திருச்சி: 2 ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கும் நிச்சயம் தேர்தல் வரும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் ப.குமார், மு.பரஞ்ஜோதி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், ஓ.எஸ்.மணியன், ஆர்.காமராஜ், கு.ப.கிருஷ்ணன், என்.ஆர்.சிவபதி, எஸ்.வளர்மதி, டி.பி.பூனாட்சி, ப.அண்ணாவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியது: ''சமுதாய சீர்கேடுகளைக் களைய பாடுபட்டவர் பெரியார், தமிழ்ச் சமுதாயம் தலைநிமிர்ந்து வாழ பாடுபட்டவர் அண்ணா, ஏழைத் தாய்மார்களின் கண்ணீரைத் துடைத்தவர் எம்ஜிஆர். இந்த முப்பெரும் தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றல் ஆகியவற்றை ஒருங்கே அமையப் பெற்றவர் ஜெயலலிதா. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்கள் ஆட்சிக் காலத்தில் தொலைநோக்கு அடிப்படையில் மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தினர்.
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு சிறிய சறுக்கல் ஏற்பட்டது. திமுக பொய்யான வாக்குறுதிகளைக் கூறி, மக்கள் அதையும் நம்பி, சிறிய வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. அதிமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன என்றும், இப்போதைய திமுக ஆட்சியில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்.
அதிமுக ஆட்சியில் 2.10 கோடி பேருக்கு மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி, 5.50 லட்சம் பேருக்கு கான்கிரீட் வீடுகள் மற்றும் இலவச வேட்டி, சேலைகளை வழங்கியவர் ஜெயலலிதா. இதேபோல், திருமண நிதியுதவித் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம், பேறுகால நிதியுதவித் திட்டம் என பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செய்தது அதிமுக.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மாணவ- மாணவிகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை இலவசமாக வழங்கியதால், படித்த பட்டதாரிகள் விகிதம் தமிழகத்தில் 52 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலகில் உள்ள பெரு முதலீட்டாளர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்து தொழிற்சாலைகளை நிறுவி தொழில் தொடங்க வைத்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தச் செய்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
2007-ல் வெளியான காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்த திமுக முதல்வர் மு.கருணாநிதியிடம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, 2011-ல் ஜெயலலிதா முதல்வரான பிறகு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து, சட்டப் போராட்டம் நடத்தி அரசிதழில் வெளியிடச் செய்தார்.
பின்னர், தஞ்சாவூரில் விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் ஜெயலலிதா பேசும்போது, எனது 33 ஆண்டு கால பொது வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருந்த நாள் என்றால், அது, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியான நாள்தான் என்றார். ஆனால், தஞ்சை தரணிக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள், அப்போது அதிகாரம் கையில் இருந்தும் அதைச் செய்யவில்லை.
மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மக்களுக்கு எப்போதும் பாடுபடும் இயக்கமாக அதிமுகதான் உள்ளது. அந்த வரிசையில் கரோனா பரவியபோது அதிமுக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கரோனா கட்டுப்படுத்தப்பட்டது. இதுகுறித்து பிரதமர் மோடி பாராட்டினார். ஆனால், இப்போதைய திமுக அரசு கரோனா தொடர்பாக எதையும் கண்டு கொள்ளவில்லை.
பொய்யாக 505 வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டு, கடந்த 10 மாதங்களாக எதையும் முறையாக திமுக அரசு நிறைவேற்றவில்லை. எந்தத் திட்டங்களும் மக்களைச் சென்றடையவில்லை. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்குவதாக அறிவித்தனர். ஆனால், இதுவரை வழங்கவில்லை. தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் வேலை நாட்களை 150ஆக உயர்த்துவோம் என்றனர். ஆனால், செய்யவில்லை. முதல்வரான பிறகு இடும் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்றார் மு.க.ஸ்டாலின். எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல், வாய் சவடால் பேசியவர்களின் பகல் வேசம் கலைந்துவிட்டது. வாக்குறுதி அளித்தவாறு மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படவில்லை.
இவ்வாறு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் வாய் சவடால் பேசுகின்றனர். மக்கள் கேள்வி கேட்பதால் திமுகவினரால் மக்களை நேரில் சந்திக்க முடியவில்லை. அதிமுக ஆட்சியின்போது பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.2,500 ரொக்கம் வழங்கியபோது ரூ.5,000 வழங்க வேண்டும் என்றார் மு.க.ஸ்டாலின். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.100 கூட வழங்கவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் தவறாக முடிவெடுத்துவிட்டோமே என்று மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
பொய் வாக்குறுதிகளைத் தந்து, மக்களை நம்ப வைத்து, ஆட்சிக்கு வந்த மக்கள் விரோத திமுக முகமூடி கிழியத் தொடங்கியுள்ளது. முகமூடியை முழுவதுமாக கிழிக்கும் நல்ல வாய்ப்பு- திமுகவுக்கு தகுந்த பாடம் புகட்டும் வாய்ப்பு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மூலம் அமைந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என்பது தொண்டர்களுக்கான தேர்தல். அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டியது அனைத்து நிலை நிர்வாகிகளின் கடமை. ஏனெனில், கட்சியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் தொண்டர்கள்தான். இந்தத் தேர்தலில் அதிமுக முழு வெற்றி பெறும்.
இந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், திமுகவுக்கு சரியான அடியாக அமையும். இனி எந்தத் தேர்தல் வந்தாலும் இந்தத் தேர்தல் அடிப்படையாக இருக்கும். 2 ஆண்டுகளில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வரும். அப்போது, தமிழ்நாடு சட்டப்பேரவைக்கும் நிச்சயம் தேர்தல் வரும். எனவே, இந்தத் தேர்தலை அதிமுகவினர் சரியாக அதிமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்'' என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago