நெல்லையில் வங்கியில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் எரிந்து நாசம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியிலுள்ள வங்கியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் எரிந்து நாசமாயின. தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

திருநெல்வேலி புரத்தில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளை செயல்படுகிறது. நேற்று பணப்பரிவர்த்தனை நடந்து கொண்டிருந்தபோது பகல் 12 மணியளவில் திடீரென்று அங்கிருந்த இன்வெர்ட்டரில் இருந்து லேசான தீப்பொறி தெறித்து விழுந்துள்ளது. இதனை, அங்கிருந்த ஊழியர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், பணிகளைத் தொடர்ந்தனர். தீப்பொறி பெரிதாக கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதும், பதறிப்போன ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பாளையங்கோட்டை மற்றும் பேட்டை தீயணைப்பு படையினர் 30-க்கும் மேற்பட்டோர், 4 வாகனங்களில் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வங்கிக் கட்டிடத்தின் சீலிங் பகுதியில் உள்ள தெர்மாக்கோல் தீப்பிடித்து எரிந்ததால் வங்கியில் இருந்து அதிக புகை மூட்டம் வெளியேறியது. அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது. ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் வங்கியின் பின்புறம் உள்ள ஜன்னலை உடைத்து வீரர்கள் உள்ளே சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 5 மணி நேரத்துக்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

தீ விபத்தில் வங்கியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர்கள், பணபரிவர்த்தனை ஆவணங்கள் மற்றும் நகைக்கடன், வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் ஆவணங்கள் கருகி நாசமாகின. சேதமாகாத ஆவணங்கள் மற்றும் பொருட்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக வெளியே எடுத்து வந்தனர்.

வங்கி லாக்கரில் இருக்கும் நகைகள், ஆவணங்கள் மற்றும் ரொக்கம் சேதமடையவில்லை என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், பரிவர்த்தனைக்காக வைக்கப்பட்டிருந்த ரொக்கம் எரிந்திருக்கலாம் என்று தெரிகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் விசாரிக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE