கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி பெறப்பட்டதா?- தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் 

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி பெறப்பட்டதா? என மத்திய தொல்லியல் துறைக்கும், தமிழக இந்துசமய அறநிலையத் துறைக்கும் விளக்கம் கேட்டு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. யுனெஸ்கோவால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட இக்கோயிலில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரி, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகாவில் டி.மாங்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலகுரு என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

வழக்கறிஞர் பாலகுரு தனது மனுவில் கூறியுள்ளதாவது: தொல்லியல் துறை சார்பில் இந்த கோயிலில் மூன்று கோடி ரூபாய் செலவில் புத்தக நிலையம், உணவகம், கழிப்பறைகள் என அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாதுகாக்கப்பட்ட கோயிலில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள சட்டப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதியில்லாமல் கட்டுமானங்கள் மேற்கொள்வது குற்றம் ஆகும்.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்வது குறித்து தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், அதற்கு தொல்லியல் துறை எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே, ஆன்மிக நடவடிக்கையாக இல்லாமல், வர்த்தக நடவடிக்கையான இந்த வசதிகளை கோயிலுக்கு வெளியில் செய்து கொடுக்கலாம்.

தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கை வேலியே பயிரை மேய்வதைப் போன்றது என்பதால், கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கவேண்டும். புதிய கட்டுமானங்களை அப்புறப்படுத்தி, பழைய நிலைக்கு மீட்டெடுக்க உத்தரவிட வேண்டும்.'' இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, ''கட்டுமானங்கள் புராதன சின்னத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன, கட்டுமானங்களுக்கு அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும்'' என்று மத்திய தொல்லியல் துறைக்கும், தமிழக இந்து சமய அறநிலைய துறைக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்