ஏழை எளிய மக்கள் பயன்பெறும் அம்மா உணவகம், தாலிக்குத் தங்கம் திட்டம், அம்மா சிமென்ட் உள்ளிட்ட திட்டங்களை திமுக விரைவில் மூட திட்டமிட்டுள்ளது, என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார்.
சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசியது:
மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கூடியது தான் உள்ளாட்சித் தேர்தல். மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடிய ஒரே கட்சியான அதிமுக-வுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த என்னை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆனால், முதல்வர் ஸ்டாலினை அவரது கட்சி எம்எல்ஏ கூட சந்திப்பது சிரமம்.
கரோனா தொற்று பரவிய ஆரம்ப காலத்தில், அதற்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என உலகம் முழுவதும் ஸ்தம்பித்த காலத்தில், அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு பல ஆயிரக்கணக்கான உயிரை காப்பாற்றியது. கரோனா காலத்தில் மக்கள் வேலை இழந்த நிலையில், நிவாரணம், ரேஷனில் அரிசி, சர்க்கரை வழங்கிய அரசு அதிமுக.
வங்கிகளில் உள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்வதாகக் கூறிய முதல்வர் ஸ்டாலின், இப்போது, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள நகைகளுக்கு கடன் தள்ளுபடி இல்லை என்கிறார். இந்த ஆட்சியில் உண்மையை கூறினால், ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. ஆட்சிக்கு வரும் வரை பொய்களை கூறி வாக்குகளை பெற்ற திமுக ஆட்சி அமைத்ததும், மக்களை மறந்துவிட்டது.
பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கியது திமுக அரசு. ரூ.1,300 மதிப்புள்ள பொங்கல் தொகுப்புக்கு பதிலாக, ரூ.ஆயிரம் ரொக்கமாக வழங்கியிருந்தால், நல்ல முறையில் பொங்கல் விழாவை மக்கள் கொண்டாடி இருப்பார்கள். ஏழைகளுக்கு பொங்கல் தொகுப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக அரசு பொங்கல் தொகுப்பு கொடுக்கவில்லை. இதன் மூலம் ரூ.500 கோடி சுருட்டவே பொங்கல் தொகுப்பு கொடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஆயிரம் ஏக்கரில் கால்நடை பூங்கா, கூட்டுக் குடிநீர் திட்டம், அம்மா மினி கிளினிக், மருத்துவ மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு என எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். ஆனால், முதல்வர் ஸ்டாலின் கூட்டத்துக்கு கூட்டம் பழனிசாமி என்ன திட்டங்களை கொண்டு வந்தார் என கேள்வி எழுப்புகிறார். ஏழை மக்கள் சிகிச்சைக்காக கொண்டு வந்த அம்மா மினி கிளினிக்கை மூடிவிட்டனர். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் அம்மா உணவகம், தாலிக்குத் தங்கம் திட்டம், அம்மா சிமென்ட் உள்ளிட்ட திட்டங்களையும் திமுக விரைவில் மூட திட்டமிட்டுள்ளது. ஏழைகளை பற்றி கவலைப்படாத திமுக அரசு, பணக்காரர்களை மட்டுமே பார்க்கிறது. ஏனெனில், அவர்கள் தான் பணம் தருவார்கள்.
ஏழை மக்களை எளிதில் ஏமாற்றி விட முடியும் என்பதால் பொய் வாக்குறுதிகளை தேர்தலில் கொடுத்து திமுக ஆட்சியை பிடித்தது. மறைந்த முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அடுத்ததாக அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் என குடும்ப அரசியல் செய்கிறது திமுக. ஆனால், அதிமுக-வில் யார் வேண்டுமானாலும் எந்த பதவிக்கும் வர முடியும்.
மணல் கொள்ளையை தடுத்து, இயற்கை வளத்தை மேம்படுத்திட எம்-சாண்ட் கொண்டு வந்தது அதிமுக. ஆனால், மீண்டும் மணல் குவாரியை திறக்க திமுக திட்டமிட்டுள்ளது. அரசின் விலை ஒரு யூனிட் மணல் ரூ.ஆயிரம், ஆனால், சென்னையில் மணல் ஒரு யூனிட் ரூ.13 ஆயிரத்துக்கு விற்கிறது என்றால் இடையில் உள்ள பணம் யார் கைக்கு மாறுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் மக்களும், கட்சித் தொண்டர்களும் பக்கபலமாக இருந்து, அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago