நாங்கள் மதம், சாதியை வைத்து அரசியல் செய்யவில்லை - தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

"ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் பணி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். மதத்தை வைத்தோ, சாதியை வைத்தோ அரசியல் செய்யவில்லை" என்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் உரையாற்றினார். அரசின் திட்டங்களை அடுக்கிய அவர், "இந்த ஆட்சி மலர்ந்த இந்த எட்டு மாத காலத்தில் இதுவரை 5 அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இந்த அரசு நடத்தி இருக்கிறது. இதை விட ஜனநாயகம் வேறு எங்கே இருக்க முடியும்? சட்டமன்றத்தில் ஆளும்கட்சி உறுப்பினர்களை விட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் – குறிப்பாக அதிமுக உறுப்பினர்கள்தான் அதிக நேரம் பேசுகிறார்கள். பேச அனுமதிக்கப்படுகிறார்கள். சட்டமன்றத்தில் கருத்துகளைச் சொல்வதற்கு முழுமையாக அவர்களுக்கு நேரம் தரப்படுகிறது. இதை விட ஜனநாயகம் வேறு எங்கே இருக்க முடியும்?

என்னைச் சர்வாதிகாரி என்று சொல்லிய பழனிசாமி, நான் பொம்மை என்றும் சொல்லி இருக்கிறார். இப்படி வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டு இருக்கிறார் அவர். மக்கள் கொடுத்த தோல்வியில் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. தேர்தல் முடிந்து எட்டு மாதம்தான் ஆகி இருக்கிறது. ஆட்சி பறிபோயிருக்கிறது அவருக்கு. இந்த நிலையில் நேற்றைய தினம் பேசிய பழனிசாமி, 'அதிமுகவை யாராலும் தோற்கடிக்க முடியாது' என்று பேசி இருக்கிறார். அதுதான் தோற்றுவிட்டீர்களே! அதன்பிறகும் யாராலும் தோற்கடிக்கமுடியாது என்றால் என்ன அர்த்தம்? ஆட்சி மாறிவிட்டது என்பதையே உணராதவராக இருக்கிறார் பழனிசாமி.

அதிமுக ஆட்சியின்போது பொங்கலுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்னார் ஸ்டாலின், இப்போது 100 ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று பேசி இருக்கிறார். நான் 5 ஆயிரம் கொடுக்கச் சொன்னது, கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரண நிதியாகத்தான் கொடுக்கச் சொன்னேன். திமுக ஆட்சி மலர்ந்த உடனேயே 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரு தவணைகளில் 4 ஆயிரம் ரூபாய் வழங்கிவிட்டோம். ஆனாலும் திசை திருப்பும் பொய்களைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார் பச்சைப் பொய் பழனிசாமி.

ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் பணி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். மதத்தை வைத்தோ - சாதியை வைத்தோ அரசியல் செய்யவில்லை. சில கட்சிகள் வேண்டுமானால் தங்களது தோல்வியை மறைப்பதற்காக இதுபோல ஏதாவது ஒரு விவகாரத்தில் மறைந்து கொண்டு எங்கள் மீது தாக்குதல் நடத்தலாம். எங்களுக்குச் செய்வதற்கு உருப்படியான வேறு பணிகள் இருக்கின்றன.

எட்டே மாதத்தில் நாம் தூத்துக்குடி மாவட்டத்துக்கு செய்த பணிகளே நீண்ட பட்டியலாக அமைந்துவிட்டது. ஆனால் இது எதையும் பழனிசாமி, பன்னீர்செல்வம் கும்பலால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் திமுக கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்று பொய் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.

கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு, 'யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ளே வை என்பார்கள். அதைப் போல இந்த இரு யோக்கியர்களைப் பற்றியும் நாட்டுக்குத் தெரியும். இவர்கள் ஆட்சி நடத்திய முறையைப் பற்றியும் நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழ்நாட்டு ஏழை, எளிய மாணவர்களுக்கு - கிராமப்புற மாணவர்களுக்கு - அதிலும் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் என்ற நுழைவுத்தேர்வு அவர்களது மருத்துவக் கல்விக் கனவை சிதைக்கும் என்பதைத் தொடக்கத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் வாதாடியும் போராடியும் வருகிறார்கள்.

இந்த நீட் தேர்வு தொடர்பாக ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழு ஒரு லட்சம் பேர் வரைக்கும் கருத்துக்களை வாங்கி, அரசுக்கு அறிக்கையாகக் கொடுத்து, அதனைத் தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு பரிசீலித்து, சட்டமுன் வடிவைத் தயாரித்து, அதனைச் சட்டமன்றத்தில் வைத்து, ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவை, வெறும் நியமனப் பதவியில் உள்ள ஆளுநர் ஒருவர் நிராகரிக்கிறார் என்றால் அவருக்கு அந்த தைரியத்தைக் கொடுத்தது யார்? யாருடைய பிரதிநிதியாக அவர் இருக்கிறார்? யார் ஆட்டுவிப்பதால் அவர் ஆடுகிறார்? கோடிக்கணக்கான மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட சட்டத்தை நியமன ஆளுநர் நிராகரிக்கிறார் என்றால் இந்த நாட்டில் மக்களாட்சி நடக்கிறதா? இதனைக் கேள்வி கேட்பதற்கு எங்களுக்கு உரிமை இல்லையா? இந்தப் பதவியில் அலங்காரப் பதுமைகளாக இருப்பதற்காக ஒன்றும் நாங்கள் வரவில்லை.

அண்ணாவோ, தலைவர் கருணாநிதியோ எங்களை அப்படி உருவாக்கவில்லை. அனைத்தையும் கேள்வி கேள் என்று கற்றுக் கொடுத்த பெரியாரின் மண், இந்த மண். ஒரு ஆளுநரைக் கேள்வி கேட்கக் கூடாதா? அனிதா உள்ளிட்ட பல மாணவக் கண்மணிகள் தம்மைத் தாமே மாய்த்துக் கொண்டார்களே. கல்விச் சாலைகளில் மேன்மையை அடைந்து, வாழ்க்கைப் பாதையை நோக்கி முன்னேறிப் போகும் வயதில், பிணவறைக் கூடங்களில் அவர்கள் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த காட்சியைப் பார்த்த பிறகும் இந்த நாட்டில் சிலருக்கு நீட் தேர்வை ஆதரிக்க எப்படி மனம் வருகிறது?

அதனால்தான் அது தேர்வு அல்ல, பலிபீடம் என்று நான் சொன்னேன். ஆளுநராக இருந்தாலும், ஒன்றியத்தை ஆளும் ஆட்சியாளர்களாக இருந்தாலும், தமிழ்நாட்டு மக்களின் கேள்விக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

சில நாட்களுக்கு முன்னால் நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி., ராகுல்காந்தி, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். அவருக்குத் தமிழ் மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொண்டேன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பாஜக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று ராகுல் காந்தி சொன்னார். இதற்குப் பதில் சொன்ன பிரதமர் மோடி, தமிழ்நாட்டு மக்கள் தேசிய உணர்வு கொண்டவர்கள் என்றும், மறைந்த முப்படைத் தளபதிக்கு வீரவணக்கம் செலுத்தியது தமிழ்நாடு என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

பாஜகவை விமர்சிப்பது என்பதை இந்தியாவையே விமர்சிப்பதாக அவரே திசை திருப்பிக் கொள்கிறார். ஆனால் நாட்டுக்காகப் போராடிய வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் உள்ளிட்ட விடுதலை வீரர்களின் சிலைகள் அடங்கிய அலங்கார ஊர்திகளைக் குடியரசு நாள் அணிவகுப்பில் அனுமதிக்க முடியாது என்று சொன்னது யார்? குடியரசு நாள் அணிவகுப்பில் கலந்துகொண்ட மற்ற மாநிலங்களின் அலங்கார ஊர்திகளைவிடத் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி எந்த விதத்தில் குறைந்து போய்விட்டது?

தன்னுடைய பேச்சில் பாரதியாரின் கவிதையை மேற்கோள் காட்டிப் பேசும் பிரதமர் மோடிக்கு, பாரதியாரின் திருவுருவச் சிலையைக் குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுப்பில் அனுமதிப்பதில் என்ன பிரச்சினை? நாட்டுக்காகப் போராடிய தலைவர்களை, வீரர்களை மதித்துப் போற்றுவதில் தமிழ்நாடு யாருக்கும் சளைத்தது அல்ல. தமிழர்களின் நாட்டுப்பற்றுக்குப் பிரதமர் மோடி சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை. அதற்கு வரலாறே சாட்சியாக இருக்கிறது.

தேசம் என்று அவர்கள் சொல்கிறார்களே... எது தேசம் என்பதில்தான் அவர்களுக்கும் நமக்குமான பிரச்சினை. வெறும் நிலப்பரப்புதான் தேசம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இல்லை, இந்த மண்ணில் வாழும் மக்கள்தான் தேசம் என்று நாம் சொல்கிறோம். இந்த மண்ணையும் மக்களையும் புரிந்துகொள்ளாதவர்களாக, மதிக்காதவர்களாக, எதிராகச் செயல்படுகிறவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். பல்வேறு இனமும், மொழியும் கலையும் பண்பாடும் கொண்டதுதான் இந்தியத் துணைக்கண்டம் என்கிறோம் நாம். இந்த நாட்டை, பல்வேறு அழகிய மலர்களைக் கொண்ட பூங்கொத்தாக நாங்கள் பார்க்கிறோம். அதனைப் பாதுக்காக்கவே போராடுகிறோம்.

நீட் தேர்வு விலக்கு சட்டமுன்வடிவுக்கு எதிராக வெளிநடப்பு செய்ததன் மூலமாக, பாஜக தமிழ்நாட்டில் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தகைய ஜனநாயக விரோத, மக்கள் விரோத, தமிழர் விரோத, தமிழ்நாடு விரோத சக்திகள் இந்தத் தேர்தலில் மட்டுமல்ல எல்லா தேர்தலிலும் தோற்கடிக்கப்பட வேண்டும்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்