நீட் விலக்கு மசோதா | அதிமுக, பாஜக புறக்கணிப்புக்கு காரணம், குற்ற உணர்வுதான்: திமுக காட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: ”நீட் தேர்வை நாம்தானே திணித்தோம், தமிழக மாணவர்களை நீட் தேர்வை எழுத வைத்தது நாம்தானே என்ற குற்றம் உள்ள மனசு குறுகுறுப்பதால்தான் அதிமுகவும், பாஜகவும் இணைந்து ஆளுநர் நீட் மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை சொல்ல வர மறுக்கிறது" என்று நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசால் 2010ல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோதே மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவைத் திமுக விலக்கி கொண்டிருந்தால் இன்று நீட் தேர்வு வந்திருக்காது என்று அதிமுக அரசின் 10 ஆண்டு தோல்வியை மறைக்க கூவத்தூர் கொண்டாட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற அதிமுக ஆட்சியில் நீட் தேர்வினைச் செயல்படுத்தி மாணவர்களின் தற்கொலைக்குக் காரணமாக இருந்த அதிமுக ஆட்சியில் துணை முதல்வர் என்ற பதவி சுகத்தை அனுபவித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மீண்டும், மீண்டும் பொய்யைச் சொல்லி பொதுமக்களை ஏமாற்ற துடிக்கும் பன்னீர்செல்வத்தின் செயல் கண்டனத்திற்குரியது.

திமுக ஆட்சி நடைபெற்றபோதுதான் அதுவும் கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தடுத்து நிறுத்தப்பட்டது. தமிழத்தில் திமுக ஆட்சி இருந்தவரை நீட் நுழையவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு திமுக ஆதரவளித்த காலகட்டத்தில்தான் திமுக ஆட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீட் தேர்விற்குத் தடை வாங்கியது. அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கும் சென்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் 18.7.2013 அன்று நீட் தேர்வு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து நீட் தேர்வே ஒழிக்கப்பட்டது. ஆகவே நீட் தேர்வுப் பிரச்சினை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலேயே முடிவுக்கு வந்து நீட் தேர்வு இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அன்றாட அரசியலை கவனிப்பதில் கோட்டை விட்டு ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்றிருந்த அதிமுக ஆட்சிக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை.

நீட் இனி இல்லை என்ற நிலையில்தான் அதிமுக ஆட்சிக்கு வந்தது. மத்தியில் பாஜகவும் ஆட்சிக்கு வந்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் ஓடோடிச் சென்று நீட் தேர்வு செல்லாது என்ற தீர்ப்பை எவ்வித வாதப் பிரதிவாதங்களும் இன்றி திரும்பப் பெற வைத்த ஆட்சி எது? ஓபிஎஸ் வக்காலத்து வாங்கும் இதே பாஜக ஆட்சிதான். நீட் தேர்வு கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் 11.04.2016 அன்று தீர்ப்பைப் பெற்றது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிதான் என்பதை ஏனோ இன்றைக்கு உள்ள சூழலில் மறந்து விட்டுப் பேசுகிறார் பன்னீர்செல்வம்.

அதுமட்டுமல்ல இந்த நீட் தேர்வினை அமல்படுத்த அவசரச் சட்டத்தை 24.05.2016 அன்று கொண்டு வந்த ஆட்சி எது? அதுவும் பாஜக ஆட்சிதான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அதிமுக ஆட்சியில் மசோதா நிறைவேற்றப்பட்டு அந்த மசோதா நிராகரிக்கப்பட்டதா அல்லது ஏற்கப்பட்டதா என்பதே கூட தெரியாமல் 27 மாதங்கள் மூட்டையில் போட்டு கட்டி வைத்திருந்தது யார்? அதுவும் பாஜக ஆட்சி. ஒரு மசோதா குடியரசுத் தலைவரால் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தையே மறைத்த ஆட்சி இங்கு இருந்த அலங்கோல அதிமுக ஆட்சி. அதில்தான் தர்மயுத்தம் என்ற எதையோ நடத்தி துணை முதலமைச்சராக இருந்தார் ஓ.பன்னீர்செல்வம்.

குடியரசுத் தலைவரால் மசோதா திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால் அதை மீண்டும் நிறைவேற்றும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு உண்டு. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் என்ன காரணத்திற்கு நிராகரித்தீர்கள் என விளக்கம் கேட்டிருக்கிறோம் என அதிமுகவும் - பாஜகவும் சேர்ந்து நடத்திய நாடகம் எந்த ஆட்சி? நடந்து முடிந்த அதிமுக ஆட்சிதான்! தற்போது உள்ள மத்திய பாஜக அரசுதான்!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிமுகம் செய்ய நினைத்த நீட் தேர்வை நிறுத்திவைத்து ஆட்சியை விட்டுச் செல்வதற்குள் நீட் தேர்வை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வாயிலாகவே ரத்து செய்த ஆட்சிதான் இங்கு இருந்த அன்றைய திமுக ஆட்சி. மத்தியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி என்பதை பன்னீர்செல்வத்திற்கும் இந்த அடிப்படை விவரம் கூட தெரியாமல் கடிதம் எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழக மக்களின் மீது தமிழக சட்டமன்றத்தின் இறையாண்மை மீது மாணவச் சமுதாயத்தின் மீது அக்கறை இருந்திருந்தால் இன்றைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் துடிதுடித்து அதிமுக பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால் 27 மாதங்கள் மசோதா என்ன ஆனது என்றே கவலைப்படாமல் ஆட்சி நடத்திய அதிமுகவிற்கு 142 நாட்களுக்குள் திமுக கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இன்றைய அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் சூழல் உருவாகியிருப்பதை உணர முடியாதுதான். கைகட்டி நின்று ஆட்சி நடத்தியது அதிமுக. ஆனால் திமுகவோ மாநில உரிமைக்காக மாநிலச் சட்டமன்றத்தின் இறையான்மையைக் காக்க போராடுகிறது; தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கும்.

நீட் தேர்வை நாம்தானே திணித்தோம், தமிழக மாணவர்களை நீட் தேர்வை எழுத வைத்தது நாம்தானே என்ற குற்றம் உள்ள மனசு குறுகுறுப்பதால்தான் அதிமுகவும், பாஜகவும் இணைந்து ஆளுநர் நீட் மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை சொல்ல வர மறுக்கிறது. நீட் தேர்வை எழுத வைத்து அதற்கான நீட் மசோதாவை கிடப்பில் போட்டு அப்போது அதிமுக - பாஜக போட்ட நாடகத்தை இன்று எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அதிமுகவும் மத்திய அரசாக உள்ள பாஜகவும் கூச்சமின்றித் தொடருகின்றன. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் புத்திசாலிகள்! நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - பாஜக நாடகத்திற்கு தமிழ்நாட்டு மக்களும், மாணவர் சமுதாயமும் இணைந்து தக்க பதிலடி கொடுக்கும்.

இது மாணவர்கள் கிளர்ந்தெழுந்து அறவழிப் போராட்டம் நடத்தி பல உயிர்த் தியாகங்களைச் செய்து தமிழ் மொழியை காப்பாற்றிய மண் என்பதை பன்னீர்செல்வத்திற்கு நினைவூட்ட விரும்புகிறேன்" என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்