ஓசூர் வனக்கோட்டத்தில் 2022-ம் ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு: 18 குழுக்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில் 2022-ம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் 18 குழுக்கள் பங்கேற்றுள்ளன.

நடப்பாண்டில் தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் மூலம் மூன்று கட்டங்களாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கழிமுக துவாரப் பகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக காப்புக்காடுகளுக்கு வெளியில் உள்ள ஈர நிலப் பகுதிகளிலும், மூன்றாம் கட்டமாக காப்புக்காடுகளில் உள்ள ஈர நிலப்பகுதிகளிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி ஓசூர் வனக்கோட்டத்தில் காப்புக்காடுகளுக்கு வெளியில் உள்ள ஈர நிலப்பகுதிகளான ஓசூர் ராம்நாயக்கன் ஏரி, பாரூர் ஏரி, கே.ஆர்.பி. அணை, கெலவரப்பள்ளி அணை, தளி ஏரி உள்ளிட்ட 18 நீர் நிலைகளில் நேற்று காலை 6 மணி முதல் காலை 11 மணி வரை பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

ஓசூர் வனக்கோட்டம் கொத்தகொண்டப்பள்ளி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவன வளாகத்தில் உள்ள ஏரியில் பறவைகள் கணக்கெடுப்பில் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி தலைமையில் ஈடுபட்ட பறவை கணக்கெடுப்பு குழுவினர்.

இதில் ஓசூர் கொத்தகொண்டப்பள்ளியில் இயங்கி வரும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவன வளாகத்தில் உள்ள ஏரியில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு பணியில் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி பங்கேற்றார். இப் பணியில் வனப்பணியாளர்கள், கென்னத் ஆண்டர்சன் நேச்சர் சொசைட்டி, ஓசூர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்ற 18 குழுக்கள் அமைக்கப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு பணியின் போது அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கணக்கெடுப்பு குழுக்களுக்கும் முதலுதவி பெட்டிகள் வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது.

முன்னதாக இந்த கணக்கெடுப்பு பணிக்காக மாவட்ட வன அலுவலரும், வனஉயிரின காப்பாளருமான க.கார்த்திகேயனி தலைமையில் பிப்.12-ம் தேதியன்று முன் அனுபவம் மற்றும் பயிற்சி பெற்ற அலுவலர்கள் மூலம் வனப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி மற்றும் கணக்கெடுப்பின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆன்லைன் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் ஓசூர் வனக்கோட்ட வனச்சரகர்கள், ஓசூர் வனக்கோட்ட வன கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ், மாவட்ட கவுரவ வனஉயிரின காப்பாளர் சஞ்சீவ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE