சென்னை: கவுரவ விரிவுரையாளர்களின் பணி நிலைப்பு உள்ளிட் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மூன்று நாட்களாக போராட்டம் நடத்திய நிலையில், அவர்களுடன் பேச மறுத்து விட்ட தமிழக அரசு, அவர்களை மறைமுகமாக அச்சுறுத்தி போராட்டத்தை கைவிடச் செய்துள்ளது. உரிமை கேட்டுப் போராடியவர்களின் கோரிக்கைகளைக் கூட தமிழக அரசு கேட்க மறுப்பது நியாயமற்றது.
தமிழ்நாட்டில் 108 நேரடி அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 4083 கவுரவ விரிவுரையாளர்களும், பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள 41 அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 1500 கவுரவ விரிவுரையாளர்களும் உள்ளனர். கவுரவ விரிவுரையாளர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரூ.10,000 மட்டுமே மாத ஊதியமாக வழங்கப்பட்டது. பின்னர் அது ரூ.15 ஆயிரமாகவும், நடப்பாண்டின் தொடக்கத்திலிருந்து ரூ.20,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் இந்த ஊதியம், அமைப்பு சாரா தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட மிகவும் குறைவு ஆகும். அதிலும் ஆண்டு முழுவதும் பணியாற்றினாலும் கூட 11 மாதங்களுக்கு மட்டும் தான் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. அதுவும் கூட பல நேரங்களில் 5 மாதங்கள் வரை ஊதியம் வழங்கப்படாமல் அவர்கள் அரசால் அலைக்கழிக்கப்படும் கொடுமைகளும் நடக்கும்.
கவுரவ விரிவுரையாளர் என அழைக்கப்பட்டாலும் கவுரவமற்றவர்களாகவே அவர்கள் நடத்தப்படுகின்றனர். கவுரவ விரிவுரையாளர்களில் பலர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கான ஊதியம் என்பது அவர்களின் தகுதிக்கும், அனுபவத்திற்கும் பொருத்தமானதாக இல்லை. கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.57,000 ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைகழக மானியக்குழு ஆணையிட்டிருக்கிறது. ஆனால், ஹரியானாவைத் தவிர எந்த மாநிலமும் இதை மதித்து செயல்படுத்தவில்லை. கர்நாடகத்தில் மாத ஊதியமாக ரூ.32,000 வழங்கப்படுகிறது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இருந்தாலும் கூட, அதை எந்த அரசும் செயல்படுத்துவதில்லை; இன்னும் கேட்டால் அரசுகளே அத்தீர்ப்பை அவமதிக்கின்றன.
கவுரவ விரிவுரையாளர்களில் பெரும்பான்மையினர் 45, 50 வயதைக் கடந்து விட்டனர். இதன்பிறகு அவர்கள் வேறு பணிக்கு செல்வதோ, பொதுவான விதிகளின் கீழ் தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதோ சாத்தியமில்லை. அதனால் தான் அவர்கள் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றிய காலத்தையும், அவர்களின் கல்வித்தகுதியையும் கொண்டு அவர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன்.
» நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட வாரியாக மதிமுக கூட்டங்களில் பங்கேற்கிறார் துரை வைகோ
» சிம்மம், கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! பிப்ரவரி 10 முதல் 16ம் தேதி வரை
முந்தைய ஆட்சியின் நிறைவில், கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கும் நோக்குடன், 2021 பிப்ரவரி 15,16,17,18 ஆகிய நாட்களில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. ஆனால், நீதிமன்ற வழக்குகளால் அது சாத்தியமாகவில்லை. புதிய அரசு பதவியேற்ற பிறகும் கூட கவுரவ விரிவுரையாளர்கள் பணி வரன்முறை செய்யப்படுவர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், பல மாதங்களாகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
இத்தகைய சூழலில் தான் கவுரவ விரிவுரையாளர்கள் தங்களுக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும்; பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 7&ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால், அரசுத் தரப்பிலிருந்து எவரும் அவர்களை சந்தித்து பேசவில்லை. மாறாக, அவர்களை அச்சுறுத்தி போராட்டத்தை திரும்பப் பெறச் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆசிரியர்கள் மரியாதைக்குரியவர்கள். அவர்கள் தங்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் கோரி போராடும் நிலையை அரசு ஏற்படுத்தக்கூடாது. கவுரவ விரிவுரையாளர்களை அழைத்து, அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்த வேண்டும். பணி நிலைப்பு உள்ளிட்ட அவர்களின் சாத்தியமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago