டும். அடகு வைக்கப்பட்ட நம் மாநில உரிமைகளை மீட்டாக வேண்டும். எதிர்காலத்துக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றியாக வேண்டும். பழனிசாமி - பன்னீர்செல்வம் சீரழித்த நிதி நிலைமையை, கொஞ்சம் கொஞ்சமா மீட்டுக் கொண்டு வருகிறோம். கடன் மேல கடன் வாங்கி, அதற்கு வட்டி கட்ட முடியாமல், வட்டி கட்டக் கடன் வாங்கி, அதுக்கு வட்டி கட்டி என்று தமிழ்நாட்டை 5 லட்சம் கோடி கடனில் தமிழ்நாட்டைத் தள்ளி, கஜானாவை கபளீகரம் செய்து காலி பண்ணிட்டார்கள்.

இந்த நிலையில் இருந்து மீட்டு, விரைவில் ‘மகளிர் உரிமைத் தொகையான’- மாதம் 1000 ரூபாயையும் வழங்கப் போகிறோம். யாரையும் நாங்கள் ஏமாற்றப் போவதில்லை. இந்த ஸ்டாலின் ஒரு வாக்குறுதியை கொடுத்தால், அதை நிச்சயம் நிறைவேற்றுவான்! இது தமிழ்நாட்டு தாய்மார்களான என்னோட சகோதரிகளுக்கு நன்றாகத் தெரியும். நான் காணொலியில் உங்களைச் சந்தித்திக் கொண்டு இருக்கேன். மக்களைச் சந்திப்பதை தவிர்ப்பதற்காக, நான் காணொலியில் பரப்புரை செய்வதாக, மக்களால் புறக்கணிக்கப்பட்ட சிலர் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். அவங்களுடைய கற்பனைத் திறனைப் பார்த்து எனக்கு சிரிப்புதான் வருகிறது.

இந்த ஸ்டாலின் எப்போதும் மக்களோடு மக்களாக இருப்பவன். வீதிவீதியாக மக்களிடம் நடந்து சென்று வாக்குச் சேகரித்தவன். மக்களுக்கு- எங்கே எப்போது பாதிப்பு என்றாலும், நேரடியாக அந்த இடத்திற்குச் சென்று மக்களைச் சந்திக்கின்றவன். மழை வெள்ளப் பாதிப்புகள் வந்தபோது, சென்னையின் பெரும்பாலான பகுதிகளுக்கு பகல் இரவு பாராமல் மழை கோட் போட்டு, குடை பிடித்தபடி சென்றேன். காஞ்சிபுரத்திற்குச் சென்றேன். திருவள்ளூருக்குச் சென்றேன். கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி என்று பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் தண்ணீரில் மூழ்கிய பகுதிகளுக்கும் சென்றேன். தண்ணீரை அரசு அதிகாரிகள் நீக்கிய பிறகும், அந்த இடங்களுக்குச் சென்று பார்வையிட்டேன். சென்னையில் ஒரு இடத்திற்கு நான் சென்றபோது, தண்ணீர் வெளியேற்றப்படவில்லை என்று மக்கள் புகார் சொன்னார்கள். இரண்டே நாளில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

மீண்டும் அங்கே சென்றபோது, மக்கள் எனக்கு நன்றி சொன்னார்கள். பொங்கல் பரிசு பொருட்கள் தரும் ரேசன் கடைகளுக்கு சென்று, பொருட்கள் தரமாக இருக்கிறதா என்று பொதுமக்களிடம் கேட்டேன். நான் எங்கே சென்றாலும், வழியில் என்னைப் பார்க்கக் காத்திருக்கும் மக்களிடம், என்னுடைய வாகனத்தை நிறுத்தி மனு வாங்குகிறேன். என்ன கோரிக்கை என்று கேட்கிறேன். இப்படிப்பட்ட என்னைப் பார்த்து, மக்களைப் பார்க்க பயம் என்று சொல்கிறவர்கள், தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்களா? இல்லை கற்பனை முற்றி- வேற்று கிரகத்துக்கே போய்விட்டார்களா? என்ற சந்தேகம்தான் எனக்கு வருகிறது.

இந்தக் காணொலி கூட்டங்கள் வழியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐந்து லட்சம் பேரை ஒரே நேரத்தில் சந்திக்க முடிகிறது. ஒரே நேரத்தில் 500 இடங்களில், 700 இடங்களில் பொதுமக்கள் கூடி என்னுடைய பேச்சைக் கவனிக்கிறார்கள். இது கொரோனா காலம். இலட்சக்கணக்கானவர்களை இப்படி கூட்டி கூட்டம் நடத்துவது சாத்தியம் இல்லை. அதனால்தான் காணொலி மூலமாகச் சந்திக்கிறேன். இதனைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், குறை சொல்கிறார்கள்.

நான் தேர்தல் பயணம் கிளம்பி, எல்லா இடத்திலும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடினால் ‘பார்த்தீர்களா? கரோனா கால கட்டுப்பாடுகளை முதலமைச்சரே மீறுகிறார். அதிகமான கூட்டத்தைக் கூட்டுகிறார்' என்று அவர்கள் சொல்வார்கள். வயிற்றெரிச்சல்காரர்களது சொற்களையும்- வதந்திகளையும் புறம்தள்ளி, நாம்- நம்முடைய மக்கள் பணிகளைத் தொடர்வோம்.‘என்றைக்கும் தமிழ்நாடுதான் நம்பர் ஒன்’ என்ற நிலைய அடைய, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முழுமையான வெற்றியை பெறுவோம்!

எனவே, "உள்ளாட்சியிலும் நம்ம ஆட்சி மலர" திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு, தமிழர்களின் இதயசூரியனான உதயசூரியன் சின்னத்திலும், நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களிலும் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று கேட்டு, விரைவில் திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள வெற்றி விழாவில் உங்களையெல்லாம் நேரில் வந்து சந்திப்பேன் என்ற உறுதியை கூறி விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்