சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றம்; உடனடியாக ஆளுநருக்கு அனுப்பிவைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நேற்று மாலையே அனுப்பி வைக்கப்பட்டது.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறும்வரை விடமாட்டோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறும் வகையில் கடந்த ஆண்டு செப்.13-ம் தேதி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதில், ‘மாநிலத்தில், முக்கியமாக கிராமப் பகுதிகளில் வலுவான பொது சுகாதார நலனை உறுதி செய்யவும், மருத்துவ இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் தேவையை விட்டுவிடவும், நெறிப்படுத்துதல் முறை மூலம் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் படிப்புகளின் சேர்க்கையை வழங்கவும் சட்டம் ஒன்றை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு செயல்வடிவம் கொடுக்க, சட்ட மசோதா வழி செய்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற நிலையில், அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நீட் தேர்வு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு விரைவாக அனுப்பிட வலியுறுத்தினார். அதன்பிறகும் மசோதாவை ஆளுநர் அனுப்பாததால் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் தமிழக எம்.பி.க்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் எம்.பி.க்கள் குழு சந்தித்து வலியுறுத்தியது.

இந்நிலையில், 142 நாட்களுக்கு பிறகு நீட் தேர்வு மசோதாவை மறுபரிசீலனை செய்யும்படி கூறி, கடந்த பிப்.1-ம் தேதி பேரவைத் தலைவருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதைத் தொடர்ந்து, கடந்த பிப்.5-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில் அதிமுக, பாஜக பங்கேற்கவில்லை. பிப்.8-ம் தேதி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை கூட்ட அரங்கில் நேற்று காலை 10 மணிக்கு சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது. கூட்டம் தொடங்கியதும் மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் தெரிவித்த காரணங்கள் அடங்கிய கடிதத்தை அவையில் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பதிவு செய்தார். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆளுநர் குறிப்பிட்டுள்ள 6 காரணங்களுக்கு விளக்கங்களை அளித்தார்.

இதனிடையே, நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, மமக, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொமதேக, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள், மசோதாவை வரவேற்று பேசினர்.

பின்னர் முதல்வர் பேசியதாவது: நீட் தேர்வு என்பதே தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு சாதகமானதுதான். அங்கு லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கின்றனர். இவ்வளவு பணத்தை செலுத்தி பயிற்சி பெற முடியாத மாணவர்களுக்காகத்தான் நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கிறோம். அதற்கான மசோதாவை கொண்டு வருகிறோம்.

சில மாணவர்களை கல்லறைக்கும், சில மாணவர்களை சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா என்பதுதான் கேள்வி. பல மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே தமிழக மாணவர்களுக்கு நன்மை பயக்கும்.

விரிவாக ஆராய்ந்து, உரிய தரவுகளுடன்தான் மசோதாவை நிறைவேற்றினோம். அதை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியிருக்க வேண்டும். எந்த முடிவும் எடுக்காமல் 142 நாட்கள் வைத்திருந்தார். இதுகுறித்து மீண்டும் வலியுறுத்திய நிலையில் நமக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.

மசோதாவை நிராகரிப்பதற்காக அவர் சொன்ன காரணங்கள் சரியானவை அல்ல. அரசமைப்பு ரீதியாக நீட் தேர்வு தேவைப்படுவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டம், பாகுபாட்டுக்கு எதிரானது. ஆனால், நீட் தேர்வு பாகுபாடு காட்டுகிறது. அரசியலமைப்புச் சட்டம் சமூகநீதியை வலியுறுத்துகிறது. ஆனால், நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது. வெற்றி பெறும்வரை இந்தப் போராட்டத்தை விடமாட்டோம்.

மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதன் மூலம் மாநிலத்தின் உரிமை கேள்விக்குறியாக ஆக்கப்பட்டுள்ளது. மாநில சுயாட்சி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை நிறுத்தி வைக்க முடியும், உதாசீனப்படுத்த முடியும் என்றால், மற்ற மாநிலங்களின் கதி என்ன? பல்வேறு இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடு கொண்ட மக்களின் நிலை என்ன? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் கொள்கை முடிவை, வெறும் நியமனப் பதவியில் அமர்ந்திருக்கும் ஆளுநர் மதிக்காமல் திருப்பி அனுப்புவது மக்களாட்சி தத்துவத்துக்கே எதிரானது. பிறகு எந்த நம்பிக்கையில் மக்கள் வாக்களிப்பார்கள், யாரை நம்பி வாக்களிப்பார்கள் என்பதுதான் நாம் எழுப்ப வேண்டிய கேள்வியாகும்.

கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் முயற்சியாக சமீபகால காட்சிகள் அமைவது வருத்தம் அளிக்கிறது. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்துடன் முரண்படும் ஒரு சட்டத்தை மாநில சட்டப்பேரவை நிறைவேற்றி, அதை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப ஆளுநருக்கு மாநில அமைச்சரவை அறிவுறுத்தினால், ஆளுநர் அதன்படி உடனடியாக செய்தாக வேண்டும். அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டே ஆளுநர் நடக்க வேண்டும்.

நமக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றினோம். அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டியது ஆளுநரின் கடமை. அந்த கடமையை முறையாக இனியாவது ஆளுநர் செய்வார் என எதிர்பார்க்கிறேன். தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, மாணவர்களின் நலனை எண்ணி, மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் இந்த நீட் விலக்கு மசோதாவை காலம்தாழ்த்தாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

இதையடுத்து, ஆளுநரால் பிப்.1-ம் தேதி திருப்பி அனுப்பப்பட்ட தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட மசோதா மறுஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று முதல்வர் கோரினார். இதையடுத்து, மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும், இது உடனடியாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார். பின்னர், தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. பேரவைத் தலைவர் அறிவித்தபடி, இந்த மசோதா நேற்று மாலையே பேரவைச் செயலகம் மூலம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பாஜக வெளிநடப்பு

நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பேரவையில் நீட் தேர்வு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதை தொடர்ந்து, பேரவை கட்சித் தலைவர்கள் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் பேச வாய்ப்பு கேட்டார். முதலில் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், பின்னர் பேச வாய்ப்பு தரப்பட்டது. அப்போது, அறிமுக நிலையிலேயே மசோதாவை எதிர்ப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். அதன்பிறகு பேச வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், பாஜக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்