பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவு: தமிழக முதல்வர் , அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் புகழஞ்சலி

By செய்திப்பிரிவு

சென்னை: மறைந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழசை சவுந்தரராஜன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாடலாசிரியர் வைரமுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரும் தங்களது புகழஞ்சலியை உரித்தாக்கி வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் : "இந்தியாவின் இசைக் குயில் லதா மங்கேஷ்கர் அவர்கள் மறைந்த செய்தியால் மிகுந்த வேதனையடைகிறேன். எண்பதாண்டுகாலம் பரந்து விரிந்ததான அவரது இசை வாழ்வில் தனது தேனையொத்த குரலால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் அவர் வருடிச் சென்றுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இசை ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழசை சவுந்தரராஜன் : "இந்தியாவின் "இசைக்குயில்" திருமதி.லதா மங்கேஷ்கர் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். தனது இனிய குரல் வளத்தால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இசை ரசிகர்களின் அனைவரின் நெஞ்சத்திலும் நிறைந்திருந்தார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" எனக் கூறியுள்ளார்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: "இசை என்றாலே புகழ். அந்த இசைத்துறையில் புகழ்க்கொடி நாட்டி, இன்று நம்மை எல்லாம் கண்ணீரில் ஆழ்த்தி விடைபெற்றுள்ளார் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்.அவருடைய பாடல்கள், அவரது குரலில் கேட்கும்போது, அது நம்மை எங்கோ இழுத்துச் செல்லும். கோவா மாநிலத்தில் மங்கேஷ்கர் கிராமத்தில் பிறந்த லதா, 1942 ஆம் ஆண்டு, 13 ஆவது வயதில் பாடத் தொடங்கினார். இசைதான் அவரது மூச்சு. ஏறத்தாழ 80 ஆண்டுகளாகப் பாடினார் பாடினார் பாடிக்கொண்டே இருந்தார். இசைக்கு எல்லைகள் இல்லை, எந்தத் தடையும் இல்லை. எனவே, இந்தியாவின் அத்தனை மொழித் திரைப்படங்களிலும் அவர் பாடினார். அந்தக் காலத்தில், வானொலிகளில் தமிழ்நாடு முழுமையும் அவரது பாடல்கள் ஒலித்தன.

நான் ஒரு இசை ரசிகன். எத்தனையோ சோதனைகளுக்கு இடையில் எனக்கு ஆறுதலாக இருப்பது இசைதான். மாணவப் பருவத்தில் சென்னையில் எத்தனையோ ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்த்து இருக்கின்றேன். இந்திப் படங்களையும் பார்த்து இருக்கின்றேன். எனக்கு அந்த மொழி புரியாவிட்டாலும், லதா மங்கேஷ்கரின் பாடல்களும், அவரது இனிய குரலும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். உயிரோட்டமான குரல் அது. உணர்ச்சிகளின் கலவையாக ஒலித்தது.

அவர் தமிழிலும் பாடினார். வானரதம் திரைப்படத்தில், எந்தன் கண்ணாளன் கடல் நோக்கிப் போகின்றான் என்று அவர் பாடிய பாடலை இன்றைக்கும் யூடியூப் காணொளியில் பார்க்க முடிகின்றது.

அவர் பெற்ற விருதுகளைக் கணக்கிட முடியாது. இந்தியாவின் மிக உயரிய பாரத் ரத்னா விருதையும் பெற்றவர். ஆனால், அந்த விருதுகளை விட, தன் குரலால் ஏழை எளிய அடித்தட்டு மக்களுக்கு அவரது குரல் அளித்து வந்த ஆறுதல்தான் மிகப் பெரியது. அளவிட முடியாதது.அவரது குடும்பமே இசைக்குடும்பம்தான். அவரது தங்கை ஆஷாவும் புகழ் பெற்ற பாடகியாகத் திகழ்கின்றார்.

கானக்குயில் லதா மங்கேஷ்கர் அவர்கள் இன்று நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது இனிய குரல் அடங்கி விடாது. காற்றில், விண்வெளியில் கலந்து இருக்கின்ற அந்தக் குரல் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், அடுத்தடுத்த தலைமுறைகளையும் கவரும்.அவர்களது நெஞ்சங்களில் ஊடுருவிப் பாயும் என்பது திண்ணம்.திசை தெரியாத வாழ்க்கையில், இசைக்குயிலாக இடம் பிடித்து இருப்பவர் லதா மங்கேஷ்கர் ஆவார்.இசைக்குயில் லதா மங்கேஷ்கர் புகழ், ஏழிசையாய், இசைப்பயனாய், என்றென்றும் நிலைத்து இருக்கும்" எனக் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி: "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி தமது 92 வது வயதில் இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். ஏறத்தாழ 30 ஆயிரம் பாடல்களை 20 இந்திய மொழிகளில் பாடி கின்னஸ் சாதனை படைத்தவர். மதம், மொழி, இனம் ஜாதி எல்லைகளைக் கடந்து லதா மங்கேஷ்கர் பாடலை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. மெல்லிசை அரசி என அழைக்கப்பட்ட திருமதி லதா மங்கேஷ்கர் பாரத ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்று சாதனை படைத்தவர்.

இந்தி படங்களில் லதா மங்கேஷ்கர், முகமது ரபி ஆகியோர் இணைந்து பாடிய பாடல்களினால் பல திரைப்படங்கள் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளன. இந்தியாவின் பெருமையை தமது குரல் வளத்தால் உலக அரங்கில் உயர்த்திய லதா மங்கேஷ்கர் அவர்களது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இவரது மறைவால் இந்திய மக்கள் அனைவரும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். லதா மங்கேஷ்கர் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு, எண்ணில் அடங்கா ரசிகர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: "பிரபல பின்னணி பாடகர் பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். அவர் பாடிய காலத்தால் அழியாத பாடல்களின் வழியே என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். லதா மங்கேஷ்கரின் மறைவால் வாடும் உறவினர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து: " இந்தியாவின் இசைகுயில் பறந்துவிட்டது. இசை கிரீடத்தின் பாரத ரத்னா இன்று விழுந்துவிட்டது. லதா மங்கேஷ்கரின் பெருமை என்னவென்றால், தான் வாழ்ந்த காலத்தின் மீது தன்னுடைய இசை என்ற ஆதிக்கத்தை செலுத்தியது. அவர் பாடியது மேட்டுக்குடிக்கு மட்டுமல்ல, ரோட்டுக் குடிக்கும்.

உழைக்கும் மக்கள் அவர் பாடிய பாடலைக் கேட்டு தங்கள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்கிறார்கள், காதலை வளர்த்திருக்கிறார்கள், தங்கள் வியர்வையை சுண்டி எறிந்திருக்கிறார்கள், தங்கள் துக்கத்தை மறந்திருக்கிறார்கள், மகிழ்ச்சியில் ஆடியிருக்கிறார்கள். இந்தியர்களின் வாழ்வோடு தன்னை பிணைத்துக் கொண்ட அந்த மாபெரும் இசையரசியின் புகழ் வாழ்க, அவர் பாடல்கள் வெல்க" என்று ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்: "அன்பும், மரியாதையும், பிரார்த்தனகளும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இப்படியாக அரசியல் தலைவர்கள் பலரும், திரைப் பிரபலங்களும் தங்களின் புகழஞ்சலியை உரித்தாக்கி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்