ஹிஜாப் தொடர்பான தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கவும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: ஹிஜாப் தொடர்பான தேவையற்ற சர்ச்சைகள் தவிர்த்துவிட்டு, கல்வி நிறுவனங்களில் கல்வி, நல்லிணக்கம் மட்டுமே கோலோச்ச வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் எனப்படும் இஸ்லாமிய கலாச்சார ஆடையை அணிவதற்கு ஆதரவாகவும், எதிராகவும் வெடித்துள்ள சர்ச்சைகளும், போராட்டங்களும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆடைகள் சுதந்திரத்தை மதிக்காமல் செய்யப்படும் போராட்டங்களும், ஏவப்படும் வெறுப்பு பரப்புரைகளும் தேவையற்றவை. அமைதியைக் குலைக்கும் இச்செயல்கள் தடுக்கப்பட வேண்டும்.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் அரசு புதுமுகக் கல்லூரியில் கடந்த மாதத் தொடக்கத்தில் ஹிஜாப் அணிந்து வந்த 12 இஸ்லாமிய மாணவிகளை வளாகத்தில் நுழைய அனுமதித்த கல்லூரி நிர்வாகம் வகுப்புகளுக்கு அனுமதிக்க மறுத்ததில் இருந்து தான் சர்ச்சை தொடங்கியது. அவர்களில் 6 மாணவிகள் கல்லூரியில் விதிகளை ஏற்றுக்கொண்டு ஹிஜாப் அணிவதை கைவிடுவதாக ஒப்புக்கொண்ட நிலையில், மீதமுள்ள மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கோரி ஒரு மாதமாக போராடி வருகின்றனர். அவர்களில் சிலர் ஹிஜாப் அணிய அனுமதி கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர்.

உடுப்பி கல்லூரியைத் தொடர்ந்து அதே மாவட்டத்தில் உள்ள குண்டாப்பூர் புதுமுகக் கல்லூரியிலும் சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததும், அவர்கள் கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேற்றப் பட்டதும் சர்ச்சையாகியுள்ளது. இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் காவித் துண்டு அணிந்து போராட்டம் நடத்தி வருவது பதற்றத்தை அதிகரித்துள்ளது. பல இடங்களில் காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக கர்நாடக மாநிலத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பன்முகத்தன்மை கொண்ட நாடான இந்தியாவில் ஆடைகள் தொடர்பான கட்டுப்பாடுகள் வெறுப்பை விதைத்து விடக்கூடாது; கல்வியை சிதைத்து விடக்கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கவலை ஆகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25(1)-வது பிரிவு இந்தியாவிலுள்ள அனைத்து மதப்பிரிவினரும் அவர்களின் மத நம்பிக்கைகளை கடைபிடிக்க அனுமதிக்கிறது. அதேநேரத்தில் அது பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்று நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. அதைக் காரணம் காட்டி, கல்வி நிறுவனங்களில் ஆடைக்கட்டுப்பாடுகளை நிர்ணயிக்க அவற்றின் நிர்வாகங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் அடையாளம் தான் சீருடைகள் ஆகும்.

மத நம்பிக்கைகளையும், அடையாளங்களையும் கடைபிடிக்கும் விஷயத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம் எல்லையற்ற சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது. சீக்கியர்கள் தலைப்பாகை அணிந்து கொள்ளவும், கிறித்தவர்கள் சிலுவை அணியவும், இந்துக்கள் பல வகையான திலகங்கள், திருநீறு பூசிக் கொள்ளவும் அனுமதிக்கிறது. அதன் நீட்சியாகவே ஹிஜாப் அணிவதையும் பார்க்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்க நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை.

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதை அனுமதிக்கலாமா? என்ற சர்ச்சைகள் கடந்த காலங்களிலும் பலமுறை எழுந்துள்ளன. அப்போதெல்லாம் எந்த ஆடையும் கற்றலுக்கும், கற்பித்தலுக்கும் தடையாக இருக்கக்கூடாது என்பதே நீதிமன்றங்களாலும், கல்வியாளர்களாலும் நிபந்தனையாக வைக்கப்பட்டுள்ளன. வகுப்பறைகளைப் பொறுத்தவரை, ஹிஜாப் அடுத்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. ஆசிரியர்கள் மாணவிகளின் முகத்தைப் பார்த்து கற்பிப்பதற்கு வசதியாக ஹிஜாப் முகத்தை மறைக்கக்கூடாது. அதனால் முகத்தை மறைக்காமல் தலையை மட்டும் மறைக்கும் ஹிஜாப் அணிவதை அனுமதிக்கலாம் என கல்வியாளர்கள் வழிகாட்டியுள்ளனர். இந்தியாவிலும், இப்போது கர்நாடகத்திலும் அத்தகைய ஹிஜாப் தான் மாணவிகளால் அணியப்படுகின்றன என்பதால் அவற்றை அனுமதிப்பதில் தவறு இல்லை.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் பள்ளிகளில் சீருடைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அவை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் கல்லூரிகளில் சீருடைகள் கட்டாயம் இல்லை என்பதால், அங்கு ஹிஜாப்களை அனுமதிக்கலாம். எந்த மதத்தைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும் அவர்கள் கல்வி கற்கிறார்களா? என்பது தான் முக்கியமே தவிர, எந்த ஆடை அணிகிறார்கள் என்பது முக்கியமில்லை. பெண்கள் கல்வி கற்பதற்கு மதக்கட்டுப்பாடுகளும், அடையாளங்களும் தடையாக இருந்தால் அவை அகற்றப்பட வேண்டும்.

இந்தியாவில் பெண்கள் இப்போது தான் கல்வி கற்று முன்னேறத் தொடங்கியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இஸ்லாமியப் பெண்களுக்கு இப்போது தான் கல்வி வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. எனவே, தோற்பது எதுவாக இருந்தாலும் வெல்வது பெண் கல்வியாக இருக்க வேண்டும். இதை உணர்ந்து ஹிஜாப் தொடர்பான தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் கல்வி, அமைதி, நல்லிணக்கம் மட்டுமே கோலோச்ச வேண்டும்; இதை அரசு உறுதி செய்ய வேண்டும்."

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்