பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்றியது யார்? - பழனிசாமி மீது ஸ்டாலின் தாக்கு

By செய்திப்பிரிவு

"பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்ற கொடுமைகளை நடக்கவிட்டு வேடிக்கை பார்த்ததார் பழனிசாமி. அந்தப் பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்றியது யார்... பழனிசாமிதானே?" என்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மேலும், "2011-ஆம் ஆண்டே நீட் விவகாரத்துக்கு காங்கிரஸ் ஆட்சி முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ஆனால் அதை 2016-ஆம் ஆண்டு தூசித்தட்டி எடுத்தது பா.ஜ.க. அரசுதான். அப்போதும் எதிர்ப்பு கிளம்பியது. அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்தார். அதை நான் மறுக்கவில்லை. ஓராண்டுகாலம் விலக்கு பெற்றுக் கொடுத்தார். அவர் மறைவுக்குப் பிறகு , பழனிசாமி ஆட்சிக்கு வந்த பிறகுதான் நீட் தேர்வு நடத்தப்பட்டது” என்றும் அவர் பேசினார்.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை காணொலி வாயிலாக, ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியது: "மக்களால் தோற்கடிக்கப்பட்ட பழனிசாமி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்ற கொடுமைகளை நடக்கவிட்டு வேடிக்கை பார்த்த பழனிசாமி, தனது அவல ஆட்சியின் தோல்வியை மறைக்க, தானும் தனது அமைச்சர்களும் ஊழல்களை மறைக்க, தினம் ஒரு பொய்யைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார். இவரது பொய் சொல்லும் குணத்தைப் பார்த்து மக்கள் இவரை பச்சைப் பொய் பழனிசாமி வருகிறார் என்றுதான் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். பொய் சொல்வதில் டாக்டர் பட்டம் பெறும் அளவுக்கு மக்களை ஏமாற்றியவர்தான் இந்தப் பச்சைப் பொய் பழனிசாமி. பொய் சொல்லுவது ஒன்று மட்டுமே அவருக்கு கைவந்த கலையாக இருக்கிறது.

ஆட்சியில் இருந்தபோது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றிப் பொய் சொன்னார். நீட் மசோதா பற்றிப் பொய் சொன்னார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பற்றிப் பொய் சொன்னார். அண்ணா என்னை விட்டுடுங்க என்று அப்பாவிப் பெண் ஒருவர் கதறும் அளவுக்கு அந்த சம்பவத்தைக் கேட்டு நாம் அனைவரும் துடித்துப் போனோம். ஆனால் நெஞ்சில் துளி ஈரமும் இரக்கமும் இல்லாமல் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு பொய் சொன்னது யார்? அந்தப் பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்றியது யார்? பச்சைப் பொய் பழனிசாமிதானே? எல்லாவற்றுக்கும் மேல், கொடநாடு கொலை கொள்ளை வழக்கிலேயே பொய் சொன்ன நவீன கோயபல்ஸ்தான் பச்சைப்பொய் பழனிசாமி.

அதேபோல, நீட் தேர்வு விவகாரத்திலும் திரும்பத் திரும்ப ஒரு பொய்யை அ.தி.மு.க. சார்பில் சொல்லி வருகிறார்கள். காங்கிரசும் தி.மு.க.வும் சேர்ந்துதான் நீட் தேர்வையே கொண்டு வந்தார்கள் என்று கூசாமல் பொய் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். நுழைவுத் தேர்வை சட்டப்பூர்வமாக ரத்து செய்ததாகவும் சட்டமன்றத்திலேயே இப்போது பொய் சொன்னார்கள். உண்மையில, நுழைவுத் தேர்வைச் சட்டபூர்வமாக ரத்து செய்தது தலைவர் கருணாநிதிதான். நுழைவுத் தேர்வு என்பது எந்த வடிவத்திலும் வரக்கூடாது என்பதுதான் அவரது கொள்கை.

