நீட் எதிர்ப்புக் கொள்கையில் அதிமுக உறுதி; இதில் அரசியல் வேண்டாம் - பேரவையில் விஜயபாஸ்கர் பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: "நீட் தேர்வு எதிர்ப்புக் கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது. நீட் விவகாரத்தில் அரசியல் வேண்டாம்" என்று சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றிய விஜயபாஸ்கர் கூறியது: "அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வுக்கு விலக்கு பெற பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. பல்வேறு அரசியல் அழுத்தத்திற்கும் இடையில் சட்டப் போராட்டங்களை மேற்கொண்டோம். அந்த வேளையில் மருத்துவப் படிப்பில் கிராமப்புற மாணவர்களுக்காக 7.5% இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது அதிமுக அரசு. அதனால்தான் இன்று குப்பன், சுப்பனின் மகனும், மகளும் மருத்துவராகும் கனவு நனவாகி உள்ளது.

கடந்த 2005-ல் மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வே வேண்டாம் என்ற நிலையை அதிமுக கொண்டு வந்தது. நீட் என்கிற தேர்வு முறையை 2010-ல் நாட்டில் கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சிதான். நீட் தேர்வு எதிர்ப்புக் கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது. நீட் விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என்பதுதான் எனது நிலைப்பாடும் கூட. நீட் விவகாரத்தை சட்டரீதியாக நுணுக்கத்தோடு அணுக வேண்டும்" என்றார் விஜயபாஸ்கர்.

எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு: விஜயபாஸ்கர் பேச்சின்போது குறுக்கிட்டுப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "நீட் தேர்வு தமிழகத்தில் எனது ஆட்சிக் காலத்தில் அமலுக்கு வந்ததுபோல் அவதூறு பிரச்சாரத்தை எதிர்க்கட்சியை மேற்கொள்கின்றனர். நீட் தேர்வு எப்போது வந்தது என்ற உண்மையைத்தான் விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்" என்றார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, "விஜயபாஸ்கர் பேசிய அனைத்தும் அவைக் குறிப்பில் இருக்கிறது. ஒன்றும் பிரச்சினை இல்லை. நீங்கள் அமரலாம்" என்றார். அதை ஏற்று எடப்பாடி பழனிசாமியும் அமர்ந்தார்.

காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப் பெருந்தகை பேசுகையில், "ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு அதைப் பரிசீலித்து தமிழக அரசு நீட் விலக்கு கோரும் சட்ட மசோதாவை ஆளுநருக்கு அனுப்பியது. அதனை ஆளுநர் முறைப்படி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் அதைவிடுத்து அரசுக்கே ஆளுநர் அதை திருப்பி அனுப்பியுள்ளார். அதற்கு உச்ச நீதிமன்ற வழக்கை மேற்கோள் காட்டியுள்ளார். அது ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனம் தொடர்ந்த வழக்கு. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வேறு, நாம் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதா வேறு. அதையும், இதையும் முடிச்சுப்போடுவது தவறு. மாணவர்களின் நலனுக்காக சட்டப்பிரிவு 46-ஐ, இந்தியாவில் அமல்படுத்தும் ஒரே மாநிலம் தமிழகம் என்பதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்.

சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் முதல்வர் நமது முதல்வர். அவர் ஹை வோல்ட் முதல்வர். அவரை நெருங்கவே முடியாது என்பதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும். கல்வித் தரத்தை உயர்த்துகிறோம் என்ற பெயரில் அவர்கள் கல்வி நிலையங்களுக்குள் நுழைய முடியாத காரியத்தை அரசு செய்கிறது என்று நுழைவுத் தேர்வு குறித்து அம்பேத்கர் கூறியதை நினைவில் கொண்டு நீட் தேர்வு விலக்கு மசோதாவை அரசு கொண்டுவந்துள்ளது. தந்தை பெரியார், அம்பேத்கர் கூறியதை தான் சட்ட மசோதா மூலம் தமிழக முதல்வர் செய்திருக்கிறார். இது ஏன் ஆளுநருக்குப் புரியவில்லை. நீட் போலி மாணவர்களை உருவாக்குகிறது. தனியார் பயிற்சி நிறுவனஙள் கோடி கோடியாக சம்பாதிக்க வழிவகுத்துள்ளது. அந்தத் தேர்வை எதிர்க்கும் நீட் விலக்கு மசோதாவை காங்கிரஸ் முழுமையாக ஆதரிக்கிறது" என்றார்.

முன்னதாக, "எந்த ஒரு சட்டமும், ஏதாவது ஒரு ஒன்றிய அரசின் சட்டத்திற்கு மாறாக இருந்தால் அதற்கு அரசியல் சட்ட அமைப்பு 254(2)ன் கீழ் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு. சட்டமன்றத்தால் சட்டமே இயற்றக்கூடாது என்று ஒரு உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டுவது, அரசியல் சட்ட அமைப்பின் அடிப்படை கட்டமைப்பையே கேள்விக்குறியாக்கும்" என்று சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். அவரது முழு உரையை வாசிக்க > ஆளுநர் செய்தது அரசியல் சட்ட அமைப்பின் அடிப்படை கட்டமைப்பையே கேள்விக்குறியாக்கும்: பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE