U-19 உலகக் கோப்பை வெற்றி: இந்திய கிரிக்கெட் அணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: 19 வயதுக்குட்பட்டோருக்கான ICC கிரிக்கெட் உலகக் கோப்பையை 5வது முறையாக வென்றுள்ள இந்திய அணிக்கும், ஆயிரமாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் விளையாடும் இந்திய சீனியர் அணிக்கும் முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: "19 வயதுக்குட்பட்டோருக்கான ICC கிரிக்கெட் உலகக் கோப்பையை 5வது முறையாக வென்றுள்ள யாஷ்துல் தலைமையிலான இந்திய அணியின் சிறப்பான கூட்டு முயற்சிக்கு வாழ்த்துகள். மேலும், முதலாவது அணியாக ஆயிரமாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் விளையாடும் இந்திய சீனியர் ஆண்கள் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக, மேற்கிந்திய தீவுகளில் நடந்த யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. ஆல்ரவுண்டர் ராஜ் பாவாவின் அட்டகாசமான ஆட்டத்தின் துணையுடன் இந்திய இளம்படை இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி மகுடம் சூடியது.

இந்நிலையில் அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது பிசிசிஐ. அதேபோல், வீரர்கள் அல்லாத துணை ஊழியர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE