சென்னை: இந்தியாவில் செயல்பட்டு வரும் 22 அணு உலைகளின் கழிவுகளையும் கூடங்குளத்தில் குவிக்கும் அபாயகரமான திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முனைந்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"கூடங்குளத்தில் இயங்கி வரும் அணுமின் உற்பத்தி நிலையத்தில் முதல் இரண்டு அலகுகளில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டது. 3வது மற்றும் 4வது அலகுகள் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடக்கின்றன. மேலும் 5 மற்றும் 6 வது அலகுகளுக்கும் இந்திய அணுசக்திக் கழகம் அனுமதி அளித்துள்ளது.
அணுமின் நிலையத்தில் உருவாகும் கதிரியக்க அபாயம் கொண்ட அணுக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றவும், உரிய முறையில் சேமிக்கவும் இந்திய அணுசக்திக் கழகத்திடம் திட்டங்கள் இல்லை என்பதால் 2013ம் ஆண்டு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் அணுக் கழிவுகளை சேமித்து வைத்திட தொலைவில் ஒரு இடம் (Away From Reactor - AFR) மற்றும் அணுக்கழிவுகளை நிரந்தரமாகப் பாதுகாக்க ஆழ்நில கருவூல மையம் (Deep Geological Repository - DGR) ஆகிய இரண்டு வகையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். மேலும் அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான கட்டமைப்பு (AFR) 5 ஆண்டுகளில் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
உச்சநீதிமன்றம் வழங்கிய கால அவகாசத்திற்குள் தேசிய அணுமின் கழகம் இத்தகைய தொழில் நுட்பத்தை வடிவமைப்பதில் சிக்கல் எழுந்தால் மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரியது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளைப் பாதுகாக்கும் பெட்டகத்தை 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்று 2018 ஆகஸ்ட் 24ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக கூடங்குளம் அணுஉலை வளாகத்தினுள் ‘ஏ.எஃப்.ஆர்’ பாதுகாப்புக் கட்டமைப்பை அமைத்திட திட்டமிட்ட தேசிய அணுமின் கழகம், அதற்கான பணிகளைத் தொடங்கிட 2019 ஜூலை 10ம் தேதி நெல்லை மாவட்டம், ராதாபுரத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.
கூடங்குளம் அணு உலைகளையே நிரந்தரமாக மூட வேண்டும் என்று மக்கள் போராடி வரும் நிலையில், அணுஉலை வளாகத்தினுள்ளேயே அபாயகரமான அணுக் கழிவுகளைச் சேமித்து வைத்திட கட்டமைப்புகளை உருவாக்க (Away From Reactor - AFR, Spent Fuel Storage Facility - SFSF) தேசிய அணுமின் கழகம் 2021 டிசம்பரில் ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியுள்ளது. பிப்ரவரி 24ம் தேதிக்குள் நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை இணையம் மூலமாக தாக்கல் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கூடங்குளம் அணுஉலை குறித்து நாடாளுமன்றத்தில் சிபிஎம் உறுப்பினர் வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரசிங், கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக் கழிவுகளை முதலில் சில ஆண்டுகள் அணு உலைகளுக்குள் உள்ள தொட்டியில் பாதுகாக்கப்பட்டு, பிறகு மறு சுழற்சி மையத்திற்கு எடுத்துப் போகும் வரை அருகில் உள்ள மையத்தில் (AFR) வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் கூடங்குளம் போன்ற அணுஉலைகளிலிருந்து வரக்கூடிய அணுக் கழிவுகளை கையாள்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லை என்பதை அமைச்சர் ஜிதேந்திர சிங் மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அணுக் கழிவுகளைச் சேமிக்க ஆழ்நில அணுக்கழிவு மையம் (DGR) தற்போது தேவைப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசின் இந்த நிலைப்பாடு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது ஆகும்.
கூடங்குளத்தில் அணுஉலை வளாகத்தினுள் அணுக்கழிவு மையத்தை அமைத்து, அதில் கூடங்குளம் மட்டுமின்றி, இந்தியாவில் செயல்பட்டு வரும் 22 அணு உலைகளின் கழிவுகளையும் கொண்டுவந்து குவிப்பதற்கான அபாயகரமான திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முனைந்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மத்திய அரசின் இத்தகைய முயற்சிகளை முறியடிப்பதுடன், கூடங்குளத்தில் அணுஉலை 3வது மற்றும் 4வது அலகுகள் அமைத்திட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அனுமதியையும் நிறுத்தி வைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கூடங்குளத்தில் எக்காரணத்தைக் கொண்டும் அணுஉலைக் கழிவுகளை கொண்டுபோய் சேமித்து வைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்."
இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago