கோயில் நிலங்கள் முறைகேடு; அதிகாரிகளை பொறுப்பாக்கும் கொள்கை மாற வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கோயில் நிலங்களில் நடக்கும் முறைகேடுகளுக்கு அதிகாரிகளை பொறுப்பாக்கும் வகையில் கொள்கை மாற்றம் கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அனுமந்தராய ஸ்வாமி கோவில் உள்ளிட்ட ஏழு கோயில்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நிலங்களில் அதிகாரிகளின் உதவியுடன் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகள் மூலம் நபர்கள் கொள்ளையடிக்கப்படுவதாகக் கூறி ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட இந்த நிலங்களை மீட்டு, கோயில்களின் செயல்பாட்டுக்கு பயன்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்கத் துவங்கியுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர், ஆய்வுக் கூட்டம் நடத்தியதாகவும், சட்டவிரோத குவாரிகளுக்கு கனிமவளத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கோயில் நிலங்களில் நடக்கும் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதி, சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை தடுக்கவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்ற மற்றும் சிவில் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அரசுத் துறைகளுக்கு உத்தரவிட்டார்.

கோயில் நிலங்களில் சட்டவிரோத குவாரி நடக்கும் விவகாரத்தில் அரசு ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையும், குற்ற நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்ட நீதிபதி, சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கவும், கண்காணிக்கவும் அரசுத்துறைகளுக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தார்.

மேலும், உன்னதமான ஆன்மாக்கள், கோயில்களுக்காகவும், பக்தர்களுக்காகவும் சொத்துக்களை தானமாக வழங்கியுள்ளதாகவும், அவற்றை பாதுகாக்க வேண்டிய கடமை கோயில் நிர்வாகத்துக்கு உள்ளதாகவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

கோயில் சொத்துக்களை முறையாக பராமரிக்க தவறும் அதிகாரிகளை, இந்த குறைபாடுகளுக்கு பொறுப்பாக்க வேண்டும் எனவும், கோயில் சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படாததால், அவை கொள்ளையடிக்கப்படுவதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, தற்போது இந்து சமய அறநிலையத் துறை சொத்துக்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும், அது போதுமானதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

கோயில் சொத்துக்களை மீட்கும் விஷயத்தில் அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்திய நீதிபதி, தனி குழு நியமித்து திறமையாகவும், விரைவாகவும் இச்சொத்துக்கள் மீட்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அதிகளவில் முறைகேடுகளை அனுமதிப்பதன் மூலம் அரசுத் துறை தனது கடமையை தவறிவிட்டதால், அரசுத்துறை அதிகாரிகளை பொறுப்பாக்கும் வகையில் கொள்கை மாற்றம் கொண்டு வர வேண்டும் எனவும், சொத்துக்களை மீட்பதுடன், வருவாய் இழப்பையும் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்