எம்பிபிஎஸ், பிடிஎஸ் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவரிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவு: முதல் ஆண்டு வகுப்புகள் நாளை தொடக்கம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ்படிப்புகளுக்கு முதலாம் ஆண்டுவகுப்புகளை நாளை தொடங்கவேண்டும். அரசு பள்ளி மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது என்று மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவக்கல்வி இயக்ககம் அனைத்து அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேசிய மருத்துவ ஆணையம் வழிகாட்டுதல்படி 2021-22 கல்வி ஆண்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்.14-ம் தேதி (நாளை) முதல் தொடங்க வேண்டும்.

கல்லூரி விடுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக, உணவு கூடங்களில் 50 சதவீதம் மட்டுமே மாணவர்கள் இருக்க வேண்டும்.

நூலகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அனுமதியின்றி நிகழ்ச்சிகள், கூட்டங்கள் எதுவும் நடத்தக் கூடாது. வகுப்பறைகளில் அனைத்து கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்த வேண்டும். அனைத்து மாணவர்களும் கரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற மாணவர்களிடம் கல்விக் கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம், உணவு உட்பட விடுதி கட்டணம், புத்தகங்கள், வெள்ளை அங்கி, ஸ்டெதஸ்கோப், பல்கலை.பதிவு கட்டணம், காப்பீடு உள்ளிட்ட எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது.

கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட அதே நடைமுறையையே, இந்த ஆண்டும் பின்பற்ற வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கு அனைத்துகட்டணங்களையும் அரசே ஏற்பதால், அவர்கள் எந்தவித உதவி தொகைக்கும் விண்ணப்பிக்க வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE