நீட் தேர்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் ஆண்டுக்கு 400 மாணவர்கள் பயனடைகின்றனர்: ஓ.பன்னீர்செல்வம்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை அதிமுக அரசு வழங்கியதன்
காரணமாக, ஆண்டிற்கு கிட்டத்தட்ட 400 ஏழை, எளிய மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: "நீட் தேர்வு குறித்து அனைத்திந்திய அதிமுக மீதும், என் மீதும் குற்றம்சாட்டி நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை விட்டிருப்பதைப் பார்த்தால் "எவ்வளவு பெரிய பொய்யானாலும் திரும்பத்திரும்ப சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் நம்பத் தொடங்கி விடுவார்கள்" என்ற கோயபெல்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் பேசுகிறாரோ என்ற எண்ணம் தான் மக்கள் மத்தியில் தோன்றுகிறது.

திமுகவின் இந்தப் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டிய கடமை அதிமுகவுக்கு உண்டு.

இந்திய மருத்துவக் குழுவால் வெளியிடப்பட்ட 21-12-2010 நாளைய அறிவிக்கை எண். MCI-31(1)/2010-Med/49068, 27-12-2010 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின் முதல் பத்தியிலேயே இளநிலை மருத்துவப் படிப்பிற்க்கான ஒழுங்கு நெறிமுறைகள் மத்திய அரசின் ஒப்புதலோடு இந்திய மருத்துவக் கழகம் வகுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, இந்திய மருத்துவக் குழுவால் வெளியிடப்பட்ட 21-12-2010 நாளைய அறிவிக்கை எண் MCI-18(1)/2010-Med/49070,27-12-2010 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின் முதல் பத்தியிலேயே முதுநிலை மருத்துவப் படிப்பிற்க்கான ஒழுங்கு நெறிமுறைகள் மத்திய அரசின் ஒப்புதலோடு இந்திய மருத்துவக் கழகம் வகுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 2010 ஆம் ஆண்டு திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசின் ஒப்புதலோடு வெளியிடப்பட்ட அறிக்கைகளில்தான் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility-cum-Entrancetest) என்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அப்பொழுது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்தஎஸ். காந்திசெல்வன் .

திமுக ஆட்சியில் இருந்தவரை நீட் தமிழகத்தில் இல்லை என்று கூறியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன் அவர்கள். 2010 ஆம் ஆண்டு டிசம்பரில் நீட்டுக்கு கையெழுத்து போட்ட திமுக, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில், ஐந்தே மாதத்தில் ஆட்சியையே இழந்துவிட்டது. பிறகு எப்படி திமுகவின் ஆட்சிக் காலத்தில் நீட் வரும். எனவே, மு. கருணாநிதி முதல்வராக இருந்தபோது நீட் தடுத்து நிறுத்தப்பட்டது என்ற துரைமுருகனின் வாதமே வடிகட்டின பொய் என்பதை இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஒருவேளை, 2011 சட்டமன்றத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று தெரிந்துகொண்டுதான் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இதுபோன்ற ஏழை, எளிய மக்கள் விரோத நுழைவுத் தேர்வுக்கு திமுக ஆதரவு அளித்ததோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.

இதனைத் தொடர்ந்து, இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வின் மூலம்தான் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று இந்திய மருத்துவக் கழகம் தனது 26-04-2012 நாளிட்டக் கடித எண். MCI-154(3)/2012-Estt. 103270 to 103410 மூலம் அனைத்து மாநில சுகாதாரச் செயலாளர்களுக்கும் தெரிவித்தது. இந்த சமயத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சியில் இல்லை. அதே சமயத்தில் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்துக் கொண்டிருந்தது. மத்திய அரசின் இந்தச் செயலை எதிர்த்து அப்போதைய தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா குரல் கொடுத்தார். வேறு சில மாநிலங்களும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனையடுத்து, மத்திய அரசு நீட் தேர்வை தள்ளி வைத்தது. ஆனால், அடுத்த ஆண்டிற்கான தேர்வினை 05-05-2013 அன்று அப்போதைய மத்திய அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 115 மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசால் பிறப்பிக்கப்பட்ட, திமுக-வைச் சார்ந்த அப்போதைய மத்திய இணை அமைச்சர் எஸ்.காந்தி செல்வனால் ஒப்புதல் அளிக்கப்பட்ட நீட் தேர்விற்கு வழிவகுக்கும் MCI-31(1)/2010-Med/49068 மற்றும் MCI-18(1)/2010-Med/49070 இரண்டு அறிவிக்கைகளை ரத்து செய்து 18-07-2013 அன்று தீர்ப்பளித்தது. நீட் தேர்வு குறித்த 2010ஆம் ஆண்டு அறிக்கைகளில் தான் திமுகவிற்கு பங்கு இருக்கிறதே தவிர, அதனை ரத்து செய்து 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் திமுகவின் பங்கு இல்லை என்பதுதான் யதார்த்தம்.

உண்மை நிலை இவ்வாறிருக்க, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு திமுக ஆதரவளித்த காலகட்டத்தில்தான் திமுக ஆட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு தடை வாங்கியது என்றும், அந்த வழக்குதான் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றதாகவும் துரைமுருகன் கூறுகிறார். இதில் கற்பனை வளம் இருக்கிறதே தவிர உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால், 2011-12 ஆம் கல்வி ஆண்டின்போது தி.மு.க. ஆட்சியிலேயே இல்லை. 2013 ஆம் ஆண்டைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்பது 115 தனியார் கல்லூரிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதானது. துரைமுருகன் கூற்று சரி என்று வைத்துக் கொண்டாலும், திமுகவே சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டு, அதை எதிர்த்து திமுகவே வழக்கு தொடுப்பது போல் உள்ளது. என்னுடைய நினைவிற்கு எட்டிய வரையில், 2010 ஆம் ஆண்டு நீட் தேர்விற்கு ஆதரவு தெரிவித்த திமுக, தமிழகத்தில் ஆட்சி பறிபோன பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பின், 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ஆம் நாள் நீட் குறித்த கருத்தைத் தெரிவித்தது.

அப்போதைய திமுக தலைவர் வெளியிட்ட அறிக்கையில், "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்றும், மருத்துவப் படிப்பிற்கு மத்திய அரசு நீட் தேர்வு நடத்தப்படுவதாக தகவல்கள் வருகின்றன என்றும், இதனை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென்றும்" கூறப்பட்டு இருக்கிறது. மத்திய அரசில் இருந்து கொண்டு தகவல் வருவதாக அறிக்கை வெளியிடுவதிலிருந்தே திமுக எந்த அளவிற்கு 'நீட் தேர்வு ரத்து' என்ற பிரச்சனையில் அக்கறையில்லாமல் இருந்து இருக்கிறது என்பது தெளிவாகிறது. அதாவது, 2010 ஆம் ஆண்டு நீட் தேர்விற்கு ஆதரவாக கையெழுத்திட்டுவிட்டு, 2012 ஆம் ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முரசொலியில் எழுதுகிறார். என்ன அக்கறை! என்ன உறுதிப்பாடு! இதிலிருந்து 'பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்' என்ற அடிப்படையில் திமுக செயல்பட்டு இருப்பது தெளிவாகிறது.

அதிமுகவைப் பொறுத்த வரையில், உளப்பூர்வமாக, மனசாட்சியுடன் ஏழை, எளிய கிராம மாணவ மாணவியருக்காக, அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்காக நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டுமென்று பாடுபட்டது. நாங்கள் மத்திய அரசில் அங்கம் வகிக்காத நிலையிலும், ஏழை, எளிய மாணவர்களுக்கு மாநில அரசால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை வழங்கினோம்.

இதன் காரணமாக, ஆண்டிற்கு கிட்டத்தட்ட 400 ஏழை, எளிய மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். திமுக செய்த தவறினால் ஏற்பட்ட காயத்திற்கு ஓரளவு மருந்து கொடுத்து குணப்படுத்திய அரசு அதிமுக அரசு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வு ரத்து என்பதற்கு தொடர்ந்து அதிமுக குரல் கொடுக்கும், கொடுத்துக் கொண்டேயிருக்கும்.

மத்திய அரசுக்கு கைகட்டி நின்று அதிமுக ஆட்சி நடத்தியதாக துரைமுருகன் கூறி இருக்கிறார். யாருக்கும் கைகட்டி நிற்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. அதே சமயத்தில் தமிழகத்தின் நலனுக்காக, தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசிடம் ஒத்துழைப்பு கொடுக்கத் தயங்கமாட்டோம். 'காரியம் பெரிதா, வீரியம் பெரிதா' என்று கேட்டால் எங்களைப் பொறுத்தவரை காரியம்தான் பெரிது. அதனால்தான் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என பல நல்ல திட்டங்கள் தமிழகத்துக்கு கிடைத்தன என்பதை துரைமுருகன் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்டபோது, திமுக என்ன செய்து கொண்டிருந்தது? அதற்குக் பெயர் என்ன? என்பதை துரைமுருகன் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

செய்த தவற்றை ஒத்துக்கொண்டு அதற்கு பரிகாரம் செய்ய நடவடிக்கை எடுக்காமல், நல்லத் திட்டங்களை தமிழகத்துக்கு அளித்த அதிமுகவை குறை சொல்வது என்பது கடும் கண்டனத்திற்குரியது. 'கருமமே கண்ணாயினார்' என்பதன் அடிப்படையில், நீட் தேர்வை ரத்து செய்ய முனைப்புடன் நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்