அதனால்தான் நுழைவுத் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து- 12-ஆம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை எனச் சட்டம் போட்டார். இந்திய மருத்துவக் கவுன்சில் இப்படி ஒரு தேர்வை நடத்த 2010-ஆம் ஆண்டு ஆலோசனையாகச் சொன்னபோதே தமிழக முதல்வராக இருந்த தலைவர் கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், அன்றைய ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்துக்கும் அவர் 15.8.2010 அன்று கடிதம் எழுதினார். இதுபோன்ற தேர்வு முறைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று, அந்தக் கடிதத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். அவரது எதிர்ப்பை மனபூர்வமாக அன்றைய காங்கிரஸ் அரசு ஏற்றுக்கொண்டது. 27.8.2010 அன்று குலாம்நபி ஆசாத் பதில் கடிதம் எழுதினார்.

"மருத்துவப் படிப்பில் - அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது அகில இந்திய மருத்துவக் கவுன்சில் எடுத்த நடவடிக்கையாகும். எனினும் முதல்வர் கருணாநிதி ஆலோசனைப்படி, அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்த முடிவுகள், மாநில அரசுகளுடனும், சம்பந்தப்பட்ட அமைப்புகளுடனும் விரிவாக ஆலோசித்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

4.1.2011 அன்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்துக்கு முதல்வர் கருணாநிதி மீண்டும் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், முதுகலைப் படிப்புகளின் சேர்க்கைக்கான அகில இந்தியப் பொது நுழைவுத் தேர்வை எதிர்ப்பதாகக் கூறியிருந்தார். அதோடு நிற்கவில்லை. உடனே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு 6.1.2011 அன்று இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவுக்கு தடை வாங்கினார். பின்னர், அந்த வழக்கு உச்ச நீதிமன்றதுக்குப் போனது. ஹைதராபாத்தில் 2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்களின் மாநாட்டில், அகில இந்தியப் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்று முடிவெடுக்கப்பட்டது. அகில இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று அன்றைய காங்கிரஸ் அரசு 13.1.2011 அன்று அறிவுறுத்திக் கடிதம் அனுப்பியது.

இதுதான் உண்மையாக நடந்தது. இந்த நிலையில், நீட் தேர்வு செல்லாது என்று தி.மு.க. அரசும் தொடுத்துள்ள வழக்கில் உச்ச நீதிமன்றம் 18.7.2013 அன்று தீர்ப்பளித்தது. 2014-ஆம் ஆண்டு ஒன்றிய அரசில் ஆட்சி மாறியது. இதனால் காட்சியும் மாறியது. நீட் தேர்வுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தனியார் நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றம் சென்றது. 11.4.2016 அன்று தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம். இதன்பிறகு 24.5.2016 அன்று நீட் தேர்வை நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது. அதன்பிறகுதான் நீட் தேர்வு உயிர்பெற்றது. அதாவது 2011-ஆம் ஆண்டே இந்த விவகாரத்துக்கு காங்கிரஸ் ஆட்சி முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ஆனால் அதை 2016-ஆம் ஆண்டு தூசித்தட்டி எடுத்தது பா.ஜ.க. அரசுதான். அப்போதும் எதிர்ப்பு கிளம்பியது. அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்தார். அதை நான் மறுக்கவில்லை. ஓராண்டுகாலம் விலக்கு பெற்றுக் கொடுத்தார். அவர் மறைவுக்குப் பிறகு , பழனிசாமி ஆட்சிக்கு வந்த பிறகுதான் நீட் தேர்வு நடத்தப்பட்டது.

தி.மு.க. உள்ளிட்ட அனைவரும் வலியுறுத்திய பிறகு நீட் விலக்கு மசோதாவைத் தயாரித்து அனுப்பினார்கள். அதை டெல்லி நிராகரித்ததை வெளியில் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள். இது சம்பந்தமாக நான் சட்டசபையில் கேட்டபோதுகூட, இன்னும் டெல்லியில் இருந்து பதில் வரவில்லை என்றுதான் சொன்னார்கள். ஆனால், இதுதொடர்பான வழக்கு ஒன்று உயர் நீதிமன்றத்தில் வந்தபோது, ஒன்றிய அரசின் வழக்கறிஞர், "நாங்கள் எப்போதோ அதைத் திரும்ப அனுப்பி விட்டோம்" என்று சொன்னார். அப்படி அவர் சொன்னதற்குப் பிறகுதான், இந்த உண்மையே வெளியில் தெரிந்தது. கடந்த 8-ஆம் தேதி, இதைச் சட்டமன்றத்தில் நான் கேட்டபோதும் அ.தி.மு.க.வினரால் பதில் சொல்ல முடியவில்லை. ஆளுநரிடம் கேட்பதற்கு பயந்து, ஒன்றிய பாஜக அரசிடம் கேட்பதற்கு பயந்து, பதுங்கியதன் விளைவாகத்தான் நான்காண்டு காலமாக தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடந்ததே தவிர, வேறல்ல.

“தி.மு.க. ஆட்சி... தி.மு.க. ஆட்சி..." என்று சொல்லும் ‘பச்சை பொய்’ பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் எந்தத் தேர்வு மையத்தில் நீட் தேர்வு நடந்ததென்று சொல்லத் திராணி உள்ளதா? ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்குள் கடந்த நான்காண்டுகள் நுழைய முடியாமல் போனதற்கு யார் காரணம்? அதற்குப் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் பதில் சொல்லட்டும்!

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிய உழவர்களைத் தரகர்கள் என்று சொன்னது, கொரோனா காலத்தில் நேரம் காலம் பாராமல் பணியாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களைத் தன்னுடைய இரக்கமற்ற சொற்களால் அவமானப்படுத்தியது என்று எத்தனையோ செயல்களைச் செய்த பழனிசாமி, இப்போது அவர் செய்த கோமாளிக் கூத்துகளை மக்கள் மறந்துவிட்டிருப்பார்கள் என்று நினைத்து தினம் ஒரு தகவல் போல, தினம் ஒரு பொய் என்ற காமெடி நிகழ்ச்சியை நடத்திக்கொண்டு இருக்கிறார். கூச்சமே படாமல் திமுக மீது புகார் சொல்லி வருகிறார்.

திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு கூட ஆகவில்லை. அதற்குள் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டிவிட்டோம் என்பதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தேர்தல் முடிவுகள் வந்து முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்னாடியே இரவு பகல் பாராமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தவன்தான் இந்த ஸ்டாலின். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உடனே முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றக் கையெழுத்து போட்டேன். கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் வழங்க கையெழுத்து போட்டேன். ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துக் கையெழுத்து போட்டேன். நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்று கையெழுத்து போட்டேன். நான்காவதாக, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக் கட்டணம் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காகக் கையெழுத்துப் போட்டேன். ஐந்தாவதாக, என்னிடம் வழங்கப்படும் மனுக்களுக்கு நூறு நாட்களுக்குள் தீர்வுகாண புதிய துறையை உருவாக்கிக் கையெழுத்து போட்டேன்.

இப்படி, இன்று வரை பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது எல்லாம் உங்களுக்குத் தெரியும். நமது அரசின் அறிவிப்புகளால் பயனடைந்த மக்களுக்கு நன்றாகவே தெரியும். அனைவரும் நமது செய்யும் நலத்திட்டங்களை நிறைவேற்றும் வாக்குறுதிகளைச் செய்திகளில் பார்த்து தெரிந்துகொள்கிறீர்கள். பத்திரிகைகளில் படித்துத் தெரிந்துகொள்கிறீர்கள். ஆனால் சேக்கிழார் எழுதிய கம்பராமாணயத்தைப் படித்த பழனிசாமியால் தினமும் வரும் செய்தித்தாள்களைக் கூட படிக்க முடியவில்லை.

பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் கம்பெனி சீரழித்துவிட்டுப் போன நிதிநிலைமையை நாம் இப்போது சரி செய்துகொண்டு இருக்கிறோம். மீதம் இருக்கும் வாக்குறுதிகளை அடுத்தடுத்து நிறைவேற்றப் போகிறோம். இது தலைவர் கருணாநிதியின் மகனான இந்த ஸ்டாலினின் அரசு. நாங்கள் சொன்னதைச் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம். மக்கள் நலனை மனதில் வைத்து சொல்லாததையும் செய்யும் அரசுதான் இது. இது ஸ்டாலினின் அரசு என்றால் தமிழ்நாட்டு மக்களாகிய உங்களின் அரசு.

ஆனால் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், சொன்னதையெல்லாம் பத்தாண்டுகால அவல ஆட்சியில் நிறைவேற்றினார்களா? எல்லோருக்கும் செல்போன் கொடுப்பதாகச் சொன்னார்கள். தமிழ்நாட்டில் எவர் ஒருவருக்காவது செல்போன் கிடைத்ததா? பழனிசாமி கொடுத்த செல்போன் யார் வீட்டிலாவது இருக்கிறதா?

இலவசமாக அம்மா மினரல் வாட்டர் கொடுத்தார்களா? கைத்தறித் துணிகள் வாங்க 500 ரூபாய் கூப்பன் கொடுத்தார்களா? எதைக் கொடுத்தார்கள்? செய்தது எதையாவது ஒழுங்காகச் செய்தார்களா என்றால், அதுவுமில்லை. கழிவறை போன்ற இடத்தில் மயானச் சடங்குகள் நடக்கும் இடத்தில், குறுகிய சந்தில், கழிவுநீர்க் குட்டைக்குப் பக்கத்தில் என மினி கிளினிக்குகள் என்ற பெயரில் எதையோ அமைத்தார்கள். புதிதாக மருத்துவர்களையோ, செவிலியர்களையோ வேலைக்கு எடுக்காமல் மற்ற இடங்களில் பணியாற்றிக் கொண்டு இருப்பவர்களை இங்கு மாற்றி 200 மினி கிளினிக்குகள் உருவாக்கியதாக கணக்கு காட்டிவிட்டார்கள். ஒரு திட்டத்தை எப்படித் தீட்டுவது, எப்படி உருவாக்குவது என்பதே தெரியாத அதிமுகவின் கையில் அன்று ஆட்சி இருந்தது.

அதிமுக ஆட்சியானது தமிழ்நாட்டில் கொள்ளை அடித்தது. டெல்லிக்கு தலையாட்டியது. அதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய ரெய்டுகளின் மூலமாக அவர்களின் லட்சணம் வெளிச்சத்துக்கு வரவில்லையா?

வணிகவரித்துறை அமைச்சராக இருந்த வீரமணி வீட்டில் 34 லட்சம் ரூபாய் பணம், 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. 1 இலட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க டாலர் கைப்பற்றப்பட்டுள்ளது. 623 சவரன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் நடந்த சோதனையில் 2 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 650 ரூபாய் பணமும், தங்கநகைகள் 6 கிலோ, சுமார் 14 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை கொடுத்திருக்கிறது. போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 13 லட்சம் ரூபாயும், 2 கோடிக்கான வைப்புத் தொகை, நிலப்பதிவு ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜயபாஸ்கர், வருமானத்துக்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 23 லட்ச ரூபாய் பணமும், 5 கிலோ தங்கமும், 136 கனரக வாகனங்களின் ஆவணங்களும் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. மின்துறை அமைச்சராக இருந்த தங்கமணி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. நிலக்கரியைக் காணாமல் போன மர்மமும் இன்னும் விலகவில்லை.

இவர்கள் அனைவர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். அதிமுக ஆட்சியில் வாயைத் திறந்தாலே வன்முறையைத் தூண்டும் அமைச்சராக இருந்தாரே... ராஜேந்திர பாலாஜி என்கிற ஒருவர்! ஆட்சி மாறியதும் அவர் தனது மஞ்சள் சட்டையைக் கழற்றிவிட்டு மாறுவேடத்தில் தலைமறைவு ஆனதைத்தான் நீங்கள் பார்த்தீர்கள்? வேலை வாங்கித் தருவதாக அவர் நடத்திய மோசடி தொடர்பாக பலரும் புகார் கொடுத்துள்ளார்களே!

இவர்களின் கையில்தான் கோட்டையும் ஆட்சியும் இருந்தது. எண்ணற்ற முறைகேடுகளும் நடந்தன. இந்தக் கும்பலிடம் உள்ளாட்சி அமைப்புகளைக் கொடுத்துவிடாதீர்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்